ரயில்வே மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கிய சிறுமி பத்திரமாக மீட்பு

0
96

ரயில் நிலைய நடைமேடையில் உள்ள மின் கம்பத்தின் இடையில் தலை சிக்கித் தவித்த 5 வயது சிறுமி, ஒன்றரை மணிநேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் சிறுமுகி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு. இவருடைய மனைவி மாலதி, தனது 5 வயது மகள் கீர்த்தனாவுடன் திருப்பதி செல்வதற்காக திருத்தணி ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.

அப்போது, நடைமேடையில் பயணிகள் அமருவதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கையில் சிறுமி கீர்த்தனா விளையாடிக் கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, அருகில் உள்ள மின் கம்பங்களின் இடையில் கீர்த்தனாவின் தலை சிக்கிக் கொண்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாலதி, சிறுமியின் தலையை வெளியே எடுக்க போராடினார்.

ஆனால், எவ்வளவு முயன்றும் அவரால் தலையை எடுக்க முடியாததால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். இதுகுறித்து பயணிகள் அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள், ஒன்றரை மணி நேரம் போராடி, வெல்டிங் இயந்திரம் மூலம் கம்பத்தை அகற்றி சிறுமியை காயமின்றி பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால், திருத்தணி ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.