திருட்டு கும்பலிடம் இருந்து 80 வாகனங்கள் மீட்பு

0
106

வாகனங்களை திருடி வெளிமாநிலங்களில் விற்று வந்த 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 வாகனங்கள் மீட்கப்பட்டது.

தானே ராபோடி பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந் தேதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு வேன் ஒன்று திருட்டு போனது. இதுபற்றி அதன் உரிமையாளர் ராபோடி போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சரக்கு வேனில் இருந்த ஜி.பி.எஸ். தொழில் நுட்ப உதவியுடன் தேடி வந்தனர். அந்த வேன் புனேயில் உள்ள பண்ணை வீட்டில் நிற்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று வேனை வைத்திருந்தவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் மும்பையை சேர்ந்த வினித் ரத்தன், சந்தீப் ஆகியோரிடம் வேனை வாங்கியதாக தெரிவித்தார்.

இதன்பேரில் போலீசார் அந்த 2 பேரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மும்பை உள்பட புனே, நாசிக், நவிமும்பை போன்ற இடங்களில் வாகனங்களை திருடி போலி பதிவெண் மற்றும் சான்றிதழ் தயாரித்து அந்த வாகனங்களை ராஜஸ்தான், கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் விற்றது தெரியவந்தது. இந்த வாகன திருட்டில் வெளிமாநிலங்களை சேர்ந்த 7 பேருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், இந்த வாகன திருட்டில் தொடர்புடைய கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்தவர்களான சாதிக் மேகபூப், அல்டாப் அப்துல்கானி, ராஜஸ்தானை சேர்ந்தவர்களான மங்கிலால், ராம்பிரசாத், உத்தரபிரதேசத்தின் பிரதாப்கட்டை சேர்ந்தவர்களான ஜாவேத் முக்தார், அல்இக்பால், முகமது யூசுப் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கார், சரக்குவேன் உள்ளிட்ட 80 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 40 லட்சம் ஆகும். இதன் மூலம் மும்பையில் 14, தானேயில் 38 , நவிமும்பையில் 14, பால்கரில் 12, ராய்காட்டில் 8, புனேயில் 10, நாசிக்கில் 1, அகமது நகரில் 1, குஜராத்தில் 4 உள்பட மொத்தம் 105 வாகன திருட்டு வழக்குகள் முடிவுக்கு வந்தது. இக்கும்பல் கடந்த 8 வருடமாக வாகனங்களை திருடி விற்று வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து 9 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டு அவர்களை வருகிற 14-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.