`அம்மா, நண்பன் பிறந்தநாளுக்குப் போயிட்டுவர்றேன்!’ – மகனை கழுத்தறுத்துக் கொன்ற கடத்தல் கும்பல்

0
177

கும்பகோணம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் கடத்தப்பட்டு ரூ.5 லட்சம் கொடுத்தால் விடுவிப்பதாகக் கடத்தல்காரர்கள் பேரம் பேசிய நிலையில் மாணவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

872_16154மாணவர் மும்தசர்

கும்பகோணம் ஆடுதுறை அருகே ஆவணியாபுரத்தைச் சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரின் மகன் மும்தசர் இவர் மயிலாடுதுறை ஏ.வி.சி பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார்.

இவரின் தந்தை துபாயில் வேலை பார்த்து வருகிறார். தாயார் மும்தாஜ் பேகத்துடன் வசித்து வந்த மும்தசர் நேற்று மாலை 6.30 மணி அளவில் திருமங்கலக்குடியில் உள்ள தமது அக்கா வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

அக்கா வீட்டிலிருந்து தன் நண்பர் பிறந்தநாள் விழாவுக்குச் செல்வதாகப் போன் மூலம் தன் தாயாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்தசரை கடத்தியுள்ளோம்.

கோயம்புத்தூர் அழைத்துச் செல்கிறோம். ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவிப்போம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் பதற்றம் அடைந்த தாய் மற்றும் அவரின் உறவினர்கள் திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நேற்று இரவு குவிந்தனர்.

இதுகுறித்து மும்தசரின் தாய் மாமாவான ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் நசீர் முகம்மது கொடுத்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் டி.எஸ்.பி ராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டார்.

மாணவர் மும்தசர்

முதற்கட்ட விசாரணையில் இரவு 8.15 மணி அளவில் மும்தசர் போனிலிருந்து வந்த அழைப்பு திருப்புவனம் பகுதியிலிருந்து பேசப்பட்டது என்பதை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிந்தனர்.

தொடர்ந்து அந்த செல்போனில் தொடர்புகொள்ள முயன்றபோது அது ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. இதனால் மேலும் உறவினர்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று காலை திருப்புவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் மாணவர் மும்தசர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதை அறிந்த உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மும்தசர் உடலைப் பார்த்து கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது.

மாணவர் மும்தசர் உடல் பிரேத பரிசோதனைக்காகக் கும்பகோணம் மாவட்டத் தலைமை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

மாணவர் சென்ற ஸ்கூட்டர் எங்கு உள்ளது என்பது குறித்து தெரியவரவில்லை. இச்சம்பவம் தொடர்பாக தஞ்சை எஸ்.பி செந்தில்குமார் நேரில் விசாரணை நடத்தினார்.

874_16150மாணவர் மும்தசர்

பணம் கேட்டு கல்லூரி மாணவர் கடத்தப்பட்டது உண்மையா, இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது யார், அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகத்தின் பேரில் 4 பேரைப் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.