தனது இறுதிச்சடங்குக்கு தானே பொருட்களை வாங்கி வைத்துவிட்டு தலித் விவசாயி தற்கொலை

0
363

தனது இறுதிச்சடங்குக்கு தானே பொருட்களை வாங்கி வைத்துவிட்டு தலித் விவசாயி தற்கொலை

“வீட்டுக்குத் தேவையான சாமான்கள் வாங்குவதற்காக அருகில் உள்ள நகரத்துக்குச் சென்றவர் வீடு திரும்பவே இல்லை.

இருந்தபோதிலும், வாங்கிய வளையல்கள், வெள்ளைத் துணி, மஞ்சள், குங்குமம், பூமாலை என அவர் வாங்கியவை கிராமத்துக்கு வந்து சேர்ந்தன.

துரதிருஷ்டவசமாக தனது இறுதிச் சடங்குக்காக அவற்றை வாங்கியிருந்ததால், எதுவுமே வீட்டு உபயோகத்துக்கானவையாக இருக்கவில்லை” இந்த வார்த்தைகளைக் கூறும்போது மாதவய்யாவின் தொண்டை துக்கத்தில் அடைத்தது.

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்த்பூர் மாவட்டம் கம்பதுரு மண்டல் பகுதியில் ராம்புரம் கிராமத்தைச் சேர்ந்த மாதவய்யாவின் தந்தை மல்லப்பா ஒரு விவசாயி.

தனது இறுதிச் சடங்கு நடத்துவதற்குத் தேவையான, எல்லா பொருள்களுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தன் குடும்பத்தினருக்கு தனது நினைவாக இருக்கட்டுமே என்று தன் புகைப்படத்தையும் லேமினேட் செய்து வைத்திருந்தார்.

பயிர் விளைச்சலில் இழப்பு ஏற்பட்டதால், விவசாயக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் 2018 ஆகஸ்ட் மாதம் மல்லப்பா தற்கொலை செய்து கொண்டார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இறந்த பிறகு தன்னுடைய இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருள்களை வாங்கும் சுமையை குடும்பத்தினருக்கு தரக்கூடாது என்பதற்காக, அதற்கு வேண்டிய பொருள்களை வாங்கி வைத்திருந்தார் என்றும் தெரிவித்தனர்.

தன் மனைவிக்கு வெள்ளைத் துணி, வளையல்களும், இறந்த பிறகு இறுதிச் சடங்கிற்குத் தேவைப்படும் பூ மாலையும் அருகில் உள்ள நகரில் வாங்கிக் கொண்டு பொழுது சாயும்போது கிராமத்துக்கு வந்திருக்கிறார்.

சாலையோரம் உள்ள தனது விவசாய நிலத்துக்கு அவர் சென்று, அனைத்துப் பொருள்களையும் தனது தந்தையின் சமாதி மீது வைத்து, கடிதமும் வைத்துள்ளார்.

தனக்கு கடன் கொடுத்தவர்களுக்கு யாருக்கெல்லாம் எவ்வளவு தர வேண்டும் என்பதை அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார். கடன் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

மல்லப்பாவுக்கு எழுதப் படிக்கத் தெரியாது, எனவே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரிடம் அதை எழுதி வாங்கி, இந்தப் பொருள்களுடன் தனது பையில் வைத்திருந்தார்.
_104915223_ae3d3a7a-784c-47e4-8d2b-1b0d319ad838

தன் விளைநிலத்துக்குச் செல்லும் போதெல்லாம் ஓய்வெடுக்கும் குடிசைக்குச் சென்று பூச்சி மருந்து குடித்துவிட்டார்.

மறுநாள் காலை கால்நடைகளை மேய்ப்பதற்காக மல்லப்பாவின் மகன் மாதவய்யா நிலத்துக்குக் கொண்டு சென்றபோது, தன்னுடைய தாத்தாவின் சமாதி மீது வைத்திருந்த பொருள்களைக் கவனித்திருக்கிறார்.

மாலை, வெள்ளைத் துணி, தந்தையின் லேமினேட் செய்த புகைப்படம் ஆகியவை சமாதி மீது இருந்ததால் சந்தேகம் அடைந்து சுற்றிலும் தேடியபோது, ஒரு கட்டில் மீது ஒருவர் படுத்திருப்பதைக் கவனித்தார்.

“ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்து அந்தக் குடிசையை நோக்கி ஓடினேன். அது எனது தந்தை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்” என்று பிபிசி செய்தியாளரிடம் கண்ணீருடன் கூறினார் மாதவய்யா.

வறட்சி காரணமாகவும், பயிர்கள் விளைச்சல் தொடர்ந்து பாதிக்கப்பட்டதாலும் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போன ஒரு விவசாயி உடைய கதை இது.

750 கிலோ வெங்காயம் 1064 ரூபாய்: விரக்தியில் பணத்தை மோதிக்கு அனுப்பிய விவசாயி
‘தற்கொலை செய்துகொண்ட விவசாயி பிள்ளைகள் போல தென்னையை வளர்த்தார்’

பிபிசி தெலுங்கு செய்திப் பிரிவு நிருபர் ஹிருதயா விஹாரி அந்தக் கிராமத்துக்குச் சென்று, தொடர் வறட்சியால் தற்கொலை செய்து கொண்ட விவசாயி குடும்பத்தினருடன் பேசினார்.

மல்லப்பா தற்கொலை செய்து கொண்ட நிலத்துக்கு நாங்கள் சென்றோம். அவருடைய கிராமத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலம் உள்ளது. கிராமத்துக்குப் பேருந்து வசதி எதுவும் கிடையாது. நிலத்தில் மல்லப்பாவின் மகன் மாதவய்யா எங்களை சந்தித்தார்.

அந்தப் பகுதியில் மழை இல்லாததால் நிலக்கடலை பயிர்கள் காய்ந்து கிடந்ததையும், அப்போது கால்நடைகளுக்கு தீவனமாக பயிர்கள் மாறி இருந்ததையும் நாங்கள் பார்க்க முடிந்தது.

குடும்பத்தினரின் இருண்ட நாளைக் குறிப்பிடும் வகையில் வெள்ளை நிற பெயிண்ட் அடித்திருந்த மல்லப்பாவின் சமாதியை நாங்கள் கடந்து சென்றோம். தன்னுடைய தந்தையின் உயிர் பிரிந்த குடிசைக்கு எங்களை மல்லப்பாவின் மகன் அழைத்துச் சென்றார்.

_104915834_3ba5878b-2f6c-418d-8860-d8079f82fde6கிராமங்களில் வழக்கமாக உள்ளதைப் போல அவருடைய தந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது என்பதால், தனது தந்தைக்கு 60 வயது இருக்கும் என்று ஒரு யூகமாக மாதவய்யா கூறினார்.

மல்லப்பாவுக்கு மூன்று மகள்களும், இரண்டு மகன்களும் உள்ளனர். அவருடைய மூத்த மகன் விவசாயத் தோட்டத்தைப் பார்த்துக் கொள்கிறார்.

இளையவர் வேலை தேடி பெங்களூருக்குச் சென்றுவிட்டார். அவருடைய மூன்று மகள்களும் திருமணமாகி அருகில் உள்ள கிராமங்களில் வசிக்கின்றனர்.

அந்தக் குடும்பத்துக்கு அந்தக் கிராமத்தில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. மல்லப்பா வைத்துச் சென்ற கடிதத்தின்படி விவசாயத்துக்கு வாங்கிய வகையில், அவருக்கு வங்கிகளில் ரூ.1.12 லட்சம் கடன் உள்ளது. அதுதவிர வெளியில் வட்டிக்கு வாங்கிய கடன் ரூ.1.73 லட்சம் இருக்கிறது என்று அவருடைய மகன் தெரிவித்தார்.

“எங்களுக்கு 6 ஏக்கர் நிலம் உள்ளது. பாசனத்துக்காக நாங்கள் 4 ஆழ்துளைக் கிணறுகள் போட்டோம். அவற்றில் 3 போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கவில்லை.

மழை இல்லாத காரணத்தால் நான்காவது போர்வெல் மூலமாகவும் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை.

3 ஏக்கர் நிலத்தில் தக்காளி சாகுபடி செய்தோம். மீதி 3 ஏக்கரில் நிலக்கடலை விதைத்தோம்.

தக்காளி மூலமாக கடன்களைக் கட்டிவிடலாம் என்று நினைத்து, தக்காளி தோட்டத்துக்கு தண்ணீரை திருப்பிவிட்டோம். போதிய மழை இல்லாததால் தண்ணீர் இல்லாமல் நிலக்கடலை பயிர்கள் முழுமையாக நாசமாகிவிட்டன” என்று மாதவய்யா கூறினார்.

சந்தையில் தக்காளி விலை சரிந்து போனதால், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான பணம் அதில் கிடைக்காது என்ற நிலையில், என் தந்தையின் நம்பிக்கை தகர்ந்து போய்விட்டது.

ஆகஸ்ட் 9ஆம் தேதி காலையில், கடனுக்கான வட்டியைக் கட்டிவிட்டு வீட்டுக்குத் தேவையான பொருள்களையும், தக்காளி பயிருக்கு உரமும் வாங்கி வருவதாகக் கூறிவிட்டு கல்யாணதுர்கம் நகருக்குச் சென்றவர் வீட்டுக்குத் திரும்பாமலே போய்விட்டார் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

“தற்கொலை செய்வது என்று ஒரு வாரத்துக்கு முன்பே அவர் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. இருந்தபோதிலும், அவருடைய சிந்தனையையும், போக்கையும் எங்களில் யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது” என்று தந்தையின் கடைசி நாள்களை நினைவுகூறும் மாதவய்யா கூறும்போது மனம் உடைந்து அழுதார்.

மல்லப்பாவுக்கு ஒவ்வொரு மாதமும் முதலாவது வாரத்தில் ஓய்வூதியத்தைப் பெறுவார். தக்காளி விற்றதில் அவர் ரூ.1000 – ரூ.1500 வைத்திருந்தார்.

வீட்டுக்குத் தேவையான பொருள்களும் வாங்கியிருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினரிடம் தனது தந்தை காட்டிக் கொள்ளவே இல்லை என்றார் மாதவய்யா.

_104915835_9f291156-9fe9-463e-a6bb-68c222da46a1

கடனுக்காக மகளின் தங்க நகைகள்

நாங்கள் ராம்புரம் கிராமத்துக்குச் சென்றோம். ஆதி திராவிடர் காலனியில் குறுகலான தெருவில் ஒற்றை அறை கொண்ட மல்லப்பாவின் வீட்டுக்குச் சென்றோம்.

உடல்நலக் குறைவாலும், செவித்திறன் பாதிப்பாலும் சிரமப்பட்ட மல்லப்பாவின் தாயார் எங்களை சோகத்துடன் வரவேற்றார். மல்லப்பாவுக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.

“வங்கி மற்றும் தனியார் கடன்களைத் தவிர, பயிர் சாகுபடிக்கு கடன் வாங்குவதற்காக மகள்களின் நகைகளையும் அவர் அடகு வைத்திருந்தார்” என்று மல்லப்பாவின் மனைவி மாரெக்கா பி.பி.சி.-யிடம் தெரிவித்தார்.

விவசாயத்துக்காக அவர் தொடர்ந்து கடன்கள் வாங்கிக் கொண்டிருந்தார். இருந்தபோதிலும், மழை இல்லாத காரணத்தால் பயிர்கள் பாதிக்கப்பட்டன. இந்த ஆண்டு அறுவடையில் கடன்களை திருப்பிச் செலுத்திவிடலாம் என்று அவர் நினைத்திருந்தார். ஆனால் பயிர்கள் வீணாகப் போய்விட்டன என்று மாரெக்கா அழுதார்.

_104915836_069b2cc6-9eaf-4cb3-a95f-89c06ccab101

அன்றைய தினம் என்ன நடந்தது?
மல்லப்பாவுக்கு தனியாரிடம் ரூ.1.73 லட்சம் கடன் இருந்ததாக மாதவய்யா தெரிவித்தார். கடன் கொடுத்த தனியார் சிலர் , பணத்தைத் திருப்பிக் கேட்டு மல்லப்பாவை தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.

“பணத்தைத் தராவிட்டால் ஆட்களை அனுப்புவேன் என்று கடன் தந்த ஒருவர் மிரட்டினார்.

அப்படி நடந்தால் தனக்கு மானக்கேடாகிவிடும் என்று அவர் நினைத்தார். அந்த ஆளுக்கு ரூ.10,000 மட்டும்தான் தர வேண்டியுள்ளது என்று கடிதத்தில் எழுதி வைத்திருக்கிறார்” என்று அவருடைய மனைவி தெரிவித்தார்.

கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல காலையில் புறப்பட்ட போது சிலர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அவர்களிடம் அவர் ஏதோ சொல்லிவிட்டு, அன்றைக்கே நகருக்குச் சென்றார். ஆனால் திரும்பி வரவே இல்லை என்று கடைசி நேர நிகழ்வுகளைக் கூறிய போது அவருடைய மனைவி கண்ணீர்விட்டு அழுதார்.

எனக்கு நேரம் இல்லை

கல்யாணதுர்கம் வழியாக நாங்கள் அனந்த்பூருக்குத் திரும்பினோம். மல்லப்பாவின் புகைப்படத்தை லேமினேட் செய்து கொடுத்த புகைப்படக்காரரை நாங்கள் சந்தித்தோம்.

மாநில செய்தி நிறுவனத்துக்கு பகுதிநேர செய்தியாளராகவும் பணிபுரியும் கோவிந்து என்ற அந்த புகைப்படக்காரருடன் மல்லப்பா தொடர்பாக நாங்கள் தொடர்பு கொண்டபோது, ஸ்டூடியோவுக்கு வருமாறு கூறியிருந்தார்.
_104915837_a3d1c90d-2a2b-49d0-8523-ce29b58500b6

நடந்தவை அனைத்தையும் சோகத்துடன் அந்தப் புகைப்படக்காரர் நினைவுகூர்ந்தார்.

“மல்லப்பா ஒரு நாள் இங்கு வந்து தன் புகைப்படத்தை லேமினேட் செய்து தரும்படி கேட்டார். நான் முன்பணம் வாங்கிக் கொண்டு, இரண்டு நாள் கழித்து வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறினேன்.

இரண்டு நாள் கழித்து அவர் வந்தார். ஆனால், புகைப்படத்தை லேமினேட் செய்து என்னால் தர முடியவில்லை” என்றார் கோவிந்து.

“தமக்கு அவசரமாக தேவைப்படுவதால் புகைப்படத்தை உடனே திருப்பித் தருமாறு அவர் கேட்டார். தன்னால் காத்திருக்க முடியாது என்றும் கூறினார்.

பழையதுக்குப் பதிலாக புதிய புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன். அவர் மறுத்துவிட்டு, “எனக்கு நேரம் இல்லை, தயவுசெய்து கூடிய சீக்கிரம் முடித்துக்கொடுங்கள்” என்று கூறினார்.

என்னுடைய வேலைகலை ஒதுக்கி வைத்துவிட்டு, லேமினேசன் வேலையை முடித்தேன். அவர் மதியம் 11 – 12 மணி வாக்கில் வந்து புகைப்படத்தை வாங்கிச் சென்றார்” என்று அவர் விவரித்தார்.

“விவசாயி தற்கொலை என்று உள்ளூர் பத்திரிகையில் நான் செய்தியைப் பார்த்தபோது, அன்றைக்கு நான் லேமினேட் செய்து கொடுத்த புகைப்படத்தில் இருந்தவர் தான் என்பதை அறிந்தேன்.

அவருடைய புகைப்படத்தை லேமினேட் செய்து தராமல் தாமதித்ததால் என்னால் அவருடைய மரணத்தை இரண்டு நாட்கள் மட்டுமே தள்ளிப்போட முடிந்தது” என்று கோவிந்த் கூறினார்.
கடன் தள்ளுபடி அவருடைய உயிரைக் காப்பாற்றியிருக்கும்

மாநில அரசின் கடன் தள்ளுபடி திட்டத்தில் இரண்டு தவணைகளில் மல்லப்பாவின் ரூ.40,000 கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மூன்றாவது தவணை வர வேண்டும்.

“மூன்றாவது தவணையும் வந்திருந்தால், அவருடைய சுமை குறைந்திருக்கும், மல்லப்பா சற்று ஆறுதல் அடைந்திருப்பார்” என்றார் மாதவய்யா.

மிரட்டல் விடுத்த உள்ளூர் நபருக்கு அவர் தர வேண்டியது ரூ.10,000 மட்டும்தான் என்று உள்ளூர் செய்தியாளர் ஷபியுல்லா பிபிசியிடம் தெரிவித்தார்.
_104915838_f74885bb-e1c8-40a2-b96f-67791440da9f
தக்காளி சந்தை எப்படி உள்ளது?

ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்வதற்கு ரூ.30,000 செலவாகும். ஒவ்வொரு சாகுபடி காலத்திலும் 7 முறை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு முறையும் ஒரு ஏக்கருக்கு சராசரியாக 4500 கிலோ கிடைக்கும்.

அதாவது 15 கிலோ எடையுள்ள 300 பெட்டிகளை சந்தைக்கு எடுத்துச் செல்ல முடியும். ஒரு ஏக்கரில் தக்காளி அறுவடை செய்வதற்கு 15 தொழிலாளர்கள் தேவை. ஒரு தொழிலாளிக்கு ஒரு நாளுக்கு ரூ.150 கூலி தர வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கூலி செலவு ரூ. 2,250 தேவை. அதுதவிர சந்தைக்குக் கொண்டு செல்வதற்கு ஒரு பெட்டிக்கு ரூ.16 என்ற கணக்கில் 300 பெட்டிகளுக்கு சுமார் ரூ.4,800 செலவாகும்.

மேலும், சந்தையில் இடைத்தரகர்களுக்கு 10 சதவீத கமிஷன் தர வேண்டும். ஆனால் சந்தையில் ஒரு பெட்டிக்கு ரூ.40 மட்டுமே கிடைக்கிறது. இந்தச் செலவை எல்லாம் கணக்கு போட்டார் ஒரு ஏக்கருக்கு ரூ.1,000 இழப்பு ஏற்படுகிறது.

போதிய விலை கிடைக்காததால் குறைந்த விலைக்கு விற்பதற்குப் பதிலாக விவசாயிகள் தக்காளியை சாலையில் கொட்டுகிறார்கள்.
கடந்த 54 ஆண்டுகளில் இல்லாத வறட்சி

“கடந்த 54 ஆண்டுகளில் இதுபோன்ற கடுமையான வறட்சியை நாங்கள் பார்த்தது கிடையாது. அனந்த்பூர் மாவட்டத்தில் மழை இல்லை. ஹந்திரிநீவா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீர் எங்களுக்கு கிடைத்தது. அது ஓரளவுக்குப் பரவாயில்லை. கருப்பு மணலில் இவ்வளவு நீண்ட காலம் தொடர்ச்சியாக வறட்சியை நாங்கள் கண்டது கிடையாது” என்று அனந்த்பூர் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஹபீப் கூறினார்.

“விவசாயிகளின் நிலைமை குறித்து எனக்கு உண்மையிலேயே அச்சமாகத்தான் இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

“மாவட்டத்தில் எந்த அளவுக்கு கடுமையான வறட்சி நிலவுகிறது என்பதற்கு ஓர் உதாரணம் தான் மல்லப்பாவின் தற்கொலை. விவசாயிகளுக்குப் பாதுகாப்பக இருக்க வேண்டிய நிலமும் விவசாயமும் இப்போது அவர்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக மாறிவிட்டது.

விவசாயிகள் அறுவடை செய்யும்போது குறைந்தபட்சக் கொள்முதல் விலை கிடைக்காவிட்டால், அவர்கள் என்ன செய்வார்கள்” என்று மனித உரிமை ஆர்வலர் எஸ்.எம். பாஷா கேள்வி எழுப்பினார்.

_104915839_cf79121d-f7e4-4049-ad02-b9c2b477340d“கடந்த 30 ஆண்டுகளாக வறட்சி குறித்து நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். விவசாயிகளின் தற்கொலைகள் பற்றி நினைத்துப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.”

`கிராமப் பகுதிகளில் உள்ள சூழ்நிலைகள் மோசமாகிவிட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் வறட்சியின் கோரம் அதிகரித்து வருகிறது. பல கிராமங்கள் காலியாகிவிட்டன. வயதானவர்கள் மட்டுமே கிராமத்தில் தங்கியிருக்கிறார்கள். கிராமங்களில் குடிநீருக்கும் கூட பஞ்சம் ஏற்பட்டுள்ளது.”

“ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான பன்முகத்தன்மை உண்டு. பூகோள ரீதிக்கு ஏற்ப அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

“மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் பாஜக தோற்றதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி கிடையாது. சமூகத்தில் விவசாயிகள் மற்றும் வேலையில்லா இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட வெறுப்புணர்வு தான் இதற்குக் காரணம்.

அரசுகள் மாறுகின்றன. எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் அவை ஒரே மாதிரித்தான் இருக்கின்றன.

நீடித்த வளர்ச்சியை நோக்கி நாம் முன்னேற வேண்டுமானால் அரசியல் கட்சிகளை மாற்றுவதற்குப் பதிலாக, மக்கள் இயக்கங்கள் தான் தேவைப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

இப்போதும் கூட தங்களுக்கு நிலக்கடலை பயிர்கள் தான் கைகொடுக்கும் என்று மாதவய்யா நம்புகிறார். தனது பயிருக்குக் குறைந்தபட்ச கொள்முதல் விலை கிடைக்கும் என்று அவர் நம்புகிறார். பயிர் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய முடியும் என்று அவரிடம் நாங்கள் கேட்டோம்.

“எங்களுடைய விதி என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. கடனுக்கு ரூ.40,000 நான் வட்டி கட்டியாக வேண்டும். அதை எப்படி கட்டப் போகிறேன் என்று தெரியவில்லை.

தக்காளி மூலம் பணம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தக்காளிக்கு பாசனம் செய்து வருகிறேன். மழை இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டால், இந்த நிலத்தையும் கால்நடைகளையும் விற்றுவிட்டு நகரங்களுக்கு குடி பெயர வேண்டியது தான் ” என்று சிறிது நம்பிக்கை மற்றும் ஏமாற்றத்துடன் அவர் கூறினார்.

_104915840_2596e15b-2a74-4ce0-85c3-5df4c5cead50
நிவாரணத் தொகை வழங்கப்படும்

“மல்லப்பாவின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை கிடைக்கும் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம். இதுதொடர்பான கோப்புகளை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி இருக்கிறோம்” என்று கல்யாணதுர்கம் பகுதிக்கான வருவாய் கோட்டாட்சியர் பொறுப்பு வகிக்கும் சீனிவாசுலு பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.

“மல்லப்பாவின் குடும்பம் அரசிடம் இருந்து ரூ.5 லட்சம் நிவாரணத்தைப் பெறவில்லை. அது வந்தவுடன் ஒரே தவணையில் ரூ.1.5 லட்சம் கடனை நாங்கள் கட்டிவிடுவோம்”

“நிவாரணத் தொகை வந்ததும் தனியாரிடம் வாங்கிய கடன்களை அவருடைய குடும்பத்தினர் கட்டிவிடலாம்.

மல்லப்பாவின் மகன் மற்றும் அவருடைய மனைவி பெயரில் கூட்டுக் கணக்கு தொடங்கி, நிவாரணத் தொகையை தவணைகளாக வழங்குவோம்” என்று தெரிவித்தார் சீனிவாசுலு.

அனந்த்புர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 1998 -2017 காலக்கட்டத்தில் 932 பேர் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மாவட்ட நிலத்தடி நீர்வளத் துறை அறிக்கையின்படி, கடந்த 17 ஆண்டு காலத்தில் தொடர்ச்சியாக 9 பருவங்கள் நிலத்தடி நீர் வறட்சி நிலவுகிறது.

2002ல் இது ஆரம்பித்தது. 2011 – 2018 டிசம்பர் வரையில் நிலத்தடி நீர்மட்டம் 12.90 மீட்டரில் இருந்து 27.21 மீட்டர் என்ற அளவில் கீழே இறங்கிவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.