தன்னைவிட அதிகம் படித்த பெண்ணை கல்யாணம் பண்ண முடியாது! இளைஞர் எடுத்த சோக முடிவு

0
151

மணமகள் பட்டப்படிப்பு படித்துள்ளதால், தாழ்வுமனப்பான்மையால் தவித்த பத்தாம் வகுப்பு வரை படித்த மணமகன் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம், திருச்சியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

திருச்சி மலைக்கோட்டை சறுக்குபாறையைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் தினேஷ். 31 வயதான இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

இந்நிலையில், தினேஷுக்கும் அவரின் உறவுக்காரப் பெண்ணான மலைக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த புவனேஷ்வரி என்பவருக்கும், பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இருவரது திருமணம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை நடைபெற இருந்தது. அதற்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை தினேஷுக்கும்-புவனேஷ்வரிக்கும் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து, மணமக்கள் அவரவர் வீடுகளுக்குச் சென்றுவிட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை முதலே திருமணத்துக்கு எல்லோரும் தயாராகிக்கொண்டிருந்தனர். ஆனால், மணமகன் தினேஷ் தங்கியிருந்த வீட்டின் மாடி திறக்கப்படாமல் இருந்தது.

அதனால், அந்த அறையில் தூங்கிக்கொண்டிருந்த மணமகன் தினேஷை எழுப்புவதற்காக அவரது தாய் மாடிக்குச் சென்று அறையின் கதவைத் தட்டினார்.

நீண்டநேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, மணமகன் தினேஷ் மின்விசிறியில் தூக்குப்போட்டு இறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.

திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணமகன் தினேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது, உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சம்பவம்குறித்து தகவலறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், தினேஷ் வேறு ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், தினேஷ் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததும், மணமகள் புவனேஷ்வரி பட்டப்படிப்பு படித்துள்ளதாலும் தன்னைவிட அதிகம் படித்த பெண்ணை மணக்க ஒருவித தயக்கத்துடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமண வரவேற்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும், இரவு நீண்டநேரம் தினேஷ் தன் தாயிடம் இதுகுறித்துப் பேசினாராம், அதன்பிறகு தனது அறைக்கு தூங்கச் சென்ற தினேஷ், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணமகள் தன்னைவிட அதிகம் படித்திருந்ததால், தாழ்வுமனப்பான்மை காரணமாக தினேஷ் தற்கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.