புலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன?: ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-14) -வி.சிவலிங்கம்

0
2046

வாசகர்களே!

இதுவரை இந்திய சமாதானப் படையினரின் வெளியேற்றம் தொடர்பான விபரங்களைப் பார்த்தோம்.

இருப்பினும் இவ் வெளியேற்றம் ஏற்படுத்திய தாக்கங்களே பின்னர் ஏற்பட்ட பாரிய அளவிலான மனித அவலங்களுக்கான பின்புலமாக அமைந்தது.

அரசியல் அமைப்பின் 13 வது திருத்தம் காரணமாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை நிர்வாகம் செயற்பட அனுமதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறான பெரும் பேரழிவை மக்கள் எதிர்நோக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

இங்கு எமது கவனத்திற்குரிய அம்சம் எதுவெனில் மாகாணசபையின் உருவாக்கம் என்பது தற்செயல் சம்பவமாக கருத முடியாது.

எண்ணற்ற தியாகங்களின் பின்னணியிலேயே இச் சபை உருவாகியது.

downloadஇதனைத் தற்போது மிகவும் அழுத்தமாக தெரிவிப்பதன் காரணம் பெரும் தியாகங்களின் அடிப்படையில் உருவான இச் சபை இதன் உருவாக்கத்தில் கிஞ்சித்தும் சம்பந்தம் அற்றவர்களின் கைகளில் சிக்கி அவலப்படுவதும், இச் சபையின் தோற்றத்தை முளையிலேயே கிள்ளி எறிய எத்தனித்த சக்திகளின் ஆதரவாளர்களின் கைகளில் தற்போது சென்றடைந்திருப்பதும் மக்களின் கவனத்திற்குரியது.

எனவே தொடர்ந்து வரும் பகுதிகள் இந்திய சமாதானப் படையினரின் வெளியேற்றத்தின் பின்னர் தமிழ் மக்கள் அனுபவித்த பெரும் துயர்களை விபரிக்கிறது.

aaa-kgஅதுவும் இலங்கை ராணுவத்தின் உயர் அதிகாரி ஒருவரின் பார்வையில் அவை எவ்வாறு தெரிந்தது? என்பதைத் தொடர்ந்து பார்க்கலாம்.

சமாதானப் படையினரின் விலகலைத் தொடர்ந்து அந்த வெற்றிடத்தை நிரப்பும் பொருட்டு விடுதலைப்புலிகள் தமிழ்த் தேசிய ராணுவத்தையும், வரதராஜப்பெருமாள் தலைமையிலான வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையையும் அழிக்கத் திட்டமிட்டார்கள்.

இதன் பின்னால் பாரிய அழிவைத் தரும் ஆயுதங்களும், தமிழ் மக்களின் பரவலான ஆதரவும் இக் கொடுமைகளுக்குக் காரணமாக அமைந்தன.

அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் செயற்பட்ட தமிழ் தேசிய ராணுவத்தினர் புலிகளின் தாக்குதல்களால் பலத்த இழப்புகளைச் சந்தித்தார்கள். இதன் விளைவாக தமிழ் தேசிய ராணுவம் மிக விரைவாகவே பின்வாங்கியது.

இதனால் அப் பிரதேசங்களைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த புலிகள் அங்குள்ள ராணுவ முகாம்களுக்கு அண்மையில் பதுங்கு குழிகளை வெட்டினார்கள்.

அத்துடன் சிங்கள கிராமத்தவர்களின் வாகனங்களைப் பறித்தல், வரிப் பணம் அறவிடுதல் போன்றவற்றையும் ஆரம்பித்தனர்.

அந்த மக்கள் எம்மிடம் முறையிட்ட போதிலும் பிரேமதாஸ அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக எம்மால் செயற்பட முடியவில்லை. அதாவது புலிகளுக்கும், அரசிற்குமிடையே ஏற்பட்ட புரிந்துணர்வு தடையாக அமைந்தது.

இவை யாவும் பாரிய ஆபத்து ஒன்றினை ஏற்படுத்தும் என உணர்ந்ததால் அதற்கான ஏற்பாடுகளில் நாம் ஈடுபட்டோம். எக் காரணம் கொண்டும் புலிகளிடம் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைவதில்லை என முடிவு செய்தோம்.

சமாதானப் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த பல பகுதிகள் புலிகளால் கட்டுப்படுத்தப்பட்டதால் தமிழ்த் தேசிய ராணுவத்தினரில் ஒரு பகுதியினர் பின்வாங்க, இன்னொரு பிரிவினர் புலிகளிடம் சரணடைய, அதில் ஒரு பிரிவினர் துரோகிகள் என அடையாளப்படுத்தப்பட்டு மரணத்தைத் தழுவினர்.

மேலும் சிலர் மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்தனர். இன்னும் சிலர் இலங்கை ராணுவத்திடம் சரணடைய, வேறு சிலர் இந்தியா சென்றனர்.

varaஇலங்கை ராணுவத்திடம் சரணடைந்தவர்களை உளவுத்துறை பயன்படுத்தியது. இவற்றிற்கு மத்தியில் இலங்கை அரசு எதுவும் அறியாதது போல செயற்பட்டது.

இந்திய சமாதானப் படையினருடன் கூடவே முதலமைச்சர் வரதராஜப்பெருமாளும் இந்தியா சென்றார்.

1990 ம் ஆண்டு மார்ச் 24 ம் திகதி இந்திய ராணுவத்தின் இறுதிப் பிரிவும் வெளியேறியதும் புலிகளின் இடைவெளி அற்ற விதத்திலான கொலைகள் தொடர்ந்தன.

அதே ஆண்டு மே மாதம் 5ம் திகதி ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்து படுகொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மே 30 ம் திகதி மிகிந்துபுர, தெகிவித்த ஆகிய கிராமத்து மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாக பிரேமதாஸ அரசுடன் புலிகள் நடத்திய தேனிலவு யூன் 1ம் திகதியுடன் முறிந்தது.

இலங்கையிலும், இந்தியாவிலும் செயற்பட்ட ஆய்வாளர்கள் இந்திய சமாதானப் படையினரால் புலிகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதினர்.

ஆனால் அதற்குப் பதிலாக இந்தியப் படையினருடன் அவர்கள் நடத்திய மோதல் அனுபவங்கள் பெரும் தைரியத்தையும், நம்பிக்கையையும் வழங்கியிருந்ததை பின்னாளில் அவர்களது நடவடிக்கைகள் எமக்கு உணர்த்தின.

இலங்கை அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை முறித்த புலிகள் அடுத்த 10 நாட்களுக்குள்ளாகவே மேற்கொண்ட தாக்குதல்கள் அவர்களது திட்டங்களையும், தயாரிப்பினையும் வெளிப்படுத்தியது.

இத்தகைய இறுதி முடிவை ஏற்கெனவே எதிர்பார்த்திருந்த ராணுவம் தம்மைத் தயார் நிலையில் வைத்திருந்த போதிலும் அரசாங்கம் புலிகளின் உள் நோக்கங்களைப் புரிந்த கொள்ளத் தவறியிருந்தது.

அரசிடமிருந்து எத்தகைய முடிவுகள் வரினும் புலிகளிடம் சரணடைவதில்லை என்ற முடிவை ராணுவம் எடுத்திருந்தது.

1990ம் ஆண்டு யூலை 11ம் திகதி கிழக்கில் புலிகள் தமது கைவரிசையைக் காட்டத் தயாராகினர். கிரான் என்ற இடத்திலுள்ள ராணுவ முகாமைச் சுற்றி வழைத்து எவரையும் வெளியேறக்கூடாது என்றனர்.

அதே வேளை அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளிலுள்ள பொலீஸ் நிலையங்களையும் சுற்றி வழைத்து பொலீசாரையும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும்படி கோரினர்.

இதே வேளையில் சக அமைப்புகளான புளொட், ரெலோ, ஈ பி ஆர் எல் எவ் ஆகியவற்றின் மீதும் தாக்குதல்களைத் தொடுத்தனர். இத் தாக்குதல்கள் காரணமாக பலர் இறக்க மேலும் பலர் பின்வாங்கினர். ஆனாலும் இவர்கள் வீடு வீடாகத் தேடிப் பிடிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டனர். சரணடைந்த பலர் பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

e8e7c2c9f6929d268febb7801bf4fc55

புலிகளால் சுற்றி வழைக்கப்பட்ட கிழக்கின் பொலீஸ் நிலையங்கள் மிகவும் பரிதாப நிலையில் இருந்தன. இலங்கையின் மிகவும் துன்பகரமான வரலாறு அங்கு எழுதப்பட்டது. புலிகளுக்கு எதிராக செயற்பட வேண்டாம் என அரசு அப் பொலீசாருக்கு அறிவுறுத்தியிருந்தது. அரசின் அறிவுறுத்தல் பின்வருமாறிருந்தது.

‘ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிய போதிலும் அரசு விலகவில்லை. பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தை அடைய அரசு முயற்சிக்கிறது. எவரும் புலிகளுடன் போரிட எண்ணவில்லை.’

அரசின் அறிவிப்புடன் மறு புறத்தில் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும்படி அழுத்தங்களும் தொடர்ந்தன.

கிரான் ராணுவ முகாம் நிலமைகளும், இதே மாதிரியான நிலையில் காணப்பட்டன. அந்த முகாம் கப்டன் சுமித் பெரேரா தலைமையில் இயங்கியது.

அதே போலவே கல்லடியில் அமைந்த ராணுவ முகாம் லெப்ரினன்ட் கேணல் கிரன் ஹலான்கொட தலைமையில் இயங்கியது. சுற்றி வழைக்கப்பட்ட கிரான் ராணுவ முகாமின் தளபதி கப்டன் சுமித் பெரேராவின் அடுத்த நடவடிக்கை என்ன? எனப் பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆயுதங்களைக் கைவிட்டுச் சரணடையுங்கள் என புலிகள் அச்சுறுத்திய போதிலும் இறுதி ராணுவம் இருக்கும் வரை போராடுவோம் என அத் தளபதி பதிலளித்தார்.

இச் சிக்கலான நிலமையைத் தணிக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தலாம் என அரசு கூறியது. ராணுவத்தின் நிலைப்பாடும், அரசின் நிலைப்பாடும் முரண்பட்டுச் சென்ற வேளையில் புலிகள் ராணுவத்தினரைச் சரணடையும்படி அரசை வற்புறுத்தினர்.

கிரான் ராணுவ முகாமும், பொலீஸ் நிலையங்களும் மிகவும் நெருக்கடிக்குள் சிக்கியிருந்த நிலையில் குறிப்பாக பொலீசார் ராணுவத்தைப் போன்று மிகவும் பயிற்சி பெற்ற நிலையில் இருக்கவில்லை.

ராணுவம் போன்று பதில் தாக்குதல்களை நடத்தும் உளப் போக்கிலும் இல்லை. அத்துடன் பொலீசார் புலிகளின் பலத்தையும் நன்கு அறிந்திருந்தனர்.

இவ் இறுக்கமான போக்கின் முடிவு எவ்வாறாக அமையலாம்? என்பதை எவரும் தீர்மானிக்க முடியாதிருந்தது. அத்துடன் முடிவு என்பது ஒருவரால் தீர்மானிக்கப்படும் ஒன்றாகவும் காணப்படவில்லை.

பலர் சம்பந்தப்படுவதாக இருந்தது. ராணுவம் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சில அதிகாரிகளின் தலைமையில் அமைக்கப்பட்டது. இங்கு ராணுவத்தினரின் போர் புரிவதற்கான உற்சாகத்தைத் தளர விடாமல் வைத்திருப்பது பெரும் பணியாக அமைந்தது. அத்துடன் வலிமையான ஆயுதங்களும் தேவையாக இருந்தது.

இவ்வாறு கிரான் ராணுவம் வாழ்வா? சாவா? என்ற போரிற்குத் தயாரான வேளையில் பொலீசார் தமது எதிர்கால முடிவு குறித்து பொலீஸ் தலைமையகத்தின் வழிகாட்டுதலுக்குக் காத்திருந்தனர்.

ராணுவத் தலைமையகமும், பொலீஸ் தலைமையகமும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையும்படி பணித்து தாம் சமாதான முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

164324_121100571293606_107838335953163_139021_2280519_n

அத்துடன் புலிகளுடன் பேசி அவர்களை விடுவிப்பதாகவும் அரசு தெரிவித்தது. இக் கொடுமை நிறைந்த முடிவு வேறு வழிகள் இல்லை என்ற காரணத்தால் எடுத்த முடிவு என்பது தெளிவாக இருந்தது. அவர்கள் இந்த முடிவை ராணுவத்துடன் பேசி முடிவு செய்திருக்க வேண்டும். இதன் விளைவுகளுக்கு அரசே பொறுப்புக் கூற வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

600 இற்கு மேற்பட்ட பொலீசார் தமது ஆயுதங்களைக் கைவிட்டு புலிகளிடம் சரணடைந்தமை என்பது எந்த ஒரு அரசும் மேற்கொள்ளாத துரோகச் செயலாகும்.

இதே வேளை கிரான் முகாமின் ராணுவத்தினர் நாட்டின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் என்பதைக் கப்டன் சுமித் பெரேரா தலைமையில் அரச உத்தரவையும் மீறி பல நாட்கள் போரில் ஈடுபட்டார்கள்.

இதனால் மிகவும் கணிசமான தொகையினர் இறந்ததோடு, பலர் காயமடைந்தனர். போரின்போது வேறு ராணுவ முகாம்களிலிருந்தும் ராணுவத்தினர் இணைந்ததால் விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கடினமான பாடத்தை உணர்த்தியதோடு மட்டுமல்லாமல் ராணுவம் எதிரியின் முன்னால் கோழைகள் போல மண்டியிடாது என்பதனை நாட்டிற்கும், அரசிற்கும் உணர்த்தியது.

அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க புலிகளிடம் சரணடைந்த 600 இற்கு மேற்பட்ட பொலீசாரின் முடிவு வேறு விதமாக அமைந்தது. இலங்கையின் வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய மனிதக் கொலையாக, நெஞ்சை மிக நெகிழ வைக்கும் கோரச் சம்பவமாக அது அமைந்தது.

689d4356நிராயுதபாணியான பொலீசாரை, தம்மை விடுவிக்கும்படி கோரிய வேளையில் விலங்குகளைக் கொல்வது போல கொன்றொழிக்கப்பட்டார்கள்.

வழமை போலவே இவ்வாறான சம்பவங்கள் மிக விரைவாகவே மறைக்கப்படுவதும், மறக்கப்படுவதும் அரசின் போக்காக மாறின. இவை குறித்து எவரும் குரல் எழுப்பியதில்லை.

அவ்வாறான உத்தரவுகளை வழங்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளோ அல்லது மனித இழப்பிற்கான பொறுப்புக் கூறலோ இருந்ததில்லை.

பாதிக்கப்பட்ட பொலீசாரின் குடும்பங்களுக்கான இழப்பீடுகள், ஆறுதல்கள், விளக்கங்கள் எதுவும் இல்லை. இவ்வாறான துன்பம் நிறைந்த குற்றங்களை நாடு மிக விரைவாகவே மறந்து விட்டது. ஆனால் நாம் அவற்றை எமது இதயங்களில் புதைத்து நமது வாழ்வை மேலும் தொடர்கிறோம்.

ஆனாலும் இவ்வாறான துரோகங்களுக்குப் பொறுப்பானவர்கள் மரணித்த பொலீசாரின் பெற்றோர், கணவனை இழந்த மனைவியர், தந்தைகளை இழந்த பிள்ளைகள் அனுபவிக்கும் வேதனைகளை அம் மக்கள் மறப்பார்களா? என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன
தொகுப்பு : வி. சிவலிங்கம்

ராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.