மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்! – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் #Video

0
298

mgaram_12105மகர ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 10-ல் இருந்த குருபகவான், உங்களுக்குத் தொழில் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அநேக கஷ்டங்களைக் கொடுத்து வந்தார். உங்களுக்கு வந்த துன்பங்களை அடுத்தவர்களிடம் சொல்லவும் முடியாமல், சொல்லாமலும் இருக்க முடியாமல் நீங்கள் துன்பப்பட்டீர்கள். நன்றாக உழைத்தும் நல்ல பெயர் கிடைக்காமல் இருந்து வந்தது. இனி அந்த நிலைமை உங்களுக்கு இருக்காது.

குருப்பெயர்ச்சி

4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு லாபஸ்தானத்துக்கு அதாவது 11-ம் வீட்டுக்கு வந்து விட்டார். பணவரவு அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளுக்கு உங்களுடைய சொத்துகளை முறையாகப் பிரித்துக்கொடுப்பீர்கள்.

தேங்கிக்கிடந்த வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடக்கத்தொடங்கி வெற்றிகரமாக முடியும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பொருளாதார ரீதியாக உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மொத்தத்தில் உங்களுக்கு இருந்து வந்த பணப்பிரச்னைகள் தீரும். எல்லா வகையிலும் இந்த குருப்பெயர்ச்சி வெற்றிகரமாக அமையும்.

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் மனோபலம் கூடும். தைரியமாகவும், தெளிவாகவும் சில முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள்.

பூர்வ புண்ணியஸ்தானமான 5-ம் வீட்டை குரு பார்ப்பதால், நீண்ட நாள்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குரு ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த பிணக்குகள் தீர்ந்து அந்நியோன்யம் அதிகரிக்கும்.

13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் உங்கள் ராசிக்கு 12-ல் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், திடீர்ப் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். சுபச் செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு: இதுநாள் வரை இருந்து வந்த கஷ்ட நஷ்டங்கள் தீரும். பற்று வரவு உயர்ந்து நல்ல லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிணக்குகள் தீரும். புதிய பங்குதாரர்களும் உங்களுடன் வந்து இணைந்துகொள்வார்கள். அனுபவமிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். புதிதாக ஏஜென்சி எடுத்தால், நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு: இத்தனை நாள்களாகப் பத்திலிருந்த குரு உங்களைப் பாடாய்ப்படுத்தி இருப்பார். வேலை நிரந்தரமாக இருக்குமோ இருக்காதோ என்று பயந்துகொண்டுதான் இருப்பீர்கள். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வேலைத் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும்.

மாணவர்களுக்குப் படிப்பில் இதுவரை இருந்து வந்த மந்தநிலை மாறும். உங்கள் மனதில் இருந்த தாழ்வு மனப்பான்மை அகலும். நினைவாற்றல் அதிகரிக்கும். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு: ரிலீசாகாமல் தடைப்பட்டுக்கிடந்த படங்கள் ரிலீஸாகி வசூலில் சாதனை புரியும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும், பரிசும் கிடைக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவுங்கள். மேலும் நன்மைகள் அதிகரிக்கும்.

 

kumba_12371குருப்பெயர்ச்சிப் பலன்கள், கும்பம். உங்கள் ராசிக்கு 9 -ம் வீட்டில் இருந்த குருபகவான் ஏராளமான செல்வங்களை வாரி வழங்கி வந்தார். ஒரு சிலருக்கு குழந்தைப் பாக்கியத்தையும், வேறு சிலருக்கு வீடு கட்டும் யோகத்தையும் தந்தார். அப்படிப்பட்ட குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை 10 – வீட்டில் அமர்ந்துள்ளார். இனி நீங்கள் ஓரளவு சிக்கனமாக இருப்பது நல்லது. அத்தியாவசியச் செலவுகள் இனிமேல் உங்களுக்கு அதிகமாகும். அதனால் ஆடம்பரச் செலவுகளை இனி நீங்கள் குறைத்து முக்கியமான செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும்.

குருப்பெயர்ச்சி

பாரம்பர்யமான நம் உணவு வகைகளை நீங்கள் சாப்பிடுவது நல்லது. அப்படிச் செய்தால் ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனும் அடிப்படையில் நோய்களின் தாக்குதலில் இருந்து தப்ப முடியும்.

குரு உங்கள் ராசிக்கு 2 – ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்பற்றாக்குறை எதுவும் இருக்காது. பணவரவு ஓரளவு இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதற்குத் தகுந்த மாதிரி வந்துகொண்டே இருக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

10 -ம் இடத்தில் குரு இருப்பதால் யாரிடமும் உங்கள் வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். நீங்கள் ஒருத்தரை நம்பி சொல்லி இருப்பீர்கள், கடைசியில் அவர் சர்வசாதாரணமாக மற்றவர்களிடம் அதைப் பகிர்ந்து கொண்டிருப்பார். அதனால், எவரிடமும் நேரிலோ தொலைபேசியிலோ உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துவிட்டுப் பேசுங்கள்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை உங்களுக்குப் பிடித்த அதிகாரி வேறு இடம் மாறிப்போவார். உங்களுக்குப் பிடிக்காத அதிகாரி உங்களுக்கு மேல் அதிகாரி ஆவார். ‘பத்தில் இருக்கும் குரு பவுசைக் குறைக்கும்’ என்று சொல்வார்கள். உத்தியோகம் பற்றிய பயம் அவ்வப்போது வந்து போகும். ஆனால், அப்படி எதுவும் நடக்காது. அதனால் பயப்படத் தேவையில்லை.

குரு 4 – ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நலம் மேம்படும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும்.

குரு 6 – ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய கடன்களைக் கொடுத்து முடிப்பீர்கள். 10-ம் வீட்டில் குரு இருப்பதால், நீங்கள் யாருக்கும் ஜாமீன்

கையெழுத்து போடுவது கூடாது. கொடுக்கல், வாங்கலில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. யாருக்கும் அநாவசிய வாக்குறுதி தர வேண்டாம்.

கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போனால், பெரிய பிரச்னைகள் உருவாகாது.

வியாபாரத்தைப் பொறுத்தவரை முன்பிருந்ததை விட நல்ல லாபம் கிடைக்கும். வேலையாள்கள் தங்களின் பணிகளை சரியாகச் செய்வார்கள். ஆனாலும் புதிதாகப் பணியாளர்களை நியமிக்கும்போது, அவர்களின் பின்னணியைத் தெரிந்து கொள்வது நல்லது. புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள்.

மாணவர்களுக்கு: படிப்பில் கொஞ்சம் கவனச்சிதறல் ஏற்படும். அதனால் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. நினைவாற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது, விளையாட்டுத்தனமாக இல்லாமல், பாடங்களில் கூடுதல் அக்கறை காட்டுங்கள். அவ்வப்போது ஆசிரியர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

பெண்கள்: இரவல் நகைகள் வாங்கவும் கூடாது. கொடுக்கவும் கூடாது.

கலைத்துறையினர்: பலவித தடைகள், போட்டியைத் தாண்டி தங்களின் படைப்புகளை வெளியிடுவார்கள். பெரிய அளவில் வசூல் சாதனை புரியாவிட்டாலும் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். இந்த குருப்பெயர்ச்சி சற்று அலைச்சல் திரிச்சல்களையும், மனஉளைச்சலையும் தந்தாலும், முடிவில் ஓரளவு வெற்றியாகவே அமையும்.

பரிகாரம்: சென்னை அருகே மகாபலிபுரம் செல்லும் வழியில் இருக்கும் திருப்போரூர் முருகன் கோயிலில் சந்நிதி கொண்டிருக்கும் சிதம்பர சுவாமிகளை ஒரு வியாழக்கிழமையன்று தரிசித்து வழிபட சிரமங்கள் குறையும். தாயில்லாப் பிள்ளைகளுக்கு உதவுங்கள்.

meenam_12043

இதுவரை உங்கள் ராசிக்கு 8 – ம் வீடான மறைவு ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்திருந்தார். அவர் மட்டுமா மறைந்திருந்தார், நீங்களும்தான். உங்களை நீங்களே ஒளித்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தீர்கள். திருவிழா, கல்யாணம், கிரகப் பிரவேசம் போன்ற நிகழ்ச்சிகளில்கூட நீங்கள் கடைசி வரிசையில்தான் அமர்ந்தீர்கள். அந்த நிலையெல்லாம் இனி மாறப்போகிறது.

குருப்பெயர்ச்சி

குருபகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை 9 – ம் வீட்டில் அமர்ந்துள்ளார். இந்த ஓராண்டு முழுவதுமே உங்களுக்கு அமோகமாக இருக்கும். தடைப்பட்ட வேலைகள் எல்லாம் விரைந்து முடியும். எதிர்ப்புகள் யாவும் உங்களை விட்டு விலகும். தொட்ட காரியங்கள் யாவும் துலங்கும். பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்று சேருவார்கள்.

கொடுக்கக்கூடாத இடத்தில் பணத்தைக் கொடுத்து அவஸ்தைப்பட்டு வந்த உங்களின் கைகளுக்கு அந்தப் பணம் வந்து சேரும். பொதுவாகவே இந்த ஓராண்டு முழுவதும் பணவரவு சிறப்பாக இருக்கும்.

இதுநாள்வரை உங்கள் பேச்சுக்கு ஏட்டிக்குப்போட்டியாகப் பேசிக்கொண்டும், நடந்துகொண்டும் இருந்த பிள்ளைகள் இனி உங்களின் பேச்சைக் கேட்பார்கள். குடும்பத்தில் தங்களின் பொறுப்பை உணர்ந்து நடந்துகொள்வார்கள். பொருளாதார இழப்பு, வீண் சிரமங்கள், கஷ்டங்கள் இவை யாவும் விலகும். வருமானம் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு பெரிய நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.

சகோதரர் வகையில் இருந்த பிணக்குகள் தீரும். உங்களைப் பார்த்தும் பார்க்காமல் ஒதுங்கியிருந்த சொந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள்.

கணவன்- மனைவி இடையே அன்யோன்யம் பெருகும். நீண்ட நாள்களாக குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

வியாபாரிகளைப் பொறுத்தவரை உங்களின் கடையை விரிவுபடுத்தவும் பெரிய அளவில் முதலீடு செய்யவும் ஏற்ற தருணமிது. கடைவீதியின் முக்கியமான இடத்துக்கு ஒருசிலர் தங்களின் கடையை மாற்றுவார்கள்.புதிய பங்குதாரர்கள் வந்து சேருவார்கள். வியாபாரத்திலும் அமோகமான லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் இதுவரை அலுவலகத்தில் சக ஊழியர்களால் மதிக்கப்படாத நிலைமையே உங்களுக்கு இருந்து வந்தது. உங்களின் மூத்த அதிகாரி உங்களின் திறமையை அங்கீகரிக்காமல் கேலியும் கிண்டலும் செய்து அவமானப்படுத்தி வந்தார்.

இனி உங்களின் திறமையையும், பணியையும் உணர்ந்து பல பேர் மத்தியில் உங்களைப் பாராட்டுவார். நீங்கள் விரும்பிய இடத்துக்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் உண்டு. சக ஊழியர்களும் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். சிலருக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும்.

மாணவர்கள் தங்களின் தேர்வுகளில் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது பதில் தெரிந்தும் அவற்றைச் சரியாக பதிவுசெய்யத் தவறிடும் நிலைமையே இருந்து வந்தது. இனி அந்த நிலைமை மாறும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். பெற்றோர்களுக்குப் பெருமையும் சேர்ப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு, குறிப்பாக சினிமாத்துறையில் இருப்பவர்கள் புகழ் பெறுவார்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் அமையும். உங்களுடைய படைப்புகள் பெரிய அளவில் பேசப்படும்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு மாற்றத்தைத் தந்து உங்களை வெற்றி பெற வைப்பதுடன், வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்துவதாகவும் அமையும்.

பரிகாரம்: தேனி மாவட்டம், வேதபுரி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கச் செய்யும். குழந்தை இல்லாதவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவுங்கள். மேலும் நல்ல பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.