உலக வெப்பமாதல் தொடர்பில் ஐ.நா இறுதி அபாய எச்சரிக்கை!!

0
184

அதிகரித்து வரும் உலக வெப்பமாதல் அபாயம் குறித்து மிக விரிவான எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் விஞ்ஞானிகள் இது இறுதி அழைப்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உலக வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு கீழ் தக்கவைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை தற்போது முழுமையாக விலகியிருப்பதாகவும் அது 3 டிகிரி செல்சியஸை நோக்கி செல்வதாகவும் காலநிலை மாற்றம் குறித்த உலகளாவிய விஞ்ஞான ஆணையம் அதன் புதிய அறிக்கையில் எச்சரித்துள்ளது.

1.5 செல்சியஸுக்கு கீழ் தக்கவைத்துக் கொள்ள “சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் வேகமான, தொலைநோக்கான மற்றும் முன்னெப்போதும் இல்லாத மாற்றம்” ஒன்று தேவைப்படுவதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகள் ஆய்வுக்கு பின்னர் விஞ்ஞனிகள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு இடையில் தென் கொரியாவில் இடம்பெற்ற இழுபறி கொண்ட சந்திப்பைத் தொடர்ந்தே ஐ.நாவின் காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான குழு இந்த சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

400 பக்கம் கொண்ட இந்த அறிக்கையின் சுருக்கம், எவ்வளவு விரைவாக புவி வெப்பமடைதலை தடுக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதகுலம் எடுக்க வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டி உள்ளது. மேலும் காலநிலை மற்றம் எதிர்காலத்தின் மோசமான அழிவுகளைத் தவிர்ப்பதற்கான மாதிரியான மாற்றங்களை உருவாக்குகிறது.

இதன்படி உலகின் வெப்பநிலை 2030ஆம் ஆண்டில் இருந்து 2052ஆம் ஆண்டிற்குள் 1.5 டிகிரி செல்சியஸ் உயரலாம் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. உலக வெப்பமயமாதல் தற்போதைய நிலையில் தொடர்ந்தால் அதைத் தவிர்க்க முடியாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அனைத்துலக ஒப்பந்தம் 2015ஆம் ஆண்டில் கையெழுத்தான போது அந்த அறிக்கையைத் தயார் செய்வதற்கு அரசாங்கங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தன.

வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்தால் அது மனிதர்களுக்கும், இயற்கைக்கும் பேராபத்தை விளைவிக்கும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

2 டிகிரிக்கு மேல் வெப்பம் உயர்ந்தால், கடல் நீரின் வெப்பம் அதிகரித்து பவளப் பாறைகள் இல்லாமல் போய்விடும்.

அதேபோன்று 2 டிகிரிக்கு மேல் புவி வெப்பமாகும்போது, கடலின் நீர்மட்டம் 10 சென்டிமீற்றர் அளவிற்கு உயரும். இதனால் உலகில் பல இடங்களில் 10 மில்லியன் (ஒரு கோடி) மக்கள் வாழுமிடத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படக்கூடும்.

கடலின் வெப்பநிலை மற்றும் அமிலத்தன்மையின் மாற்றம் ஏற்பட்டு, நெல், சோளம் மற்றும் கோதுமைப் பயிர்கள் வளர்வதில் தாக்கம் ஏற்படும்.

வெப்ப உயர்வைக் கட்டுப்படுத்த எரிபொருள் பயன்பாடு, தொழிற்சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து ஆகியவற்றில் மாற்றங்கள் தேவைப்படும் என்றும் அறிக்கை தெரிவித்தது.

“புவி வெப்ப அதிகரிப்பை 2 செல்சியஸாக குறைப்பதற்கு பதிலாக 1.5 செல்சியஸில் நிறுத்துவது பல நல்ல பலன்களை தருகிறது” என்று பருவநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் இணை தலைவர் பேராசிரியர் ஜிம் ஸ்கே குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை தொடர்பாக டிசம்பர் மாதத்தில் போலந்தில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஆய்வாளர்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடவடிக்கையை தீவிரப்படுத்தினால் மட்டுமே தப்ப முடியும் என்று எச்சரித்துள்ளனர்.

பரிஸ் பருவநிலை உடன்பாட்டில் உலக நாடுகள் உயரும் வெப்ப நிலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தன.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.