கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் Video

0
464

kadaga_12131கடக ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

உங்களுடைய ராசிக்கு யோகாதிபதியான குரு பகவான் கடந்த 2 ஆண்டுகளாக 3-வது வீட்டிலும் 4 -வது வீட்டிலும் இருந்து பலவித தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.

இப்போது குரு பகவான் 4.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு அமோகமான வாழ்க்கையைத் தரப்போகிறார்.

இந்த வருடம் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். புதிய பாதையில் பயணிப்பீர்கள். உங்கள் வாழ்வில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும்.

குருப்பெயர்ச்சி

பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடி புகுவார்கள். பலவித பிரச்னைகளில் சிக்கி குழப்பத்தில் இருந்த உங்கள் மனதில் தெளிவு பிறக்கும். இனம் புரியாத மகிழ்ச்சியும், உற்சாகமும் தங்கும். எப்போதும் சிரித்த முகத்துடன் சந்தோஷமாக இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு 5 -ம் இடத்துக்கு குரு பகவான் வருவதால், பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியம் இந்த ஓராண்டில் கிடைக்கக் கூடும்.

பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டி வியக்கத்தக்கச் சாதனைகள் படைப்பார்கள். சிலரது பிள்ளைகள் படிப்புக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.

திருமணமாகாமல் இருந்த மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகளின் திருமணத்தைக் கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் பெண் அமைவார்.

உங்களைப் பார்த்தும் பார்க்காததுபோல பேசாமல் சென்றவர்களெல்லாம் மீண்டும் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். சமூகத்திலும், உறவினர்கள் மத்தியிலும் உங்களின் மதிப்பு உயரும்.

பூர்வீகச் சொத்தில் உங்களுக்கான பங்கு கிடைக்கும். அதை நல்ல முறையில் மராமத்து செய்து சீர்திருத்தம் செய்வீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்து வருமானமும் வரத் தொடங்கும்.

ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரத்தில் ராசிக்கு 6 – ம் வீட்டில் மறையும்போது, பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவேண்டும்.

யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டுச் சிக்கலில் மாட்டிக் கொள்ளவேண்டாம். இந்த 2 மாதங்கள் மட்டும் கவனமாக இருந்தால் போதும். அதன் பிறகு வரும் நாள்கள் அமோகமாக இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு: பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். உங்களை எதிரியைப் போல பார்த்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். மூத்த அதிகாரிகள் உங்களைப் புரிந்துகொண்டு பதவி உயர்வு அளிப்பார்.

சக ஊழியர்களும் உங்களுக்கு முழுமையாக உதவுவார்கள்.வியாபாரிகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் தொல்லை கொடுத்து வந்த பணியாளர்களை நீக்கிவிட்டு, புதிய பணியாளர்களை நியமிப்பீர்கள். பங்குதாரர்களும் இனி ஆதரவாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான லாபம் கிடைக்கும்.

பெண்களுக்கு: இதுநாள் வரை இருந்த தொய்வான நிலைமை மாறும். மாமியார், நாத்தனார் வகையில் இருந்து வந்து தொந்தரவுகள் விலகும். கணவன்- மனைவி உறவு பலப்படும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். ஒரு சிலருக்கு புதிய இடத்தில் வேலைக் கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் இதுவரை ஞாபகமறதியால் முதல் ரேங்க் வாங்க முடியாமல் கவலைப்பட்டிருப்பார்கள்.இனி வருத்தப்படாதீர்கள். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி, முதல் ரேங்க் வாங்குவீர்கள். உங்களுடைய நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பீர்கள்.

கலைத்துறையினருக்கு: இந்த குருப்பெயர்ச்சி ஓஹோவென்று சொல்ல வைக்கும். உங்களின் முழுத் திறமையும் வெளிப்படும். எங்குச் சென்றாலும், உங்கள் படைப்புகள் பற்றிய பேச்சாகவே இருக்கும்.

பரிகாரம்: நல்ல பலன்களைப் பெற தூத்துக்குடி மாவட்டம், அங்கமங்கலம் எனும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீநரசிம்ம சாஸ்தாவைச் சனிக்கிழமையில் சென்று வணங்கினால் எல்லாவிதத்திலும் வெற்றி கிட்டும். துப்புரவுப் பணியாளர்களுக்கு உதவுங்கள்.

இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித் தரும்.

simma_12517சிம்ம ராசிக்காரர்களுக்கான  குருப்பெயர்ச்சிப் பலன்கள்!

குருப்பெயர்ச்சிப் பலன்கள்! சிம்மம். சிம்ம ராசிக்காரர்களுக்கு பிரபல யோகாதிபதியாகவும் , பூர்வ புண்ணியாதிபதியாகவும் இருக்கும் குரு பகவான், இதுவரை உங்கள் ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்து அலைக்கழித்துக்கொண்டிருந்தார்.

எதைச் செய்தாலும், அதில் ஒரு தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் கொடுத்து வந்த குரு பகவான், 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு 4 -ம் வீட்டில் அமர்கிறார். நீங்கள் செய்யும் செயல்களில் கொஞ்சம் அலைச்சலும் செலவுகளும் இருக்கத்தான் செய்யும்.

தாயாரின் உடல்நலத்தில் நீங்கள் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தாயாரிடமும், தாய் வழி உறவினர்களிடமும் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபங்கள் வரவும் வாய்ப்பு உள்ளது.

வீடு, வாகனம் வாங்கும் அமைப்பு உள்ளது. வீடு, மனை வாங்கும்போது பத்திரங்களை கவனமாகப் பார்த்து வாங்குவது நல்லது. ஆனால், மனை வாங்கி வீடு கட்டுவதற்கு அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும்.

வாகனம் வாங்கும்போது உங்கள் பெயரில் வாங்காமல் இருப்பதுடன், வீட்டில் எவருக்கு யோக பலன் உள்ளதோ அவரின் பெயருக்கு வாங்குங்கள்.

நான்காம் இடத்தில் குரு இருப்பதால் ஒரு சிலர் வீடு மாற வேண்டிய சூழ்நிலை வரலாம். உறவினர்கள், அக்கம்பக்கம் வீட்டாரை அனுசரித்துச் செல்லவும். வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொண்டு உங்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வீர்கள். 4 -ம் வீட்டில் இருக்கும் குருபகவான் 8 – ம் வீட்டைப் பார்ப்பதால், ஒரு சிலருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லும் யோகம் கிடைக்கும்.

10 – வீட்டைப் பார்ப்பதால், புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்குக் கிடைக்கும். நல்ல லாபமும் தொடர்ந்து கிடைக்கும்.

குரு 12 – ம் வீட்டைப் பார்ப்பதால், புகழ்பெற்ற புண்ணியஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். ஒரு சிலர் குலதெய்வக் கோயிலுக்குப் போய் வருவீர்கள்.

குருப்பெயர்ச்சி

குரு பகவான் 13.3.19 முதல் 18.5.19 வரை அதிசாரத்தில் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்கிறார். அந்தக் காலகட்டத்தை முறையாகப் பயன்படுத்திக்கொண்டால் சிறப்பான பயன்களை அடையலாம்.

ஒரு சிலருக்குப் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவையெல்லாம் கிடைக்கும். இதுநாள் வரை திருமணமாகாமல் இருந்த பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடியும்.

வியாபாரிகளுக்கு, வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருந்து கொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப புதிய முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். புதிய முதலீடு என்றதும் அதிகமாக முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். தேவைக்கேற்ப முதலீடு செய்யுங்கள்.

உத்தியோகஸ்தானத்தை குரு பகவான் பார்ப்பதால், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கும். ஆனாலும், சின்னச்சின்ன தொந்தரவுகள், இடமாறுதல் போன்றவை இருக்கும். மூத்த அதிகாரிகள் முதல் சக ஊழியர்கள் வரை அனைவரையும் அனுசரித்துப்போவது நல்லது. எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி நல்ல பலன்களைத் தரும். கணவன் மனைவி உறவு பலப்படும். மாணவ மாணவிகள் படிப்பில் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப்பார்ப்பது நல்லது. வகுப்பறையில் உங்களின் கவனத்தை முழுமையாகச் செலுத்துங்கள்.

கலைத்துறையினருக்கு இந்த குரு மாற்றம் ஓரளவு நன்மையைக் கொடுக்கும். ஆனால், மார்ச் மாத மத்தியில் இருந்து மே மாதம் மத்திய பகுதி வரை உள்ள காலகட்டம் உங்களுக்கு யோகமானது. நல்லமுறை யில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இந்த குரு மாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும், வேலைப்பளுவையும், இடமாற்றங்களையும் தந்தாலும், கடின உழைப்பால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லுக்குறிக்கை எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீகாலபைரவரை அஷ்டமி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். நல்ல பலன்கள் கிடைக்கும். ஆதரவற்ற மாணவனின் உயர்கல்விக்கு உதவுங்கள்.

இந்த குரு மாற்றம் எல்லா வகையிலும் ஏற்றம் தரும் வகையில் அமையும்.

kanni_12200

கன்னி ராசிக்காரர்களுக்கு குருப்பெயர்ச்சிப் பலன்கள்!

குருபகவான் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் நீங்கள் நிதானமாகவும்,கவனமாகவும் இருப்பது நல்லது. ஏன்?

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2 – ம் வீட்டில் அமர்ந்துகொண்டு தனம், தானிய,சம்பத்தையும் சமூகத்தில் அந்தஸ்தையும், வசதிவாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குருபகவான் 4.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 3 – ம் வீட்டில் அமர்கிறார். இந்த வீட்டில் குருபகவான் இருக்கக்கூடிய காலக்கட்டத்தில் நீங்கள் நிதானமாகவும்,கவனமாகவும் இருப்பது நல்லது.

 குருப்பெயர்ச்சி

நீங்கள் ஒன்றைச் சொல்லப்போக, அதை மற்றவர்கள் வேறு மாதிரியாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால், பேச்சில் கவனம் வையுங்கள். பணம் கொடுக்கல், வாங்கலிலும் முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இழுபறியாகி இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

‘மூன்றாவது வீட்டு குரு, முட குரு’ என்று சொல்வார்கள். நம்மை ஏதாவது ஒருவிதத்தில் முடக்கிப்போடவேச் செய்வார். அதனால், எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்பாகத் திட்டமிட்டே செய்யுங்கள்.

குரு பகவான் 3 – ம் வீட்டில் இருந்து கொண்டு 7 – ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவி உறவு பலப்படும். சின்னச்சின்னதாக சில சண்டைகள் வந்தாலும், அதெல்லாம் குடும்ப நன்மைக்குப் பயன்படும் விதமாகத்தான் இருக்கும்.

ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிலைத்திருக்கும்.

குரு பகவான் 7-ம் பார்வையாக பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், அதேசமயம் ஒரு பக்கம் செலவுகளும் அதிகமாகிக்கொண்டே போகும். 9-ம் பார்வையாக குரு லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் புதிதாகத் தொழில் தொடங்குவீர்கள்.

லாபத்துக்கு எந்தக் குறைவும் இருக்காது. மூத்த சகோதரர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பிள்ளைகளிடம் அவர்களின் குறைகளை மட்டும் பார்க்காமல், அவர்களை ஊக்குவிக்கும்விதமாக நடந்துகொள்ளுங்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்றி எந்தவித மருந்து, மாத்திரையையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் இடைவெளி விட்டுப் பழகுங்கள். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

வியாபாரிகள், வியாபாரத்தின் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவார்கள். பணியாளர்களிடம் கண்டிப்பு காட்டவேண்டாம். முக்கிய நாட்களில் அவர்கள் விடுமுறை எடுத்துக்கொள்வார்கள்.

அதுபோன்ற நேரங்களில் வேலைகளை நீங்களே இழுத்துப்போட்டு செய்ய வேண்டி இருக்கும். பழைய பாக்கிகளைப் போராடி வசூலிப்பீர்கள். பங்குதாரர்களில் ஒருவர் உங்களை ஆதரித்தாலும், மற்றொருவர் மூலமாக மனவருத்தங்கள் வந்து போகும்.

உத்தியோகத்தைப் பொறுத்தவரை மூத்த அதிகாரியை அனுசரித்துப்போவது நல்லது. அவருடன் ஈகோ பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்பு இருப்பாதால், வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகவும், அனுசரித்தும் போவது நல்லது. தேர்வில் வெற்றியும், உத்தியோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை காட்டுங்கள். விளையாடுகிற நேரத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள். கணிதம், வேதியியல் பாடங்களைத் திரும்பத் திரும்ப எழுதிப்பாருங்கள். அறிவாற்றல் கூடும். சின்ன சின்னத் தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள்.

பெண்களுக்கு இந்த குருமாற்றம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வகையில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திடீரென்று அறிமுகமாகிறவர்களை நம்பி, வீட்டுக்கு அழைத்து வர வேண்டாம்.

தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். கலைத்துறையினரைப் பொறுத்தவரை சின்னச்சின்ன தடைகளைத் தாண்டி போராடித்தான் வெற்றிபெற வேண்டியிருக்கும். படைப்புகள் வெளியாவதில் தாமதமானாலும் கடைசியில் வெற்றியே கிடைக்கும்.

இந்த குருப்பெயர்ச்சி மாற்றம் சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், மாமண்டூரை அடுத்த வடபாதி எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீசுயம்பு துர்க்கை அம்மனை ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ராகு காலத்தில் சென்று தீபமேற்றி வணங்குங்கள். இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். இந்த குரு மாற்றம் அமோகமானதாக அமையும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.