பொல்கொல்ல பேருந்து குண்டு வெடிப்பு – 4 முன்னாள் புலிகளுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை!!

0
172

பொல்கொல்ல பகுதியில் பேருந்து ஒன்றுக்குள் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புச் சதியுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வர் கடந்த 10 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சந்தேக நபர்கள் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இவர்கள் நால்வரும், 2008ஆம் ஆண்டு தொடக்கம், 10 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால், குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் கோரியிருந்தனர்.

இதையடுத்து, நான்கு பேருக்கும், தலா 5 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அத்துடன், ஒவ்வொருவரும் தலா 20 ஆயிரம் ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டும் என்றும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.