திருமணத்துக்கு வெளியே உறவு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் பெண்ணின் தற்கொலைக்கும் தொடர்பு இல்லை – காவல்துறை

0
281

தன்னுடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது குறித்து கேட்டபோது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பை கணவர் மேற்கோள் காட்டிப் பேசியதால் சென்னையைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அது உண்மையில்லை என்கிறது காவல்துறை.

சென்னை நெசப்பாக்கத்தைச் சேர்ந்த ஜான் பால் என்பவர் அருகில் உள்ள பூங்கா ஒன்றில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு புஷ்பலதா என்ற பெண்ணுடன் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத் திருமணமாகி, குழந்தை ஒன்றும் இருக்கிறது. இந்த நிலையில், புஷ்பலதா கடந்த சனிக்கிழமையன்று வீட்டில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

தன்னுடன் பணியாற்றும் பெண்ணுடன் ஜான் பாலுக்கு தொடர்பு இருந்ததாகவும் அந்தப் பெண்ணைக் கடந்த வாரம் வீட்டிற்கே அழைத்துவந்ததாகவும் தெரிகிறது.

தன்னுடைய குழந்தைதையும் அந்தப் பெண்ணிடம் கொடுக்க ஜான் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. அதனால் கணவன் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்ட நிலையில், புஷ்பலதா சனிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார்.

ஜான் பாலுக்கு இருக்கும் திருமணத்திற்கு அப்பாற்பட்ட தொடர்பு குறித்து புஷ்பலதா கேட்டபோது, “சுப்ரீம் கோர்ட் இது குறித்து தீர்ப்பு கூறி இருக்கிறது. அதை நீ தட்டிக்கேட்க உரிமையில்லை” என கூறியதாகவும் இதையடுத்தே புஷ்பலதா தீக்குளித்ததாகவும் இந்த விவகாரம் தொடர்பான நாளிதழ் செய்திகள் கூறுகின்றன.

இந்த வழக்கை விசாரித்துவரும் சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் இது குறித்துக் கேட்டபோது இது முற்றிலும் தவறான தகவல் எனத் தெரிவித்தனர்.

“இப்படி ஒரு செய்தி எப்படிப் பரவியதெனத் தெரியவில்லை. இந்த வழக்கை விசாரிக்கும் நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. காவல்துறையிலிருந்து இது தொடர்பாக எந்தச் செய்திக் குறிப்பையும் அனுப்பவில்லை.

வழக்கு தற்போது விசாரணையில் இருக்கிறது. திருமணமாகி 7 ஆண்டுகளுக்குள் நடந்த மரணம் என்பதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கிண்டி ஆர்டிஓ வழக்கை விசாரித்து வருகிறார்.

சந்தேகத்திற்குரிய மரணம் என்பதால் 174வது பிரிவின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது” என்கிறார் இந்த வழக்கை விசாரித்துவரும் ஆய்வாளர் ஃப்ராங்க்ளின் ரூபன்.

ஒரு பூங்காவில் காவலராக வேலை பார்த்துவரும் ஜான் எப்படி உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டிப் பேசியிருப்பார் எனக் கேள்வியெழுப்பும் ஃப்ராங்க்ளின், தற்கொலை செய்துகொண்ட பெண் எழுதி வைத்திருக்கும் கடிதத்திலும் அப்படி ஏதும் வாசகங்கள் இல்லையெனக் கூறுகிறார்.

“தற்போதுவரை ஜான் மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை. ஆர்.டி.ஓ. விசாரணையின் முடிவில்தான் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார் ஆய்வாளர் ஃப்ராங்க்ளின்.

இன்றைய செய்தித் தாள்களில் வந்திருக்கும் செய்தி மிகத் தவறானது என்கிறார் வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்.

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இவ்வாறு வந்திருக்காவிட்டாலும், அந்தப் பெண்ணால் கணவன் மீது புகார் அளித்திருக்க முடியாது. ஏதோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இவ்வாறு வந்திருப்பதால்தான், பெண்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதுபோல சொல்வது மிகவும் தவறு.

ஆனால், அதே நேரத்தல், கணவன் இவ்வாறு கூறியதால் மனமுடைந்து மனைவி தற்கொலை செய்திருந்தால் தற்கொலைக்குத் தூண்டியதாக கணவர் மீது வழக்குப் பதிவுசெய்ய முடியும்” என்கிறார் சுதா ராமலிங்கம்.

தற்போது கணவர் ஜான் பால், காவல் துறையின் பிடியில் வைக்கப்பட்டிருக்கிறார். இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.