மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்!

0
355

மேஷ ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சிப் பலன்கள்!

(4.10.2018 முதல் 28.10.2019 வரை)

mesha_12361மேஷம்: உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் இருந்த குரு பகவான், கணவன் – மனைவி அந்நியோன்யம், குடும்பத்தில் மகிழ்ச்சி, சொத்துச் சேர்க்கை, வசதி வாய்ப்புகளைத் தந்தார்.

உங்களின் பாக்கியாதிபதியாகிய குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து ஓர் ஆண்டுக்கு உங்களை வழி நடத்தப் போகிறார். பிறகு இடையில் கொஞ்ச காலம் வக்ரமாகி ஒன்பதாம் வீட்டுக்குப் போய் மீண்டும் 8 -ம் வீட்டுக்கே வருகிறார்.

இதனால் வருமானம் கொஞ்சம் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. 8-ம் வீட்டில் மறைந்தாலும் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும், மனப்பக்குவத்தையும் தருவார்.

செலவினங்கள் அதிகமாகி கடன் வாங்க வேண்டிய நிலைமையும் வர வாய்ப்பு உள்ளது. கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. அதே நேரம் வெளிநாடுகளுக்கு, வெளிமாநிலங்களுக்குச் சென்று பொருள் ஈட்டுவதற்கு உரிய சாமர்த்தியத்தையும் வழங்குவார்.

ஆனால், 13.3.19 முதல் 18.5.19 வரையுள்ள இரண்டு மாத காலத்தில் வருமானம் பெருகும். திடீர் பண வரவு, செல்வாக்கு, அதிர்ஷ்ட யோகங்கள் உண்டு. அலைச்சலுடன் ஆதாயமும் கிடைக்கும். பயணங்களும் ஏற்படும். தவிர்க்க முடியாத செலவுகளும் இருக்கும். ஆனால், வருமானத்துக்குக் குறைவிருக்காது.

குருப்பெயர்ச்சி

குரு பகவான் 8-ம் வீட்டில் மறைந்திருக்கிற காலகட்டத்தில் உங்களுக்கு ஞாபக மறதி சற்று அதிகமாக இருக்கும். பணம், பொருள்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும். வாகனங்களைப் பயன்படுத்துவதில் கவனம் தேவை. குரு பகவான் 12-ம் வீட்டைப் பார்ப்பதால், வீடு கட்டுவது, திருமணம் போன்ற சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

குருபகவான் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீடு கட்ட சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவலாகி வரும்.

கணவன் – மனைவிக்கிடையே அடிக்கடி சின்னச் சின்ன சலசலப்புகள் வந்து போகும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குரு பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் உடல் நலம் சீரடையும். ஒரு சிலர் வீடு மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றமும், வேலைச்சுமையும் அதிகமாக இருக்கும். மேல் அதிகாரிகளைப் பகைத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை எதாவது மாறுவதாக இருந்தால், மார்ச் மாதம் தொடங்கி மே மாதத்துக்குள் மாறுவது நல்லது.

மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பாடங்கள் அடிக்கடி மறந்துபோக வாய்ப்புள்ளது என்பதால், ஒருமுறைக்கு இரண்டு முறை எதையும் எழுதிப் பார்ப்பது நல்லது. பெண்கள் இந்த ஒரு வருட காலத்துக்குப் பண விஷயத்தில் சிக்கனமாக இருக்க வேண்டும்.

பிள்ளைகள் கேட்கும் பொருள்களையெல்லாம் உடனுக்குடன் வாங்கித் தராமல், அவை அவசியம் தேவைதானா என்பதை ஆராய்ந்து வாங்கிக் கொடுப்பது நல்லது. கலைஞர்களுக்கு புதிய பட வாய்ப்புகள், சம்பள பாக்கி போன்றவை வந்து சேரும்.

பரிகாரம்: பரிகாரமாகக் கரூர் மாவட்டம் வெண்ணெய் மலை என்னும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று வணங்கி வந்தால், நல்ல யோகப்பலன்கள் கிடைக்கும்.

rishaba_12105ரிஷபம் குரு பகவான் இதுநாள்வரை ஆறாம் வீட்டில் அமர்ந்து, அளவற்ற துன்பங்களையும், ஆறாத வடுக்களையும் உங்களுக்குக் கொடுத்ததோடு அவமானங்களையும் தந்து வந்தார். பணக்கஷ்டத்தையும் கூடவே கொடுத்தார்.

அஷ்டமாதிபதியான குரு பகவான், ஆறாவது வீட்டில் இருந்தது ஒரு சிலருக்கு வேண்டுமானால், அதாவது அவரவர்களின் லக்னத்தைப் பொறுத்து லாபத்தைத் தந்திருக்கலாம். ஆனால், மொத்தமாகப் பார்க்கும்போது பலருக்கும் கஷ்டத்தையே கொடுத்து வந்தார்.

குருப்பெயர்ச்சி

இப்போது குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை ராசிக்கு 7 -ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியைப் பார்க்கிறார். 7 – வது வீடு அருமையான வீடு. உங்களின் ராசியை அவர் நேருக்கு நேராகப் பார்ப்பதால், உங்களுக்கு மனதில் உற்சாகமும் தெம்பும் கூடும். முக அழகு கூடும். எதிலும் உங்கள் கை ஓங்கும்.

உங்களுக்கு ஏற்பட்ட வீண்பழிகள் விலகும். சமூகத்திலும் குடும்பத்திலும் உங்கள் மரியாதை உயரும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் பெருகும். முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்துகொள்வார்கள்.

குழந்தைபாக்கியம் கிடைக்காமல் இது நாள் வரை அவதிப்பட்டு வந்தவர்களுக்கு, புத்திரபாக்கியம் கிடைக்கும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் கைகூடி வரும்.

குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

அதிக வட்டிக்கு வாங்கி இருந்த கடன்களையெல்லாம் அடைத்து முடிப்பீர்கள். வங்கிக் கடனுதவியும் உடனடியாக உங்களுக்குக் கிடைக்கும். அஷ்டமச் சனி உங்களைப் பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், குரு பகவான் 7 -ம் இடத்துக்கு வருவது, உங்களுக்கு எல்லாவிதத்திலும் நல்ல பலன்களைத் தரும்.

பழைய பிரச்னைகள் யாவும் தீரும். வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக அமையும். புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கும். அயல்நாடு செல்லும் வாய்ப்புகள் வரும்.

சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுடைய செல்வாக்கு பலவிதத்திலும் அதிகரிக்கும். பார்த்தும் பார்க்காமலும் போன நண்பர்கள் உங்களைத் தேடிவந்து பேசுவார்கள்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அதாவது 13.3.19 முதல் 18.5.19 வரை குரு பகவான் அதிசாரத்தில் ராசிக்கு 8 – ம் வீட்டில் ஆட்சி பெற்று இருக்கப் போகிறார். அந்த காலகட்டத்தில் கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.

குருப் பெயர்ச்சியின் இந்த ஓர் ஆண்டு காலத்தில், ரிஷப ராசிக்கு யோகமான சனி மற்றும் புதனின் நட்சத்திரங்களில் செல்வதால், எல்லா வகையிலும் உங்களுக்குப் பலவித யோகங்கள் வந்து சேரும்.

வியாபாரிகள் இதுவரை தேங்கிக் கிடந்த பொருள்களையெல்லாம் விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்காத நல்லவர்கள் பங்குதாரராக வருவார்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள், இனி அச்சமில்லாமல் பணிபுரியலாம். உங்களின் முழுத்திறமையும் வெளிப்படக்கூடிய பொற்காலம் என்பதால், மூத்த அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். கூடுதல் பொறுப்புகளும் சம்பள உயர்வும் உங்களைத் தேடி வரும்.

மாணவ மாணவிகளுக்கு இதுநாள் வரை படிப்பில் இருந்த அயர்ச்சியெல்லாம் விலகும். அதிகாலையில் எழுந்து படித்து சாதனைகள் படைப்பார்கள். கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறுவார்கள்.

பெண்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி மிகவும் நல்ல பலன்களைத் தரும். சிலருக்கு வேலை கிடைக்கும். புதிதாகத் தொழில் தொடங்கும் வாய்ப்பும் பெண்களுக்கு ஏற்படும்.

கலைத்துறையினர் இதுநாள்வரை வாய்ப்புகளை எதிர்பார்த்து இருந்த நிலை போய், தானாக அவை உங்களைத் தேடி வரும்.வருமானமும் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பு கிடைக்கும்.

பரிகாரம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரிக்கு அருகிலுள்ள தேவதானம் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமை சென்று துளசி மாலை அணிவித்து வணங்குங்கள். எல்லா வகையிலும் உங்களுக்கு நல்லபலன்கள் ஏற்படும். முடிந்தால் ரத்த தானம் செய்யுங்கள்.
இந்த குரு மாற்றம் உங்களை குபரேனாக மாற்றும்.

mithuna_12420மிதுனம். குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றினார்.

குடும்ப வருமானத்தையும் உயர்த்தி, பிள்ளைகளால் பெருமையையும் ஓரளவு நிம்மதியையும் தந்தார். பிள்ளைகளுடைய திருமணத்தையும் நல்லவிதமாகவே நடத்தி முடிக்க உதவிகரமாக இருந்தார்.

குருப்பெயர்ச்சிப் பலன்கள்

அப்படிப்பட்ட குரு பகவான் 4.10.18 முதல் 28.10.19 வரை உங்கள் ராசிக்கு 6 – ம் வீட்டில் மறைகிறார். 6 -ம் வீடு மறைவு ஸ்தானம் என்பதால், கணவன் – மனைவி இருவருக்குமிடையே சச்சரவுகள் வர வாய்ப்பு உண்டு. அதனால், ஒருவருக்கொருவர் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது அவசியம்.

வீட்டுக்குப் புதிதாக நண்பர்களையோ, உறவினர்களையோ அழைத்து வரவேண்டாம். மற்றவர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்டு பழகினால், வீண் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சற்று இடைவெளி விட்டே பழகுவது நல்லது.

13.3.19 முதல் 18.5.19 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 7 – ம் வீட்டில் செல்வதால், அந்தக் காலக்கட்டத்தில் செல்வாக்கு கூடும். திடீர் பணவரவு உண்டு. வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புதிய இடத்தில் வேலை கிடைக்கும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவார்கள்.

குரு பகவான் 6 – ம் வீட்டில் இருக்கும் இந்த ஓர் ஆண்டும் பிள்ளைகள் விஷயத்தில் அடிக்கடி செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் உயர் கல்விக்காகவோ வேலை கிடைத்தோ, பெற்றோரைப் பிரிந்திருக்கும் நிலைமையும் சிலருக்கு ஏற்படலாம்.

குரு 6 -ம் வீட்டில் இருப்பதால், சட்டச் சிக்கல்களை உண்டு பண்ணும் வாய்ப்பு உள்ளது. அதனால், கொடுக்கல் வாங்கல் மற்றும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதில் கவனமாக இருப்பது நல்லது. அரசுக்குச் செலுத்த வேண்டிய வருமான வரி, சொத்து வரி போன்றவற்றை முறையாகச் செலுத்திவிடுங்கள்.

வீடு விற்பதாக இருந்தாலும், வீடு வாங்குவதாக இருந்தாலும் கவனமாக இருக்கவும். 6 – ம் வீட்டில் இருக்கும் குரு, சொந்த வீடு, மனையை விற்க வைக்கும். அப்படி விற்கும்போது முதலில் ஒரு தொகையைக் கொடுத்து எழுதிக் கொண்டுவிட்டு, பிறகு பாக்கித்தொகைக்கு அலையவிடும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவேண்டும் புதிதாக வீடு, மனை வாங்குபவர்கள், தாய்ப்பத்திரத்தை வாங்கி, சரிபார்த்த பிறகே வாங்க வேண்டும்.

வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இந்த ஓராண்டு சுமாராகவே இருக்கும். தொழில் போட்டி அதிகமாகும். புதிய முதலீடுகளில் ஈடுபடவேண்டாம். புதிய பங்குதாரர்களைச் சேர்க்கவேண்டாம். இருந்தாலும் சுக்கிரன், புதனின் ஆதிக்கம் அவ்வப்போது இருப்பதால் திடீர் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். என்னதான் உண்மையாக உழைத்தாலும், உயரதிகாரிகளின் பாராட்டைப் பெற முடியாமல் போகும். பதவி உயர்வுக்கான போட்டித்தேர்வுகளை எழுதி வெற்றியும் பெறுவீர்கள்.

மாணவ, மாணவிகள் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது. பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது நல்லது. குறிப்பாக கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்தப் பயிற்சி முக்கியமாகத் தேவை.

பெண்களுக்கு, அவர்கள் தொடங்கும் வேலைகளில் அலைச்சல் திரிச்சல் இருக்கும். சிரமம் பார்க்காமல் வேலைகளைத் தள்ளிப் போடாமல் செய்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு முடங்கிக் கிடந்த சீரியல்கள், படங்கள் வெளியாகும். பணப்பற்றாக்குறை இருந்தாலும் வருமானத்துக்கு குறைவிருக்காது.

பரிகாரம்: நல்ல பலன்களைப் பெற மதுரை மாவட்டம், சோழவந்தான் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீஇளங்காளியம்மன் கோயிலுக்கு ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் சென்று குங்குமார்ச்சனை செய்து வணங்குங்கள். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவுங்கள். இந்த குரு மாற்றம் அமோகமாக அமையும்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.