`இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா!’ – அமைச்சர் ஜெயக்குமார்

0
134

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தின் பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவேரா என அமைச்சர் ஜெயக்குமார் புகழாரம் சூட்டினார்.

தமிழகம் முழுவதும் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது. மேலும், தமிழகம் என பெயர் சூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதையும் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் நடித்த திரைக்கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். விழா தொடங்குவதற்கு முன்பாக நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில், பின்னணிப் பாடகி சுசீலாவுடன் எம்.ஜி.ஆரின் பாடல்களைப் பாடி அமைச்சர் ஜெயக்குமார் அசத்தினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர், “அண்ணன்மார்கள் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆகியோரின் இணைவு என்பது தமிழகத்தில் நமது இயக்கத்தின் இணையில்லா எழுச்சி. ஏழை, எளியவர்களின் வெற்றிமிகு சின்னமான இரட்டை இலையின் வெற்றியாளர்கள் அவர்கள்.

கழகத்துக்கும், அம்மாவின் ஆட்சிக்கும் துரோகம் செய்ய நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த கழகத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கியான இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம்’’ என்று தனது பேச்சைத் தொடங்கினார்.

தனது உரையில் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து புகழ்ந்து பேசினார். அவர் தனது பேச்சில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ தினகரன், ரஜினி மற்றும் கமல் ஆகியோரை வரிசையாக விமர்சித்தார்.

அவர் தனது பேச்சை முடிக்கும்போது, “சமூக வளர்ச்சிக்காக எதிரிகளைக் களமாடிய போராளிகள் பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா போல நம்முடைய அண்ணன்மார்கள் இ.பி.எஸ்ஸூம், ஓ.பி.எஸ்ஸூம் தமிழக மக்களின் துயர்துடைக்க அம்மா வழியில் இருக்கிறார்கள்’’ என்று பேசினார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.