`நான் வாய் பேச முடியாதவள்!’ – போலி ஃபேஸ்புக் நட்பால் ஏமாந்த வாலிபருக்கு நேர்ந்த துயரம்!

0
243

பெண் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்குத் தொடங்கி, அதன் மூலம் வாலிபரை மயக்கி பணம் மற்றும் மொபைல் போன் மோசடி செய்த இளைஞர்கள் இரண்டுபேரை குமரி போலீஸார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருக்கு பிரபாவதி என்ற ஃபேஸ்புக் ஐ.டி-யிலிருந்து நட்பு கோரிக்கை வந்துள்ளது. தனசேகரன் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் செய்ததால் இருவருக்கும் நட்பு மலர்ந்திருக்கிறது.

பிரபாவதி என்ற ஐ.டி-யில் இருந்து, “நான் வாய்பேச முடியாத பெண். நாகர்கோவிலில் வசித்து வருகிறேன். பேசுவதற்காகத் தனக்கு மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

மருத்துவச் செலவுக்கு உதவி செய்யுங்கள்” என ஃபேஸ்புக் மூலம் தனசேகரிடம் உதவி கேட்டார். மேலும் வாட்ஸ் அப்பில் அது தொடர்பாகக் குறுந்தகவல்கள் சென்றுள்ளது. வாட்ஸ் அப்பில் தனசேகரனை நாகர்கோவிலுக்கு வரும்படி அழைப்புச் சென்றது.

ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் தகவலை நம்பி தனசேகர் ஒருநாள் இரவு வடசேரி பேருந்து நிலையத்துக்கு வந்தார். அவரை சந்தித்த ஒரு வாலிபர், தன்னை பிரபாவதி அனுப்பியதாகவும், அவர் வீட்டுக்கு அழைத்து செல்வதாகவும் கூறி இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

அவர் சிக்னல் கொடுத்ததும் இருள் சூழ்ந்த பகுதியில் இருந்து மேலும் இரண்டு வாலிபர்கள் வந்தனர். வாலிபர்கள் சேர்ந்து தனசேகரை மிரட்டி அவரிடமிருந்த ரூ.80,000 மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர்.

ஃபேஸ்புக் போலி கணக்கு மூலம் தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக உணர்ந்த தனசேகரன் இதுகுறித்து குமரி மாவட்ட போலீஸ் எஸ்.பி-யிடம் புகார் கொடுத்தார். எஸ்.பி உத்தரவின் பேரில் வடசேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காரங்காடு கல்லுவிளையைச் சேர்ந்த பொன்னுலிங்கம் (32). செருப்பான்கோடு பகுதியைச் சேர்ந்த சிவலிங்க ராஜன் (34) ஆகியோர் பெண் பெயரில் போலி கணக்குத் தொடங்கி பரமக்குடி தனசேகரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து பொன்னுலிங்கம் மற்றும் சிவலிங்கராஜன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.