தப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி?? – அனுராங்கி சிங்

0
675

2008 – 2009 ஆண்டுகளில் வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களையும் மற்றும் இளைஞர்களையும் கடத்தி கப்பம் கோருவதை இலக்காகக் கொண்டிருந்த அச்சமூட்டும் கடற்படை கடத்தல் குழுவின் தலைவனை, குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) ஒரு வருட காலமாக நடத்தி வந்த தேடுதல் வேட்டையின் பின்னர் கொழும்பில் வைத்து கைது செய்தனர். –செய்தி –

நேவி சம்பத்தை தேடும் குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரின் தேடுதல் வேட்டை, ஓரளவு யதேச்சையாக நடைபெற்ற சம்பவத்தின் மூலம் முடிவுக்கு வந்தது.

கொள்ளைக் கும்பல் குற்றவியல் பிரிவிற்கு பொறுப்பான அதிகாரியாக கடமையாற்றும் சி.ஐ.டி நிஷாந்த சில்வா, முன்னாள் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ஸவிடம், ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட இரவு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை (17.08.2018) சி.ஐ.டி அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வரவுள்ளார்கள் என்பது பற்றிய விபரங்கள் அடங்கிய ஒரு கடிதத்தை அவரிடம் கொடுப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்.

பொறுப்பதிகாரி சில்வா ஒரு ஜீப்பில் கொழும்புக் கோட்டையில் உள்ள லோட்டஸ் வீதியால் பயணித்துக் கொண்டிருந்தார், அப்போது வீதியால் நடந்து கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டதும் அவன் தனக்கு நன்கு பரிச்சயமானவனாக இருப்பதாக அவர் நினைத்தார்.

Untitled-188-620x405அந்த மனிதன் தாடி வைத்திருந்தான், றபர் செருப்புக்களை அணிந்து சாதாரண ஒரு தொழிலாளியைப் போலத் தோற்றமளித்தான்,

ஆனால் சி.ஐ.டியின் துப்பறியும் மூளைக்குள் ஏதோ கலக்கியதின் காரணமாக, அவர் ஜீப்பை நிறுத்தி, கீழே இறங்கி அவனை நோக்கி நடந்து அவன் செல்லும் பாதையில் அவனை நிறுத்தினார்.

பொறுப்பதிகாரி நினைத்தது சரியாக இருந்தது, உண்மையில் இந்த மனிதனைத்தான் சி;.ஐ.டி யினர் கடந்த ஒன்றரை வருட காலமாக தேடுதல் நடத்திக் கொண்டிருந்தார்கள், அவன்தான் நேவி சம்பத் என்கிற லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, முன்னாள் கடற்படை செய்தித் தொடர்பாளர் உட்பட ஸ்ரீலங்கா கடற்படையைச் சேர்ந்தவர்களால் முக்கியமாக நடத்தப்பட்டுவந்த கடத்தல் மோசடிக் குழுவின் தலைவன் இவன்தான் என நம்பப்பட்டது.

பொறுப்பதிகாரி சில்வா முன்னர் நேவி சம்பத்தினைக் கையாண்டிருந்த காரணத்தால், அவரால் அவனை எளிதில் இனங்காண முடிந்தது.

விளையாட்டு அதன் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டதை அறிந்த சந்தேகநபரும் தனது உண்மையான அடையாளத்தை ஏற்றுக்கொண்டான்.

பொறுப்பதிகாரி சில்வா உடனடியாக சந்தேகநபருக்கு கைவிலங்கிட்டு அவனைத் திரும்பவும் சி.ஐ.டி தலைமை நிலையத்துக்கு கொண்டு சென்றார்.

அவனது கைதினைத் தொடர்ந்து நேவி சம்பத் என்கிற ஹெட்டியாராச்சியை விசாரணைக்காக 48 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்காக அனுமதியை நீதிமன்றத்திடமிருந்து பெற்றார்கள்.

அவன் ஸ்ரீலங்காவுக்கு திரும்பி வந்தது முதல், ஹெட்டியாராச்சி தொம்பேயில் உள்ள ஒரு எஸ்டேட்டில் ஒரு காவலாளியாக பொல்வத்த கலகே அசோகா என்கிற பெயரில் வேலை செய்துகொண்டிருந்தான்.

இந்தப் போலி அடையாள அட்டை ஹெட்டியாராச்சி கைது செய்யப்படும் சமயத்தில் அவன் வசம் இருந்தது.

ஆனால் புலனாய்வாளர்கள் தொம்பேயில் உள்ள அவனது விடுதியை சோதனை செய்தபோது, களனி விலாசத்தைக் கொண்ட மற்றொரு போலி அடையாள அட்டையையும் கண்டுபிடித்தார்கள்.

karanagoda

அட்மிரல் வசந்த கரண்ணகொட

நேவி சம்பத் அல்லது லெப்.கொமாண்டர் ஹெட்டியாராச்சி, முன்னர் ஒருசமயம் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரண்ணகொடவின் தனிப்பட்ட பாதுகாப்பு அலுவலராக கடமையாற்றியிருந்தான்.

அட்மிரல் கரண்ணகொட முதன் முதலில் 2009ம் ஆண்டு ஹெட்டியாராய்ச்சி எல்.ரீ.ரீ,ஈ செயற்பாட்டாளர்களுடன் தொடர்பினைக் கொண்டுள்ளான் என்கிற அடிப்படையில் அவனுக்கு எதிராக சி.ஐ.டி யினரிடம் புகார் செய்திருந்தார்.

சி.ஐ.டி யினர் தங்களுடைய புலனாய்வின்போது, வசதியான தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக ஸ்ரீலங்கா கடற்படை அலுவலர்களைக் கொண்ட ஒரு கும்பலினால் எப்படிக் கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிற நடுங்க வைக்கும் உண்மையை கண்டறிந்தார்கள்.

z_p04-CID-01இந்தக் கும்பல் நேவி சம்பத் என்கிற ஹெட்டியாராச்சியினால் வழி நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் 2008 – 2009ல் கொழும்பிலுள்ள ‘பிட்டு பம்புவ’ கடற்படைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் திருகோணமலை கடற்படைத் தளத்தில் உள்ள ஒரு துப்பாக்கித் தளத்தில் வைத்துக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

இளைஞர்களாகிய ராஜீவ் நாகநாதன், பிரதீப் விஸ்வநாதன், முகமட் சாஜித், கதிரா கேசரன் ஆகியோர். தெகிவளை பெர்ணாண்டே ஒழுங்கையில் வைத்து செப்ரம்பர் 17, 2008ல் கடத்தப்பட்டார்கள்.

கொழும்பின் இதர பாகங்கள் மற்றும் வேறு பிரசேங்களில் நடத்தப்பட்ட கடத்தல்களும் இதனுடன் இணைந்தது, இதே கடற்படை கடத்;தல் வளையம் நடத்திய கடத்தல்கள் மொத்தம் 11. புலனாய்வாளர்கள், உண்மையான கடத்தல்களின் எண்ணிக்கை இதைவிட இரட்டிப்பாக இருக்கலாம் என நம்புகிறார்கள்.

இந்த வருடம் ஜூன் மாதம், சி.ஐ.டி இயக்குனர் எஸ்எஸ்பி சானி அபேசேகரா, நாட்டின் மிகவும் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் சந்தேக நபரான நேவி சம்பத் கைது செய்யப்படாமல் தவிர்ப்பதற்காக நாட்டை விட்டு தப்பிச்செல்ல உதவியளித்து ஊக்குவித்துள்ளார் என பகிரங்கமாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து நேவி சம்பத்தின் இருப்பிடம் பற்றிய கேள்வி ஒரு பெரிய தேசிய கதையானது.

சி.ஐ.டி யினர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள ‘பி’ அறிக்கையின்படி தற்போதைய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி ரவீந்திர (ரவி) விஜேகுணரட்ன கடத்தல் மோசடியில் சம்பந்தப்படவில்லை, ஆனால் ஹெட்டியாராய்ச்சி நாட்டை விட்டுத் தப்பிச் செல்ல உதவி செய்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறார் எனக் கூறுகிறது.

நேவி சம்பத்துக்கு கொழும்பிலுள்ள கடற்படைத் தலைமையகத்தில் அடைக்கலம் வழங்கப்பட்டிருந்த போதிலும், சந்தேகநபரின் இருப்பிடம் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கடற்படையினர் சி.ஐ.டியிடம் வலியுறுத்தினார்கள் என்பதை தெளிவுபடுத்தும் விதமாக சி.ஐ.டி யினர் குறைந்தபட்சம் மூன்று சாட்சிகளிடம் இருந்து பெற்ற ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தனர்.

கடந்தவாரம் சி.ஐ.டி யினர் கோட்டை நீதவான் லங்கா ஜயரட்னவிடம் தெரிவித்தது, இலங்கை வங்கியில் தாங்கள் பராமரித்து வரும் ஒரு விசேட கணக்கில் இருந்து ஐந்து லட்சம்; ரூபாவினை கடற்படை ஹெட்டியாராச்சிக்கு அனுப்பியிருந்தது, அது சந்தேகநபர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்கு உதவுவதற்காக என்று தாங்கள் சந்கேப்படுவதாக. நீதவான் இந்த கணக்கு விபரங்களை புலனாய்வாளர்களிடம் வழங்குமாறு இலங்கை வங்கிக்கு உத்தரவிட்டார்.

2017 ஏப்ரல்17ல் நேவி சம்பத் படகு வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டதாக சி.ஐ.டி நீதிமன்றில் அறிவித்தது.

ஹெட்டியாராச்சியின் சட்டத்தரணி அஜித் பிரசன்னா, ஹெட்டியாராச்சி ரவிராஜின் வழக்கில் இருந்து விடுதலையானபின் அவருக்கு திரும்ப வழங்கப்பட்ட சம்பளப் பணத்தையே ஹெட்டியாராச்சி பெற்றுள்ளார் என வாதிட்டார். அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதும் அவரது கடற்படைச் சம்பளம் நிறுத்தப்பட்டது.

எனினும் மிகவும் உயர்மட்டத்திலுள்ள வட்டாரங்கள் சண்டே ஒப்சேவரிடம் தெரிவித்தது, ஹெட்டியாராச்சி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட சம்பள நிலுவையை விட இந்த ஐந்து லட்சம் ரூபா வேறானது என்று.

ரவிராஜ் விடயத்தில் இருந்து அவர் விடுவிக்கப் பட்டதும் அவரது சம்பள நிலுவையை அவர் கடற்படையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

இதை அவர் 2017 ஜனவரியில் பெற்றுள்ளார், அவருடைய சம்பள நிலுவைத் தொகை 750,000 ரூபா ஆகும். அவர் இந்தப் பணத்தை தனது கடன்களைத் தீர்க்கவும் மற்றும் ஒரு கொள்கலன் ஊர்தியை குத்தகைக்கு பெறுவதற்கும் பயன்படுத்தினார், என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

மார்ச்3, 2017ல் சி.ஐ.டி ஒரு வாக்குமூலம் வழங்குவதற்கு வரும்படி ஹெட்டியாராச்சிக்கு அழைப்பாணை விடுத்தது.

அதே மாதத்தில் மூன்று அழைப்பாணைகள் வழங்கப்பட்டன. கடிதங்கள் கடற்படைத் தலைமையகத்திடம் கையளிக்கப் பட்டிருந்தது.

ஆனால் ஹெட்டியாராச்சி ஒருபோதும் சமூகமளிக்கவில்லை. பின்னர் சி.ஐ.டியினர் ஹெட்டியாராச்சியின் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றனர், 2017 மார்ச்சில் கொழும்பிலுள்ள கடற்படையினரின் உணவகத்தில் வைத்து சந்தேக நபரை மூன்று முறை சந்திக்கச் சென்றதாக ஹெட்டியாராச்சியின் மனைவி தெரிவித்தார்.

ஆனால் அதேசமயம் ஹெட்டியாராச்சி இருக்குமிடம் தங்களுக்குத் தெரியாது என்று கடற்படை, சி.ஐ.டிக்கு அறிவித்திருந்தது.

சி.ஐ.டி நீதிமன்றில் சமர்ப்பித்த சமற்றொரு சாட்சியின் வாக்குமூலத்தின்படி, லெப் கொமாண்டர் லக்சிறி, ஹெட்டியாராச்சிக்கும் மற்றும் அப்போதைய தளபதி விஜேகுணரட்னவுக்கும் இடையே நடந்த சம்பாஷணையின்போது உடனிருந்ததாக, சந்தேக நபர் உணவு விடுதியை விட்டு வெளியேறுவதை கண்ட தளபதி விஜேகுணரட்ன. ஹெட்டியாராச்சியிடம் எங்கே போகிறாய் என்று கேட்டார்.

அதற்கு ஹெட்டியாராச்சி தான் தனது மனைவியை காணச் செல்வதாகவும் அவள் வெளிச்சவீட்டின் அருகே தனக்காகக் காத்துக்கொண்டிருப்பதாகப் பதிலளித்தான்.

தளபதி ஹெட்டியாராச்சியிடம் காவல்துறையினர் அவனைத் தேடிக்கொண்டிருப்பதாக எச்சரிக்கை செய்ததாக லக்சிறி கூறுகிறார்.

இந்த சாட்சிகள் அனைத்தையும் சி.ஐ.டி நீதிமன்றிற்கு அறிவித்தது, நேவி சம்பத்தை, இளைஞர்கள் கடத்தப்பட்ட சி.ஐ.டி விசாரணையில் இருந்து பாதுகாப்பதற்காக, ஸ்ரீலங்கா கடற்படையின் உயர்மட்டத்தினர் முயற்சி செய்துள்ளார்கள் என்பதை தெரியப்படுத்துவதற்கே.

கடந்தவாரம் அவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹெட்டியாராச்சி வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்திருப்பது, சி.ஐ.டியிடம் இருந்து முதல் அழைப்பாணை வந்தபோது தான் கடற்படைத் தலைமையகத்தில் இருந்ததாகவும் ஆனால் இரண்டாவது வந்தபோது இருக்கவில்லை என்பதாக.

எனினும் சி.ஐ.டி துப்பறிவாளர்கள் சந்தேக நபரின் பாதுகாப்பாளர்கள் என்று சொல்லப்படுவர்கள் குற்றவாளிகள் அல்ல என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சொல்லப்படும் பொய் இது என்று நம்புகிறார்கள்.

ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டதில் இருந்து நடத்தப்பட்ட விசாரணை பற்றிய விபரங்களை இந்த வழக்கு மறுபடியும் ஓகஸ்ட் 29ல் விசாரணைக்கு வரும்போது வெளிப்படுத்துவதற்கு சி.ஐ.டி யினர் எதிர்பார்த்துள்ளார்கள்.

கடத்தல் மோசடி தொடர்பாக தேடப்பட்டுவந்த கும்பலின் தலைவன் இப்போது கைது செய்யப்பட்டுள்ளான், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள நம்புவது ஒரு தசாப்தத்துக்கு மேலான இந்த பாரிய கடத்தல் மற்றும் கொலை வழக்கின் மீது நீதியின் சக்கரங்கள் வெகு விரைவாகச் சுழலும் என்று.

சண்டே ஒப்சேவர் பாதுகாப்பு படைத் தளபதி அட்மிரல் ரவி விஜேகுணரட்னவை தொடர்பு கொள்வதற்கு முயற்சித்தபோது அவர்கள் அலுவலகத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் நாளை அதை பரிசீலனை செய்வதாகத் தெரிவித்தார்.

raviraj-murder-400-seithy

ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினரான ரவிராஜ்

லெப்.கொமாண்டர் ஹெட்டியாராச்சி எப்படி நேவி சம்பத்தாக மாறினார்

ஸ்ரீலங்கா கடற்படையின் லெப். கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி அவரது தற்போதைய பிரபலமான புனைபெயரான நேவி சம்பத்தாக மாறியதுக்கு காரணம் 2006ல் கொழும்பில் வைத்து ரிஎன்ஏ பாராளுமன்ற உறுப்பினரான ரவிராஜ் கொலை செய்யப்பட்டதில் அவருக்கு இருந்த தொடர்பே ஆகும்.

தேசிய புலானாய்வுப் பணியகம் (என்.ஐ.பி) என அழைக்கப்படும் அரசாங்க புலனாய்வு சேவை, எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட இராணுவம் கடற்படை மற்றும் வான்படை என்பனவற்றைச் சேர்ந்த புலனாய்வு வீரர்களுக்கு பொறுப்பாக இருந்தது.

என்.ஐ.பி யின் பணிப்பாளர் மூத்த டி.ஐ.ஜி கஜநாயக்கா ஆவார். லெப்.கொமாண்டர் ஹெட்டியாராச்சி என்.ஐ.பி யில் செயற்படும் கடற்படை வீரர்களின் புலனாய்வுக்குப் பொறுப்பாக இருந்தார்.

இந்த நேரத்தில்தான் ரவிராஜின் கொலைக்கு மேடை அமைக்கப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. ஹெட்டியாராச்சி மற்றும் அவரது குழுவினர் ரவிராஜின் கொலைக்கு முன்பே மாற்றுப் பெயர்களை வைத்திருந்தார்கள்.

லெப். கொமாண்டர் ஹெட்டியாராச்சி தனது குழு அங்கத்தவர்களிடம் மற்றைய படைப் பிரிவுகளின் புலனாய்வு வீரர்களிடம் இருந்து ஏற்படும் குழப்பத்தை தவிர்ப்பதற்காக தன்னை நேவி சம்பத் என அழைக்கும்படி கேட்டிருந்தான்.

நேவி சம்பத் என்கிற பெயர் மாற்றம் ரவிராஜின் கொலை வழக்கில் கடற்படை அணியினரால் வழங்கப்பட்ட சாட்சிகளினால் உறுதிப்படுத்தப் பட்டிருந்தது.

தேனீ மொழிபெயர்ப்பு எஸ்.குமார்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.