தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர்த்திருவிழா! (Video)

0
529

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த்திருவிழா நேற்று வியாழக்கிழமை(23) காலை சிறப்பாக இடம்பெற்றது.

வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பட்டாடைகள் ஜொலி ஜொலிக்க அலங்கார நாயகியாக துர்க்காதேவி மெல்ல மெல்ல அசைந்தாடி உள்வீதி வலம் வந்தாள்.

அதனைத் தொடர்ந்து அம்பாள் திருத்தேரில் ஆரோகணித்தார். சிதறுதேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தடையின்றித் திருத்தேர் பவனி வரும் வகையில் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு ஓதப்பட்டது.

தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் புடைசூழ, அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-09.30 மணியளவில் திருத்தேர் பவனி ஆரம்பமாகியது.

ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் திருத்தேரின் வடம் தொட்டிழுக்க அம்பாள் திருத்தேரில் பவனி வந்த காட்சி வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகுத் திருக்காட்சி.

அம்பாள் திருத்தேரில் பவனி வந்த போது பல நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணை எடுத்தும், பெண் அடியவர்கள் அடியளித்தும், பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக்கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.

அதுமட்டுமன்றி யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்தும் பறவைக்காவடிகள், தூக்குக் காவடிகள் எடுத்தும் மற்றும் செதில்காவடிகள் எடுத்தும் பல எண்ணிக்கையான அடியவர்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிய காட்சி பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாய் அமைந்திருந்தது.

திருத்தேர் பவனி வந்த போது பல அடியவர்கள் அழுதும் தொழுதும், ஆடியும் பாடியும் துர்க்காதேவியை மெய்யுருக வழிபட்டனர்.

திருத்தேர் பவனி முற்பகல்-10.30 மணியளவில் மீண்டும் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலிருந்து மாத்திரமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்தும், புலம்பெயர் தேசங்களிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பக்திப் பெருக்குடன் கலந்து கொண்டனர்.

00 (2)00 (3)00 (4)00 (5)00 (6)00 (8)00 (9)00 (10)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.