இந்திய சமாதானப் படை வருகையும், தென் இலங்கையில் பயங்கரவாதமும்!! : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-9) -வி.சிவலிங்கம்

0
1362

வாசகர்களே!

இலங்கையில் தேசிய இனப் பிரச்சனை என்பது ஜனநாயகக் கோரிக்கையாகும்.

இவ் ஜனநாயகக் கோரிக்கையை இலங்கை அரசு ராணுவ வன்முறையைக் கட்டவிழ்த்து ஒடுக்க எண்ணும்போது அதற்குப் பதிலிடையாக இன்னொரு வன்முறை உருவாவது தவிர்க்க முடியாதது.

இதனை அரச தரப்பு பயங்கரவாதம் என அடையாளப்படுத்துவது தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கையை மறுதலிப்பதாகும்.

இலங்கை அரச கட்டுமானங்களான பாராளுமன்றம், நீதிமன்றம், ராணுவம், பொலீஸ், சிறைச்சாலை போன்றனவும் இன விரோத நிறுவனங்களாக மாற்றமடைந்திருக்கையில் தீர்வை அடைவதற்கான மாற்று வழி எதுவாக அமைய முடியும்?

பலவீனமான பிரிவினர் தமது பாதுகாப்புக் கருதி மூன்றாவது தரப்பை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகிறது. இது தமிழ் மக்களின் தவறாக இருக்க முடியாது. பதிலாக பெரும்பான்மைச் சிங்கள மக்களே அதற்கான நிலமைகளைத் தோற்றுவித்தார்கள்.

p02bp03l ஜே வி பி

இலங்கை அரசினதும், இனவாத சக்திகளினதும் இறுக்கமான போக்கின் காரணமாக இந்திய சமாதானப் படை இலங்கை வந்த போது இவை இலங்கை அரசின் பலவீனத்தை உணர்த்துவதாக ஜே வி பி இனர் கருதினர்.

நாட்டில் தொழிலாள, விவசாய முற்போக்கு அரசைத் தோற்றுவிப்பதற்காக போராடுவதாகக் கூறிய ஜே வி பி இனர் இந்திய சமாதானப் படையினரை ஆக்கிரமிப்புப் படையாகக் காட்டி சிங்கள பௌத்த தேசியவாதத்தை உக்கிரப்படுத்தினர்.

மாக்சிஸ அடிப்படைகளைக் கொண்ட இடதுசாரிக் கட்சி எனத் தம்மை வர்ணித்த இத் தரப்பினர் ஈற்றில் பௌத்த சிங்கள பேரினவாத சகதியில் தாமும் வீழ்ந்தனர்.

இதன் காரணமாக வடக்கில் குறும் தமிழ்த் தேசியவாதம் ஆயுதப் போராட்டத்தை நடத்தத் தயாராகையில், தெற்கில் சிங்கள பௌத்த பேரினவாத தேசியவாதமும் ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது.

907069867

இந்திய படையினர் வருகை

வடக்கிலும், தெற்கிலும் இடம்பெற்ற ஆயுதப் போராட்டங்களுக்கு ராணுவமே முகம் கொடுத்தது.

தமிழ் மக்களிடையேயும், சிங்கள மக்களிடையேயும் எழுந்த இப் போராட்டங்களை ராணுவம் எவ்வாறு கையாண்டது? எவ்வாறு விளக்கியது? தமிழ் மக்களால் நடத்தப்பட்ட போராட்டத்தை இனவாத கண்ணோட்டத்திலும், சிங்கள மக்களால் நடத்தப்பட்டதை அரசைக் கவிழ்க்கும் நோக்கம் கொண்டதாக கருதினார்களா? இப் போராட்டங்களை ஒரே விதமாகக் கையாண்டார்களா? அல்லது இரு வேறு விதமாக நடத்தினார்களா? இதுவே இனித் தொடரும் பகுதியின் சராம்சமாக, அனுபவமாக இருக்கப் போகிறது.

இந்திய சமாதானப் படையின் வருகை இலங்கையின் அரசியலில் புதிய அனுபவமாகும். இவர்களின் வருகையை நாட்டின் ஒரு பிரிவினராகிய தமிழ் மக்கள் ஆதரித்து வரவேற்ற போது, இன்னொரு பகுதியினராகிய சிங்கள மக்கள் வெறுத்துப் போராட உற்சாகப்படுத்தப்பட்டார்கள். அரச கட்டுமானத்தைத் தூக்கி எறியும் தருணத்தை எதிர்பார்த்திருந்த ஜே வி பி இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியது.

‘குரங்குகளின் ராணுவத்தை விரட்டுங்கள்’

ஜே வி பி இனர் ராமாயண இதிகாசத்தில் சீதையை மீட்க அனுமான் தலைமையில் குரங்குகள் பட்டாளம் இலங்கைக்கு வந்ததாக கூறப்படும் கதையைத் தமக்குப் பக்க பலமாகவும், இந்தியப் படைகளைச் சிறுமைப்படுத்தும் வகையிலும் ‘குரங்குகளின் ராணுவத்தை விரட்டுங்கள்’ என சிங்கள மக்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

அச் சமயத்தில் இந்த வாசகம் சிங்கள மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. இந்திய ஆக்கிரமிப்பை உடையுங்கள் என்பதே பிரதான கோட்பாட்டுச் செய்தியாகவும் இருந்தது.

இலங்கையின் முப்படைகளுக்குள் இந் நிலமைகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவின. தமது சொந்த உயிர்களுக்குப் பயந்த ஒரு சாரார் நாட்டின் பாதியை இந்தியாவிடம் கையளித்து நாட்டின் ராணுவத்தையும், மக்களையும், தம்மையும் பாதுகாக்க தயாரானார்கள்.

இன்னொரு சாரார் சமாதானப் படையின் பிரவேசத்தை முழுமையாக எதிர்த்தனர். நானும், எனது சக அதிகாரிகளும், ராணுவத்தினரும் இந்திய ராணுவ வருகையை மிகவும் கடுமையாக எதிர்ப்பது என்பது தினமும் வளர்ந்து சென்றது.

நாம் கோபமடைந்தும், வருத்தப்பட்டும் எதுவுமே கையாலாகாத நிலையில் இருந்தபோது எமக்கான வேளையை எதிர்பார்திருந்தோம். இந்தியத் தலைவர்களே பயங்கரவாதம் என்ற நோய் பரவுவதற்குக் காரணமானவர்கள். அவர்களே இப் புலிக் குட்டிகளுக்குத் தீனி போட்டு வளர்த்தார்கள்.

பிரபாகரனும், அவரது சகாக்களும் எவ்வாறான சிந்தனையில் இருப்பார்கள்? என்பதை நாம் நன்கு அறிவோம். தனக்கு எதிராக எவர் தடைகளைப் போட்டாலும் அது தாய், தந்தையராகிலும் அவற்றை ஒழிப்பது பிரபாகரனின் கோட்பாடு.

போக்கு என்பதையும் நாம் அறிவோம். எனவே சமாதானப் படையினருக்கு எதிராக தனது ஆயுதங்களை உயர்த்துவார் என்பதை நாம் அறிந்திருந்தோம். எனவே தாம் ஊட்டி வளர்த்த புலிக் குட்டிகளிடமிருந்தே அந்தக் கசப்பான மருந்துகளைப் பெறுவார்கள் என நம்பினோம்.

இந்திய சமாதானப் படையினரை வடக்கில் ஆண், பெண், சிறுவர்கள் எனப் பலரும் மாலையிட்டு வரவேற்றபோது இந்த மாலைகள் கற்களாக, துப்பாக்கி ரவைகளாக மாறும் காலம் வெகு தூரத்திலில்லை.

ஜனாதிபதி ஜே ஆர் அவர்கள் பாரிய இந்திய ராணுவத்தின் பின்னணியில் அடக்கமுள்ள அயலவராக வாழ எண்ணிய அவர் இச் சமாதான ஒப்பந்தம் மீண்டும் சுற்றிவந்து இந்தியாவே அதற்கான விலையைக் கொடுக்கவேண்டி ஏற்படுமென்பதையும் உணர்ந்திருந்தார்.

இந்தியப் படையினர் யாழ். குடாநாட்டிற்குள் நிறுத்தப்பட்ட போது எம்மை ஜே வி பி இனரால் அமைதி குலைந்து காணப்படும் பகுதிகளுக்கு அனுப்பும் நோக்கில் கொழும்பிற்கு அழைக்கப்பட்டோம்.

சமாதானப் படையினரின் வருகையைப் பயன்படுத்தி அரசைக் கவிழ்க்க மே வி பி யினர் திட்டமிட்டிருந்தனர். இவர்கள் இந்திய சமாதானப் படையினருக்கு எதிராகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிராகவோ போரிடத் தயாராக இருக்கவில்லை.

பதிலாக இலங்கை அரசைப் பலவீனப்படுத்துவதே நோக்கமாக இருந்தது. அதற்காக பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி இழப்புகளைச் சந்திக்கும் எம்மை நோக்கியே தாக்குதலை நடத்தத் தயாரானார்கள்.

இவ்வாறான அநீதிக்கும், அவமானத்திற்கும் உலகில் எந்த ஒரு ராணுவமும் முகம் கொடுத்திருக்க முடியாது.

எமது ராணுவத்தின் மீது நன்றி செலுத்தும் போக்குகள் மாறி தூக்கமின்றி காடுகளுக்குள் வாழ்ந்து, தமது இளமை வாழ்வைத் தியாகம் செய்து, தமது தாய் நாட்டிற்காக ரத்தம் சிந்த தயாராகிய இளைஞர், யுவதிகளை எண்ணிப் பார்க்கிறேன்.

ஆரம்பத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் ஒரு சில ராணுவத்தைத் தாக்கியவர்கள் நாட்கள் கடந்து செல்ல தினமும் ராணுவத்தினர் கொல்லப்படுவது சகஜமாகியது. இத் தாக்குதல்களால் ராணுவத்தினரின் உளவியல் போக்குகளில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.

இவ் வேளையில் ஜே வி பி இனர் ‘தேசாபிமான மக்கள் முன்னணி’ என்ற புதிய அமைப்பைத் தோற்றுவித்து அதன் பெயரால் பல தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இந்திய எதிர்ப்பு என்பது இளைஞர் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

குரங்குகளின் படையை அகற்று’ என்பது மக்களின் மனப் பாடமாக மாறியது. இந் நோக்கத்திற்குத் தடையாக இருந்த ராணுவத்தின் பலத்தையும், அதிகாரத்தையும் ஒடுக்க எண்ணினார்கள். தமது பயங்கரவாத தந்திரங்களால் ராணுவத்தின் உளவியலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தினார்கள்.

ஆரம்பத்தில் அவர்களின் பிரச்சாரம் ‘போரில் பயன்படுத்தாத வாளை வைத்திருந்து என்ன பயன்?’ என ஆரம்பித்து இந்திய ராணுவத்திற்கு எதிராக பயன்படுத்தாத துப்பாக்கியை வைத்திருந்து என்ன பயன்? என மறைமுகமாக ராணுவத்தை நோக்கி உற்சாகப்படுத்தினார்கள்.

user311432_pic7812_1313418986ராணுவத்தினரை நோக்கி ‘ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போராடாமல், ராணுவச் சீருடையை அணிந்து, துப்பாக்கியை வைத்திருப்பதில் என்ன பயன்? ஆக்கிரமிப்பாளருக்கு எதிராக போராடுங்கள்.

இல்லையேல் சீருடயை வீசி எறிந்து ஆயுதங்களுடன் எம்முடன் இணையுங்கள்’ என ராணுவத்தைச் சீண்டும் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

ஜே வி பி இனரின் இத்தகைய தந்திரங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதனால் காலக்கெடு விதித்தனர்.

குறித்த காலக்கெடுவிற்குள் சீருடையைக் களைந்து ஆயுதங்களுடன் தம்முடன் இணையாவிடில் மரண தண்டனை என அறிவித்தனர்.

இந்த எச்சரிக்கைகளை நாம் பொருட்படுத்தவில்லை. சில வழி தவறிய இளைஞர்களின் தந்திரங்கள் என எண்ணினோம். ஆனால் காலப் போக்கில் அவை எமது எண்ணங்களைப் பொய்யாக்கின.

முதலில் ஒரு ராணுவ வீரர் தமது எச்சரிக்கையினைப் பொருட்படுத்தவில்லை எனக் கூறி கொலை செய்யப்பட்டார். பின்னர் படிப்படியாக விடுமுறைக்குச் சென்ற ராணுவத்தினர் பலர் அவர்களின் வீடுகளிலிருந்து இழுத்துவரப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

இதனால் சில கோழைகள் மிரட்டலுக்கு அஞ்சி ராணுவத்திலிருந்து விலகினார்கள்.

இருப்பினும் இத் தந்திரமும் பலனளிக்கவில்லை. எனவே அடுத்த கட்டமாக ராணுவத்தினரின் குடும்பங்களை இலக்கு வைத்தார்கள். புதிய விதியைப் பிரகடனப்படுத்தினார்கள்.

ராணுவத்திலிருந்து விலகுங்கள். இல்லையேல் அவர்களின் குடும்பத்தினர் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் என எச்சரித்தனர். தமது தர்ம நெறியாக அகிம்சையை நம்பும் சிங்கள சமூகத்தின் மத்தியில் உள்ள ஒரு பிரிவினர் குடும்ப உறுப்பினர்களைக் கொல்லப் போவதாக எச்சரிப்பது பெரும் சிக்கலான ஒரு நிலமையை ஏற்படுத்தியது.

பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் ராணுவத்தினர் ஒரே இரவில் தேசத் துரோகிகளாக மாற்றப்பட்டார்கள்.

இப் பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் ராணுவத்தின் பெற்றோராகும். ராணுவத்தின் பெற்றோர்கள் பலர் கொல்லப்படுவதாக தினமும் வெளிவந்த செய்திகள் ராணுவத்திற்குள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது.

ராணுவத்தினரும், அவர்களது பெற்றோரும் ‘ தேசாபிமானிகள்’ என்போரால் ‘துரோகிகள்’ ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு துரோகிகளாக அடையாளப்படுத்தப்பட்டு மரணிக்கப்பட்டவர்களின் சவப் பெட்டிகள் இறுதி யாத்திரையின் போது நிலத்திலிருந்து ஒரு அடிக்கு மேல் உயர்த்தி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சிறிய துண்டுக் கயிற்றின் மூலமாக நில மட்டத்தில் அவர்களின் சடலங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இப்படியாக மரணித்த ராணுவத்தின் பெற்றோர்கள் துரோகிகளாக அவமானப்படுத்தப்பட்டார்கள்.

ஒரு சமயம் ஒருவர் என்னிடம் ‘பயங்கரவாதி என்பவர் யார்?’ என வரையறுக்குமாறு வினவினார். ஒருவர் 10,000 பேரைப் பயமுறுத்துவாராயின் அவரே பயங்கரவாதி என்றேன்.

பல மக்கள் கோரமான விதத்தில் படு கொலை செய்யப்பட்டிருப்பதைப் பல தடவைகள் பார்த்து மனம் மரத்துப் போய்விட்டது. ஆனால் ஓர் சமான்ய மனிதன் இவ் வகையான கோர மரணங்களைப் பார்க்கும்போது அது அவர்களைப் பல மடங்கு பயமுறுத்தும்.

ஒரு நாள் இரவு ஓர் முதியவர் இல்லத்திற்கு இத் ‘தேசாபிமானிகள்’ என்ற குழுவினர் சென்று அவரிடம் பல கேள்விகளைக் கேட்ட பின் அவரை அழ, அழ இழுத்துச் சென்று ஓர் பகிரங்கமான இடத்தில் அவரது தலையைக் கல் ஒன்றில் வைத்து இன்னொரு கல்லைப் போட்டு நொறுக்கினர். இச் சம்பவத்தைப் பார்த்த பலர் மனதளவில் பயமுறுத்தப்பட்டிருந்தார்கள்.

இக் கொடுமையான நடவடிக்கைகளால் ராணுவத்தினரின் குடும்பங்களும் தமது இருப்பிடங்களிலிருந்து அகதிகளாக வெளியேறினார்கள்.

தமது பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்பியதற்கான விலையை அவர்களின் பெற்றோர்கள் செலுத்தினார்கள். ராணுவத்திலிருந்து விலகிய சிலர் ‘தேசாபிமானிகள்’ குழுவில் இணைய மேலும் சிலர் விலகி ஒழிந்து கொண்டார்கள்.

இவர்களை ராணுவப் பொலீசார் தேடிப் பிடித்துத் தண்டித்தனர். இவ்வாறு ராணுவத்தினர் பல பிரச்சனைகளை எதிர் நோக்கினர்.

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

தொகுப்பு : வி. சிவலிங்கம்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் விளைவுகள்!! சுதுமலையிலிருந்து இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரபாகரன்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-8) -வி.சிவலிங்கம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.