கெட்ட வார்த்தைக்காக விரட்டி விரட்டி வெளுத்த கமல்… பிக்பாஸ் போட்டியாளர்களை மட்டுமா?!- (வீடியோ)

0
339

நீங்க வேடிக்கை பாருங்க, நான் என் வேலையைப் பார்க்கறேன்’ என்று கறாராகவும், கடுமையாகவும் இன்றைய பிக் பாஸ் தினத்தின் ப்ரமோவில் கமல் கூறுவதன் மூலம் இந்த வாரப் பஞ்சாயத்திற்கான முக்கியத்துவத்தையும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பான அழுத்தத்தையும் முன்பே உணர்ந்திருக்கிறார் என்பது தெரிகிறது.

எதிராளி கோபமாக புகார் தர வரும்போது “எனக்குத் தெரியாதா, நான் பார்த்துக்க மாட்டனா?” என்ற பாவனையில் அவனையும் விட கோபமாக கத்தினால் ‘நம்மள விட இவன் கோவக்காரனா இருக்கானே!” என்று எதிராளி அடங்கி விடுவார். இந்த உத்தியை பார்வையாளர்களிடம் இன்று சிறப்பாக பயன்படுத்தினார் கமல்.

1_10209.pngகோபத்துடன் கோர்ட்டை கழற்றி உதறிப் போட்டதை, இந்தி பிக் பாஸில் சல்மான்கான் ஏற்கெனவே செய்துவிட்டதாக சொல்கிறார்கள். ‘நடிகர்’ கமல்ஹாசனோடு ஒப்பிடும்போது சல்மான்கானை நகலெடுக்கும் அவசியம் எல்லாம் கமலுக்கு நேர்ந்திருக்காது.

ஆனால் – நிகழ்ச்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பவர் சட்டையை மடித்து பேட்டை வஸ்தாது போன்ற தோரணையை தந்திருக்க வேண்டாம் என்கிற நெருடல் இருக்கிறது.

மற்றவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். கமல் செய்திருக்க வேண்டாம். வெகுஜன மனநிலையின் கோபத்தையும் ஆவேசத்தையும் தணிப்பதற்காக அவர் செய்த பல நாடகங்களின் ஒரு பகுதியே அது என்பதாக புரிந்துகொள்ள முடிகிறது.

தன்னுடைய ‘செளகரியமான’ மேடையில், பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் புரிந்துகொண்டு கைத்தட்டும் பார்வையாளர்களை வைத்துக்கொண்டு, பிக்பாஸ் போட்டியாளர்கள் என்கிற எளிய டார்க்கெட்டுகளிடம் திறமையாக கம்பு சுற்றுவதெல்லாம் கமல் போன்ற கலைஞனுக்கு ‘யானைப் பசிக்கு சோளப் பொறி’ போல.

இம்மாதிரியான அசெளகரியங்களைத் தவிர, இன்றைய பஞ்சாயத்தை கமல் திறம்படவும் சமநிலையுடனும் நடத்தினார் என்றே சொல்ல வேண்டும். அவருக்கே உரிய சமயோசிதமும் நகைச்சுவையுணர்வும் பல இடங்களில் ஜொலித்தன.

பாலாஜியின் உண்ணாவிரத டிராமாவை, உணவு ‘அகத்திற்குள்’ சென்றதா? என்று கிண்டலடித்தது ஓர் உதாரணம்.

இதற்காக பாலாஜிக்காக போடப்பட்ட ‘குறும்படம்’ வலிந்து திணிக்கப்பட்ட செயற்கை. பசிக்கு சாப்பிட்டதை பெரிய ‘குற்றமாக’ அம்பலப்படுத்தியிருக்க வேண்டாம்.

‘நாமினேஷன்’ செய்ய மறுத்து ‘என்னை கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்பிடுங்க’ என்று முன்பு தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்த பாலாஜி, அது என்னவென்று கமல் முன்பாகவாவது சொல்லியிருக்கலாம்.

மிக முக்கியமாக, ‘குப்பை’ விவகாரம் தொடர்பாக அவர் அதிகம் பேசாதது ஏமாற்றம். ஒரு சரியான வாய்ப்பில்கூட மெளனம் சாதிப்பது முறையானதல்ல.

மஹத் ஏதோ விசேஷமான சேஷ்டை செய்திருக்கிறார் போலிருக்கிறது. ‘என்ன மஹத்..’ என்று கமல் ஆரம்பித்ததுமே ‘தெய்வமே’ என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்துவிட்டார். ‘சரி, பொழச்சுப் போங்க’ என்று கமலும் விட்டுவிட்டார். என்னவென்று தெரியாமல் நம் மண்டை காய்கிறது.

ஒன்று மட்டும் புரியவில்லை. பிக் பாஸ் ஒரு டாஸ்க் தந்து அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அதைச் சிறப்பாக செய்தால்தான் லக்ஸரி பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்கள் கிடைக்கின்றன. சிறப்பாக செய்பவர்களை பிக் பாஸ் பாராட்டுகிறார்.

ஆனால் அந்த வாரத்தில் வரும் நாட்டாமை ‘நீங்கள் இப்படிச் செய்திருக்க வேண்டுமே, அல்லது செய்திருக்க கூடாதே’ என்று குழப்புகிறார். ‘நாங்க என்னதான்யா பண்றது’ என்று போட்டியாளர்கள் தவிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு பாதுகாவலராகவும் ஆலோசகராகவும் முறையே பாத்திரங்கள் தரப்பட்ட டேனியும் ஜனனியும் ‘தங்களின் பாத்திரங்களுக்கு’ விசுவாசமாகத்தானே இருக்க முடியும்? ‘ஜால்ரா’ என்று கமல் எப்படி கிண்டலடிக்கிறார் என்று புரியவில்லை.

சர்வாதிகாரியின் அட்டூழியங்களை உணர்ந்து மக்களுக்கு ஆதரவாகவும் சில சமயங்களில் அவர்கள் செயல்பட்டார்கள். இதை அவர்கள் விளக்க முற்படும் போது கமல் கவனிக்க விரும்பவில்லை.

இன்னொன்று, ஒருவர் நடிக்கிறார் அல்லது போலித்தனமாக இருக்கிறார் என்பது சம்பந்தப்பட்ட நபரால் மட்டுமே சொல்லக்கூடிய விஷயம். சிநேகனின் கருத்திற்கு ரம்யா கோபப்பட்டதும் இதற்காகத்தான். இதை மற்றவர்களால் சரியாக யூகிக்கவே முடியாது.

ஏன், நாம் போலித்தனமாக இருக்கிறோம் என்று சமயங்களில் நமக்கே தெரியாது. சாவகாசமாக யோசிக்கும் போதுதான் ‘ஏன் அப்படி நடந்து கொண்டோம்’ என்று நம்மையே கடிந்து கொள்வோம்.

ஆக, இது தொடர்பாக பிக்பாஸ் வீட்டில் நிகழும் உரையாடல்கள், குற்றச்சாட்டுகள், விசாரணைகள் போன்றவை, குருடர்கள் யானையைத் தடவி உண்மையை உணர்ந்த கதைதான்.

இதைப் போலவே பார்வையாளர்களும், ‘இவர் வில்லன், இவர் ஹீரோ’ என்கிற சார்புத்தன்மையுடன் மூச்சு விடாமல் மூர்க்கமாக விவாதிப்பது நேர விரயம். அவர்களும் நம்மைப் போலவே நல்லியல்புகளும் தீயகுணங்களும் இணைந்த கலவைதான்.

கமல் குறிப்பிடுவது போல் இந்த நிகழ்ச்சி ஒரு கண்ணாடி. ஒரு சம்பவத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் அறிந்து கொள்ளாமல் மேலோட்டமாக பார்த்து விட்டு போட்டியாளர்களை ‘பங்காளிப் பகையுடன்’ குற்றம் சாட்டுவதை விடவும், இந்தக் கண்ணாடியின் மூலம் நம்முடைய அகங்களைப் பார்த்துக் கொள்வதே இந்த நிகழ்ச்சியின் வழியாக நமக்கு கிடைக்கும் மனலாபமாக இருக்கும்.

கழட்டுவதற்கு வசதியான கோட்டுடன் உள்ளே வந்தார் கமல்ஹாசன். ‘எப்போதும் இல்லாத எதிர்பார்ப்பு. கமல்ஹாசன் என்ன செய்யப் போகிறார்-ன்னு கேட்கறாங்க.. என்ன பண்ணப் போறேன்னு எனக்குத் தெரியும்.

உங்களுக்குத் தெரியாது’ என்கிற பீடிகையுடனும் கறாரான முகத்துடனும் பேசினார் கமல். இந்த வாரத்தின் ‘recap’ ஒளிபரப்பானது.

இதன் பிறகு 47-ம் நாளின் சம்பவங்கள் காட்டப்பட்டன. ‘கஜினிகாந்த்’ படக்குழு சென்றவுடன், வீட்டின் பணிகளுக்கான நபர்கள் பிரிக்கப்பட்டவுடன் காட்சிகள் தொடர்கின்றன.

ஐஸ்வர்யா பயங்கர அப்செட்டிலும் மும்தாஜ் மீது கடுமையான கோபத்திலும் இருப்பதை காண முடிகிறது. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ‘குப்பை கொட்டப்பட்ட’ விவகாரத்தைப் பற்றி சதீஷ், டிடி போன்ற விருந்தினர்களிடம் கேட்டு ஏன் மும்தாஜ் கிளற வேண்டும் என்பது. இன்னொன்று, ‘சமையல் பணிக்கு லாயக்கில்லை’ என்று மும்தாஜ் தன்னை நிராகரித்தது.

 

PART 1

PART 2

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.