இங்கிலாந்து டெஸ்ட்: கோலி அசத்தல் ஆட்டம்; ஆனாலும் இந்தியா தோற்றது ஏன்?

0
241

இந்தியா இங்கிலாந்து இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.

ஆயிரமாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து பரபரப்பான போட்டியில் கட்டுக்கோப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தது.

இந்திய அணி தரப்பில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். இங்கிலாந்தில் நடந்த 2014 டெஸ்ட் தொடரில் மிக மோசமாக விளையாடிய கோலி இம்முறை டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் கடந்துள்ளார்.

194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் எடுத்திருந்தது.

இரண்டு நாள்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் 84 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில் இன்று கோலியும் தினேஷ் கார்த்திக்கும் ஆட்டத்தை தொடர்ந்தார்கள்.

ஆண்டர்சன் பந்துவீச தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை எதிர் கொண்டார்.

ஆண்டர்சன் வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில் மலனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் கார்த்திக்.

கார்த்திக் 50 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்தார். இதையடுத்து கோலியுடன் இணைந்து இங்கிலாந்து பௌலர்களை எதிர்கொண்டார் ஹர்டிக் பாண்ட்யா.

இரண்டாவது இன்னிங்ஸின் 45-வது ஓவரில் ஆண்டர்சன் பந்தை பௌண்டரிக்கு விரட்டி அரை சதத்தை பூர்த்தி செய்தார் கோலி.

_102827449_048486221

எம்.ஏ.கே பட்டோடிக்கு (1967-ல் நடந்த போட்டி) அடுத்தபடியாக இங்கிலாந்து மண்ணில் ஒரே டெஸ்ட் போட்டியில் ஒட்டுமொத்தமாக 200 ரன்கள் அடித்தவர் எனும் பெருமையை பெற்றார் விராட் கோலி.

பென் ஸ்டோக்ஸ் இன்று பந்து வீசிய அவரது முதல் ஓவரில் இங்கிலாந்தில் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தினார். இந்திய அணித்தலைவர் கோலியின் விக்கெட்டையும் ஷமியின் விக்கெட்டையும் வீழ்த்தினார் ஸ்டோக்ஸ்.

கோலி விக்கெட் வீழ்ந்தபோது இந்திய அணியின் ஸ்கோர் 141/7. சந்தித்த 93 பந்துகளில் நான்கு பௌண்டரிகள் உதவியுடன் 51 ரன்கள் எடுத்து பெவிலியன் சென்றார்.

ஹர்திக் பாண்ட்யா சற்றே நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடினாலும் அவரால் இந்திய அணியை கரை சேர்க்க முடியவில்லை.

ஆட்டத்தின் இறுதி விக்கெட்டாக பாண்ட்யா வீழ்ந்தார் . 61 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா இரண்டு விக்கெட்டுகளையும் சாம் குர்ரான் மற்றும் அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

_102827450_e94db428-239e-46e7-98f9-0c8f5391919a

இந்தியா சறுக்கியது எங்கே?

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 287 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அரைசதம் அடித்திருந்தனர். அஷ்வின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்தது. அதில் விராட் கோலி 149 ரன்கள் குவித்திருந்தார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக ஷிகர் தவான் 26 ரன்கள் எடுத்ததே இந்திய அணியில் அடுத்த அதிகபட்சம். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸில் 13 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து, இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறியது. 87 ரன்களுக்கு ஏழு விக்கெட்டை இழந்திருந்தது.

அப்போது சாம் குர்ரன் அதிரடியாக விளையாடினார் 65 பந்துகளில் ஒன்பது பௌண்டரி இரண்டு சிக்ஸர் உதவியுடன் 63 ரன்கள் குவித்தார்.

இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் 180 ரன்கள் எடுத்திருந்தது. இஷாந்த் ஷர்மா ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸிலும் கோலியை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை.

இந்திய அணியின் தொடக்க வீரர்கள், ரஹானே, லோகேஷ் ராகுல் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்காததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு மங்கியது.

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் கடைசி மூன்று விக்கெட்டுகளுக்கு 93 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்திய அணியின் கடைசி நான்கு விக்கெட்டுகள் 23 ரன்களுக்கு விழுந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.