அனுராதபுரத்தில் உள்ள பஸ் நிலையத்துக்குள் புகுந்து 120 பொதுமக்களை சுட்டுக்கொன்ற புலிகள்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-7) -வி.சிவலிங்கம்

0
2153

• பெரும் முழக்கத்துடன் இந்திய மிராஜ் 2000 போர் விமானங்கள் எமது வானத்தில் பறக்கும் கோரத்தை நாம் பார்த்தோம்!! அச்சத்தில்..!!

• வடமராட்சித் தாக்குதல் நடைபெற்ற வேளையில் இந்தியா தலையிடப் போவதாக கதைகள் பரவின. இது ராணுவத்தினர் மத்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

• 1985ம் ஆண்டு மே 14ம் திகதி விடுதலைப்புலிகள் பௌத்த மக்களின் புனித ஸ்தலமான அனுராதபுரத்திலுள்ள சிறீ மகாபோதி ஆச்சிரமத்தில் 120 அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர்

• வடமராட்சித் தாக்தல்களை இலங்கை ராணுவம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்திய அழுத்தங்கள் தொடர்ந்தன.

தொடர்ந்து…

எல்லைப்புற சிங்கள மக்களும், ராணுவமும்

எல்லைப் புறங்களிலே வாழ்ந்த தமிழ் மக்களும், சிங்கள மக்களும் மிகுந்த அச்சத்தில் வாழ்ந்தார்கள்.

புலிகள் சிங்கள மக்களைத் தாக்கும் போது அவர்களைப் பாதுகாப்பதும் ராணுவத்தின் பாரிய பொறுப்பாகியது. இதன் காரணமாக எல்லைப் புறத்தில் வாழ்ந்த சிங்கள மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் எவ்வாறு இருந்தன? என்பதை தமிழ் மக்கள் அறிவது அவசியமானது. ஏனெனில் இத் தகவல்களை ராணுவத்தினரால்தான் விரிவாக தர முடியும்.

இங்கு மக்களுக்கு ராணுவத்தினால் போதிய பாதுகாப்புகளை வழங்க முடியவில்லை. இதனால் எல்லைப்புற கிராமங்களில் வாழ்ந்த சிங்கள மக்கள் புலிகளால் தாக்கப்பட்ட போது ராணுவம் அந்த மக்களிடம் பெரும் எதிர்ப்புகளைச் சந்தித்தது.

இவற்றை மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன இவ்வாறு விபரிக்கிறார்.

நாம் எந்த மக்களைப் பாதுகாக்க விரும்பினோமோ அந்த மக்கள் எமக்கு எதிராக தமது கோபங்களைத் திருப்பினார்கள்.

எல்லைப் புறத்திலுள்ள ஒரு பகுதி மக்கள் தாக்கப்பட்ட போது அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் நாம் அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாத நிலையிலும் எம்மையே ஏசினார்கள்.

வெலிஓயா பகுதியிலுள்ள எத்தவிதுனுவேவ ( Ethawetunuwewa) என்ற கிராமத்திலிருந்த பல பொது மக்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

இச் சம்பவத்தைத் தொடர்ந்து எனது படை அணியுடன் எமது உயிர்களையும் பொருட்படுத்தாது விரைந்து சென்றோம்.

அங்கு சுமார் 30 பொதுமக்கள் மரணித்திருந்தார்கள். ஏனையோரை நாம் பாதுகாத்தோம். இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அழுதபடி எம்மைத் திட்டினார்கள்.

ஏம்மைப் பாதுகாப்பதற்காக அரசு உங்களுக்குச் சம்பளம் வழங்குகிறது. உங்களால் பாதுகாப்பு வழங்க முடியாவிடில் சீருடைகளை எறிந்து விட்டு அரச பணத்தை வீணடிக்காமல் வயலில் வேலை செய்யுங்கள் எனக் கிண்டலடித்தனர்.

இன்னொரு பிரிவினர் ‘நீங்கள் சகலரும் புலிகள் எம்மைத் தாக்க இடமளிக்க மாட்டோம் எனப் பொய் கூறினீர்கள். ஆனால் அவர்கள் எம்மைத் தாக்கினார்கள். உங்களைப் போன்றோர் இடி தாக்கி மரணிப்பீர்கள்’ என சபித்தார்கள்.

குடியேற்றத் திட்டக் கிராமங்களில் புதிய குடியேற்றவாசிகள் குடியேறியதும், மாவலி அபிவிருத்தித் திட்ட அதிகாரிகள் எம்மிடம் பொறுப்பைக் கையளித்து வெளியேறிவிடுவார்கள்.

நாமே அவர்களுக்கான உணவுப் பங்கீடு, போக்குவரத்து, மருத்துவ வசதி, பாடசாலைகள், நீர் வசதி, விவசாய உபகரணங்கள் போன்றவற்றை வழங்க வேண்டும்.

மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மட்டுமல்ல, இத்தகைய மேலதிக பொறுப்புகளும் உள்ளன. இந் நிலையில் ஒரு சிறிய சம்பவம் நிகழ்ந்தாலும், பயத்தின் காரணமாக அந்த இடங்களை விட்டு ஓடி விடுவார்கள். அவர்களை அங்கு மீண்டும் குடியிருத்துவது பாரிய பிரச்சனையாகும்.

ஓவ்வொரு குடும்பத்திற்கும், 2 ஏக்கர் தரிசு நிலமும், 3 ஏக்கர் வயல் காணியும் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கிராமம் சுமார் 200 முதல் 300 குடும்பங்களைக் கொண்டிருக்கும். அவ்வளவு நிலப்பரப்பைச் சுற்றி பாதுகாப்பு அளிப்பது என்பது பாரிய இலக்கு ஆகும்.

அமாவாசை இருள் காலங்களில் மூலை முடுக்குகளில் ஒவ்வொரு வீடுகளையும் பாதுகாப்பது என்பது மிகவும் சிரமமானது.

இத்தனை கடமைகள் காரணமாக ராணுவத்தினர் ஓய்வு எடுக்கும்போது ஊர்க் காவலர்கள் ( Homms guards) விழிப்புடன் செயற்பட வேண்டும்.

இரு தரப்பினர் மத்தியில் முரண்பாடுகள் எற்படும்போது ஒரு தரப்பினர் பலவீனம் அடைந்தால் அதனைச் சமாளிக்க வேறு குறுக்கு வழிகளை அவர்கள் கையாள்வர். அதே போன்று எல்லைக் கிராமத்தவரை புலிகள் தாக்குவது அவ்வாறான ஒரு காரணமேயாகும். ஏனெனில் ராணுவம் பொதுமக்களைப் பாதுகாக்கச் செல்லும்போது குறைந்த ராணுவத்தினரே புலிகளைத் தாக்க வாய்ப்பு ஏற்படும்.

1985ம் ஆண்டு மே 14ம் திகதி விடுதலைப்புலிகள் பௌத்த மக்களின் புனித ஸ்தலமான அனுராதபுரத்திலுள்ள சிறீ மகாபோதி ஆச்சிரமத்தில் 120 அப்பாவி மக்களைப் படுகொலை செய்தனர்.(அனுராதபுர பேரூந்து நிலையத்தில் வைத்து புலிகளால் மேற்கொள்ளப்பட்ட நேரடி துப்பாக்கி சூட்டுக்காட்சிகள் வீடியோவில். பார்க்கத் தவறாதீர்கள்)

அதன் பின்னர் வில்பத்து வன விலங்கு காப்பகத்தில் மேலும் 18 பேரைக் கொன்றனர். இவை புலிகளால் ஒளி நாடாவில் பதியப்பட்டிருந்தன. அவற்றை நான் பார்த்தேன். அவர்கள் அந்த மக்களைத் துரத்தித் துரத்திக் கொன்றனர்.

இக் கொடும் செயல் இடம்பெறலாமென உளவுத் தகவல்கள் கிடைத்திருந்தன. ஆனால் எவரும் அதனைப் பெரிதுபடுத்தவில்லை.

அத் தகவல்கள் குறித்த ஆய்வுகளோ, மாற்று ஏற்பாடுகளோ இதனைத் தடுக்க எடுக்கப்படவில்லை.

அனுராதபுரத்தில் 3 பாரிய ராணுவ முகாம்கள், விமானப் படைத் தளம், பாரிய பொலீஸ் நிலையம் என்பன இருந்தும், உளவுத் தகவல்கள் கிடைத்த போதிலும் அப்போது பொறுப்பில் இருந்தவர்கள் இதனைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இச் சம்பவம் நிகழ்வதைத் தடுக்க எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாத அதிகாரிகள் தமது பொறுப்பிலிருந்து தவறியமைக்காக பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். அல்லது அரசு அவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்க வேண்டும்.

இச் சம்பவம் குறித்து அனுராதபுர மக்கள் மிகவும் கோபமடைந்திருந்தனர். அங்கு பாரிய இனக் கலவரம் ஏற்படலாம் என அச்சம் காணப்பட்டது.

ராணுவத்திலிருந்த தமிழ் அதிகாரிகள் உட்பட அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மிகவும் கவலை அடைந்திருந்தனர். அவர்களில் பலருக்கு அங்குள்ள ராணுவ முகாமில் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும் அன்றைய தினம் துர்அதிர்ஸ்ட வசமாக ராணுவ பொலீஸ் பிரிவினைச் சேர்ந்த கோப்பரல் அங்கிருந்த அப்பாவி மக்கள் சிலரைச் சுட்டுக் கொன்றான்.

இதனைப் பொறுக்க முடியாத உயர் ராணுவ அதிகாரி மேஜர் கருணாதிலக என்பவர் தனது கைத் துப்பாக்கியால் அந்தக் கோப்பரலைச் சுட்டுக் கொன்றார்.

இச் செயலைப் பலர் விரும்பாத போதிலும் ராணுவத்தின் கௌரவத்தைக் காப்பாற்றியதற்காக வாழ்த்தியவர்களும் காணப்பட்டனர்.

anurathas

lankaவடமராட்சித் தாக்குதலுக்குப் பின்னரான இந்தியத் தலையீடு

வடமராட்சித் தாக்குதல் வெற்றிகரமாக முடிவுற்ற பின்னர் எமது அடுத்த தாக்குதலை காங்கேசன்துறையிலிருந்து ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தோம்.

இத் தாக்குதலை யாழ்ப்பாண பிரிகேட்டிற்குப் பொறுப்பான கேணல் விமலரத்ன ஆரம்ப நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இத் தாக்குதலின் முதன் நாளிலேயே இரண்டு இளம் ராணுவ அதிகாரிகளான கப்டன். ராஜ் நவரத்னம், கப்டன் அஜித் உடுகே என்போர் மரணமானார்கள். ராஜ் நவரத்ன என்பவர் ஒரு தமிழராவார்.

அவரின் இயற் பெயர் வேதனாயகம் கனகராஜா என்பதாகும். அவர் தனது பெயரை விரன் ராஜ் நவரத்ன என ஏதோ காரணத்திற்காக மாற்றிக்கொண்டார்.

இச் சம்பவம் நடைபெற்ற வேளையில் இந்தியா தலையிடப் போவதாக கதைகள் பரவின. இது ராணுவத்தினர் மத்தியில் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.

வடமராட்சித் தாக்குதலில் ராணுவத்திற்குக் கிடைத்த வெற்றி இந்திய தரப்பினருக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரணமாக தமது எண்ணங்களை மிகவும் காட்டமாக, திட்டவட்டமாக ராஜதந்திர வழிகள் மூலம் இலங்கை அரசிற்கு இந்தியா வெளிப்படுத்தியிருந்தது.

இருப்பினும் அவற்றை அசட்டை செய்து இலங்கை தனது தாக்குதல்களைத் தொடர்ந்தது. இதன் காரணமாக அப்போதைய ஜனாதிபதி ஜே ஆர் தொடர்பாக கசப்பு உணர்வுகள் அதிகரித்தன.

இலங்கை அரசின் வெளிநாட்டு உறவுகள் இந்தியாவிற்கு எதிரானதாகவும், அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் நெருக்கமடைந்து செல்வதாகவும் உணர்ந்தனர்.

புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக, சிங்களவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

ராணுவத்தின் தற்போதைய தாக்குதல்கள் தமிழர்களை ஒட்டு மொத்தமாக அழிப்பதற்கான முயற்சி என அவர்கள் கருதினர்.

இப் பிரச்சனையில் இந்தியாவுடன் ராஜதந்திர அடிப்படையில் அணுகி பேச்சுவார்த்தைகள் மூலம் இத் தாக்குதலுக்கான நியாயங்களை உணர்த்தியிருக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இருப்பினும் இறுமாப்புடன் செயற்பட்ட எமது அரசு தமது நலன்களை இந்திய எதிர் தரப்புடன் இணைத்துக்கொண்டதால் அவை எரியும் தீயில் மேலும் எண்ணெயை வார்த்தன.

மறு பக்கத்தில் எமது அரசைக் குறை கூறவும் முடியாது. ஏனெனில் புலிகளின் பயங்கரவாத கோட்பாடுகளுக்கு இந்தியா பலமான ஆதரவை வழங்கியதுடன், தமிழ் இளைளஞர்களுக்குத் தனது மண்ணில் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியிருந்தது.

இதனால் இலங்கை மிகவும் பகிரங்கமாகவே இந்தியாவை விமர்ச்சித்தது. தமிழ் நாட்டின் அழுத்தங்கள் இந்திய மத்திய அரசின் மேல் அதிகரிக்க அவை இலங்கை மேல் மேலும் அழுத்தங்களை அதிகரிக்கச் செய்தது. இதன் பின்னணியிலேயே வடமராட்சித் தாக்குதல்களைக் கைவிடுமாறு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்தது.

வடமராட்சித் தாக்தல்களை இலங்கை ராணுவம் ஆரம்பித்த நாளிலிருந்து இந்திய அழுத்தங்கள் தொடர்ந்தன. ஆனால் விளைவுகள் எதுவும் இல்லாமையால் வெறுப்பு அதிகரித்தது.

12_vaiko_jpg_1650042fஅப்போதைய முதலமைச்சர் எம் ஜி; ராமச்சந்திரன், வை கோ, நெடுமாறன் போன்றோர் ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்தனர். இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிடில் தன்னிச்சையாக செயற்படப் போவதாக மிரட்டினர்.

அங்கு இன ஒழிப்பு ஆரம்பமாகி உள்ளதாகவும், ஆயிரமாயிரம் தமிழர்கள் கொல்லப்படுவதாகவும் குற்றம் சாட்டினர். இறுதியில் வட பகுதிக்கு வள்ளங்களில் உணவு மற்றும் மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்லப் போவதாக அறிவித்தனர்.

பதிலாக இலங்கை அரசும் தனது போக்கைக் கடினப்படுத்தியது. தனது கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பவர்களுக்கு மேல் கடுமையாக நடந்து கொள்ளும்படி கடற்படைக்கு உத்தரவிட்டனர்.

இவை நடந்து கொண்டிருந்த வேளையில் வடமராட்சித் தாக்குதல்கள் முடிவடைந்திருந்தன. இதனால் இந்தியத் தலையீடு எவ்வாறு முடியப் போகிறது? என்பதை அறிவதற்கு எமக்கு ஓரளவு மூச்சு விடும் நேரம் கிடைத்தது.

நாம் எதிர்பார்த்தது போலவே தமிழ் நாட்டின் மண்டபம் துறைமுகத்திலிருந்து மனிதாபிமான உதவிகள் வள்ளங்களில் யாழ்ப்பாணத்தை நோக்கிப் புறப்பட்டன.

அரசு கடற்படைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதால் இவ் வள்ளங்களின் கதி என்ன? என அறிவது எமக்கும் ஆவலாக இருந்தது.

மனிதாபிமான உதவிகளை இலங்கை தடுக்குமா? என இந்தியாவும் எதிர்பார்த்த போதிலும் இலங்கை அரசு மசியவில்லை.

இதன் காரணமாக இலங்கையின் கடல் எல்லையில் அவ் வள்ளங்களை நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டது. இந் நிகழ்வு தமிழ் நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே 1987ம் ஆண்டு யூன் மாதம் 3ம் திகதி நாம் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை அங்கு வந்த கேணல் விஜய விமலரத்ன திடுக்கிடும் செய்தியை வெளியிட்டார்.

அதாவது அன்று பிற்பகல் இந்திய விமானப் படையினர் எமது விமான எல்லைக்குள் வந்து அகதிகளுக்கு மனிதாபிமான உதவிகளைப் போடப்போவதாகக் கூறினார்.

இதனை இலங்கை அரசிற்கும் ஏற்கெனவே தெரியப்படுத்தி உள்ளதாகவும் கூறினார். இச் செய்தி எமது உடல்களில் மின்சார அதிர்ச்சியை ஏற்படுத்தியது போலிருந்தது.

இரத்தம் கொதித்தது. சில நிமிடங்களில் பலாலி ராணுவ முகாம் முழுவதும் இச் செய்தி பரவியது. ஓவ்வொரு ராணுவ உத்தியோகஸ்தர் மத்தியிலும் இந்திய எதிப்பு உணர்வு கொப்பளித்தது. பலரும் வானத்தையே அண்ணாந்து பார்த்தார்கள்.

Pawan01

மதிய உணவின் பின்னர் நாம் வசாவிளானிலுள்ள ராணுவ வளாகத்தில் இருந்தோம். அப்போது எம்முடன் பிரிகேடியர் கொப்பேகடுவ, கேணல் விமலரத்ன, லெப்டினட் கேணல் சதீஸ் ஜெயசுந்தர, மேஜர். கோதபய ராஜபக்ஸ, மேஜர். நிமல் பாலிப்பன, மேஜர். சீவலி வணிகசேகர என்போர் உடனிருந்தனர்.

அப்போது பெரும் முழக்கத்துடன் போர் விமானங்கள் வரும் சத்தங்கள் கேட்டது. வெளியில் வந்து பார்த்த போது நான்கு மிராஜ் 2000 போர் விமானங்கள் சுதந்திரமாக எமது வானத்தில் பறக்கும் கோரத்தை நாம் பார்த்தோம்.

அப்போது என்னைச் சூழவுள்ள ராணுவ உயர் அதிகாரிகளின் முகங்களை அவதானித்தேன். அவர்கள் விமானங்களைப் பார்ப்பதும், ஒருவர் முகத்தை மற்றவர் பார்ப்பதுமாக நம்பமுடியாதவர்களாக காணப்பட்டனர்.

தொடரும்…
மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

தொகுப்பு : வி. சிவலிங்கம்

( உத்தரவுடன் பிரதி செய்தல் நல்லது)
(Copy right reserved)
news@ilakkiyainfo.com

ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.