இ–மெயிலை கண்டுபிடித்த தமிழர் மீது இனவெறி தாக்குதல்!!

0
288

இ–மெயிலை கண்டுபிடித்த தமிழர் சிவா அய்யாத்துரை, அமெரிக்க தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் ஆத்திரம் அடைந்த ஒருவர் அவர் மீது இனவெறியில் தாக்கினார்.

நியூயார்க், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் நவம்பர் மாதம் 6–ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு சுயேச்சை வேட்பாளராக போட்டியிட இருப்பவர், சிவா அய்யாத்துரை (வயது 54). தமிழரான இவர்தான் இ–மெயிலை கண்டுபிடித்தார்.

விஞ்ஞானியான இவர் வெளிப்படையாக விமர்சிக்கிற வழக்கத்தை கொண்டு உள்ளார்.

இவர் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து தற்போது செனட் சபை எம்.பி.யாக உள்ள ஜனநாயக கட்சி பிரமுகர் எலிசபெத் வாரனை எதிர்த்து போட்டியிடுகிறார். இவர் அங்கு மிகுந்த செல்வாக்கு உடையவர்.

இந்த நிலையில் சிவா அய்யாத்துரை கிரேட் பேரிங்டன் என்ற இடத்தில் உள்ள நகர்மன்றத்தின் வெளியே கையில் ஒலி பெருக்கியுடன் நின்று கொண்டு இருந்தார்.

அங்கு எலிசபெத் வாரனும் வர இருந்தார். அவருக்காக அவரது ஆதரவாளர்கள் குவிந்து இருந்தனர்.

இந்த நிலையில் சிவா அய்யாத்துரையை பார்த்ததும் அமெரிக்கர் ஒருவர் ஆத்திரத்தில் வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், அவரது முகத்தில் குத்து விட்டார். இதில் அவரது முகத்தில் ரத்தம் வந்தது.

சிவா அய்யாத்துரையை தாக்கிய நபர் அணிந்திருந்த ‘டி–சர்ட்’டில் அவர் எலிசபெத் வாரனின் ஆதரவாளர் என காட்டுகிற ஸ்டிக்கர் இருந்தது.

இது குறித்து பாஸ்டன்.காம் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

சிவா அய்யாத்துரையும் தான் தாக்கப்பட்டது குறித்து டுவிட்டரில் வேதனையுடன் குறிப்பிட்டு உள்ளார்.

அதில் அவர், ‘‘நான் வாரன் ஆதரவு இனவெறியாளரின் தாக்குதலுக்கு ஆளானேன். வெள்ளை மேலாதிக்க வாதிகள் இப்படி நடந்துகொள்கிறார்கள். கருப்பு நிறம் கொண்டவர்களை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை’’ என குறிப்பிட்டு உள்ளார்.

இந்த தாக்குதலை நடத்திய நபரின் பெயர் சோலோவாய் ஆகும்.

74 வயதான அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது தெற்கு பெர்க்‌ஷயர் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

அங்கு அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.