தி.மு.க. தலைவராக இன்று 50வது ஆண்டில் கருணாநிதி… 1969ல் அண்ணா மறைவுக்குப் பின் என்ன நடந்தது?

0
436

கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்து தான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது.’

“என்னுடைய 44 வயது பிறந்தநாளைத்தான் நான் முக்கியமாகக் கருதுகிறேன். அந்தப் பிறந்தநாள் விழாவில் அண்ணாவின் பேச்சு தான் எனக்குச் சிறந்த பிறந்தநாள் பரிசாக அமைந்தது.

‘தண்டவாளாத்தில் தலைவைத்துப் படு என்று சொன்னாலும், அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள் என்று சொன்னாலும், இரண்டையும் ஒன்றாக, சமமாக கருதுபவன் கருணாநிதி’ என்றார்.

அதனால் அந்தப் பிறந்தநாளை முக்கியமான நாளாகக் கருதுகிறேன்” – 1997ம் ஆண்டு ‘முக்கால் சத வயதை நீங்கள் எட்டிவிட்டீர்கள். இதில் எந்த வயதை முக்கியமாகக் கருதுகிறீர்கள்?’ என்ற கேள்விக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அளித்த பதில் இது.

அதே 44வது வயதில் தி.மு.க.வின் தலைவராகவும் உயர்ந்தார் கருணாநிதி. அப்படி கருணாநிதி தி.மு.க.வின் தலைவராகப் பொறுப்பேற்று நேற்றுடன் 49 ஆண்டுகள் நிறைவு பெற்று, 50வது ஆண்டைத் தொட்டுள்ளார்.

49 ஆண்டுகளுக்கு முன்னர் இதேநாளில், அதாவது 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க.வின் தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றார்.

large_anna-karunanidhi-20183அண்ணா மறைவுக்குப் பின்னர்…?

தி.மு.க.வை தலைமையேற்றும், தமிழகத்தின் முதல்வராக ஆட்சியும் நடத்தி வந்த அண்ணா, 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

அடுத்த முதல்வர் யார், தி.மு.க.வை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்ற மிகப்பெரிய கேள்வி அப்போது எழுந்தது.

காலம் கடத்தினால் பிரச்னைகள் உருவாகும் என்பதால் அடுத்த தலைவரை தேர்வு செய்வதில் கட்சி நிர்வாகிகள் வேகம் காட்டினர். அண்ணாவுக்குப் பின்னர் முதல்வர் பதவிக்கு இருவர் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டிருந்தது. ஒருவர் நாவலர் நெடுஞ்செழியன். மற்றொருவர் கருணாநிதி.

‘கட்சியில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் நெடுஞ்செழியன். அவருக்கு அடுத்துத் தான் கருணாநிதி. இவர்கள் இருவரில் ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும்.

அவ்வாறு தேர்வு செய்து விட்டால் பிரச்னைகளோ, நெருக்கடிகளோ இருக்காது; எனக் கட்சியின் மற்ற நிர்வாகிகளும், ஆர்வலர்களும் எண்ணினர்.

‘பிரச்னைகள் ஏதும் உருவாகிவிடக்கூடாது; ஆட்சிக்கோ, கட்சிக்கோ ஆபத்து வந்து விடக்கூடாது. தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.

அதற்குள் மத்திய அரசின் நெருக்கடிக்குள்ளாகி விடக்கூடாது,” என்ற அச்சம் அனைவரிடமும் மேலோங்கியிருந்தது.

kk6_00347

கருணாநிதியை அண்ணா புகழ்ந்ததே காரணம்?

யார் முதல்வராக வர வேண்டும் என்றபோது பலரால் முன்மொழியப்பட்டார் கருணாநிதி. பெரியாரும், ராஜாஜியும் ‘கருணாநிதியே இருக்கட்டும்’ எனச் சொன்னதாக சொல்லப்பட்டது.

அண்ணாவே கருணாநிதி பெயரைப் பலமுறை முன்மொழிந்ததே, கருணாநிதிக்கு ஆதரவை ஏற்படுத்தியிருந்தது.

“வரலாற்றின் முற்பகுதியை நான் எழுதினேன், பிற்பகுதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்” எனத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அண்ணா பேசியதும், `தண்டவாளத்தில் தலை வை’ என்றாலும், ‘மந்திரி பொறுப்பை ஏற்றுக்கொள்’ என்றாலும் இரண்டையும் ஒன்றாகக் கருதுபவன் என் தம்பி கருணாநிதி’ என்று கருணாநிதி பிறந்தநாள் விழாவில் பாராட்டி பேசியதும், “என் தம்பி கருணாநிதி தனிமைச் சிறையில் அடைபட்டுக்கிடக்கும் பாளையங்கோட்டை இடந்தான் எனக்கு யாத்திரை தலம் புனித பூமி’’ என்று பொதுக்கூட்டத்தில் பெருமைபொங்க அண்ணா பேசியதுமே கருணாநிதிக்கு பெரும் ஆதரவை உருவாக்கியதாகவும் சொல்லப்பட்டது.

அண்ணாவுக்கு இரங்கல் கூட்டம் நடந்து முடிந்த மறுநாள் கட்சியின் சட்டமன்றக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் பெரும்பான்மையானோர் கருணாநிதியைத் தேர்வு செய்ய முதல்வரானார் கருணாநிதி.

பெரும்பான்மையானோர் கருணாநிதியை முதல்வராகத் தேர்வு செய்தாலும், கட்சியில் பிணக்கு உருவாகவே செய்தது. எல்லாம் சரிசெய்த பின்னர் 1969ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி தி.மு.க. தலைவராகப் பொறுப்பேற்றார் கருணாநிதி.

இன்று கட்சியின் தலைவராகப் பொன்விழாவில் அடியெடுத்து வைக்கிறார்.

80 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை; தொடர்ச்சியாக 13 முறை சட்டமன்ற உறுப்பினர்; 5 முறை தமிழக முதல்வர் என கடந்த நூற்றாண்டில் பல சாதனைகளைப் படைத்த கருணாநிதி, தற்போது ஒரு இயக்கத்தின் தலைவராக 50வது ஆண்டை துவக்கியதன் மூலம் இன்னொரு சாதனையை படைத்திருக்கிறார்.

karunanidhi.4

‘பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு இல்லை’

“எதற்கு இந்த அரசியல்; எல்லாவற்றையும் விட்டுச் சென்று விடுவோமா’ என எப்போதாவது நினைத்ததுண்டா? என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கருணாநிதியிடம் கேட்டபோது அவர் தன் வாழ்வில் நடந்த சம்பவத்தை பதிலாகத் தந்தார்.

“சிறுவனாக இருந்தபோது நானும் என் நண்பன் தென்னனும் திருவாரூரில் உள்ள கமலாலயம் குளத்தில் நீந்தி மைய மண்டபத்திற்குச் செல்ல முயன்றோம்.

முக்கால் பகுதி தூரம் கடந்து சென்ற பின்னால் என் நண்பன் தென்னனால் நீந்த முடியவில்லை. ‘திரும்பி விடலாம் வா’ என என்னை அழைத்தார்.

f1-02திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான். அதற்கே செல்லலாம்.” எனக்கூறி மைய மண்டபத்தை அடைந்தோம்.

பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அரசியல் நான் விரும்பித் தேர்ந்தெடுத்த பாதை. எல்லாப் பாதைகளிலும் குளிர்ச் சோலையும் இருக்கும்.

சுடும் பாலையும் இருக்கும். பாலையைக் கண்டவுடன் பதுங்கி ஓடுபவன் நானல்ல.” இது தான் கருணாநிதி தெரிவித்த பதில். இந்தக் கதையை கருணாநிதி எங்கெல்லாம் சொல்லியிருப்பார். எத்தனை முறை சொல்லியிருப்பார் எனக் கணக்கே இருக்காது.

அரசியலில் உயரத்தைப் போலவே நெருக்கடிகளையும் சந்தித்தவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் பிரிவால் 13 ஆண்டுகள் ஆட்சி பீடத்தை இழந்தார்.

ஆனால், 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் கட்சி தொண்டர்களைச் சோர்ந்து விடாமல் கட்டுக்குள் வைத்திருந்தார். வைகோ பிரிந்து சென்ற போது ஏற்பட்ட நெருக்கடியைக் கூட்டணி மூலம் சமாளித்தார்.

2ஜி ஊழல், இலங்கை பிரச்னைகளில் சறுக்கினார். காய்த்த மரங்களே கல்லடிபடுகிறது எனச் சொல்வதுண்டு. எதிலும் நீண்ட காலம் தாக்குப்பிடித்திருப்பதில் உள்ள ஒரு சிக்கலாகவே இதைப்பார்க்க வேண்டும்.

‘கருணாநிதியின் அரசியல் எதிரிகள் கூட அவர் பேச்சுக்கு ரசிகர்களாகத் தான் இருப்பார்கள்’ எனச் சொல்வார்கள். ஈழப்பிரச்னையின் போது அவரைத் திட்டித்தீர்த்த இளம் தலைமுறையினர் கூட, தற்போது உடல்நலமின்றி இருக்கும் கருணாநிதிக்காகக் கலங்குவதை காண முடிகிறது.

ஒரு இயக்கத்தின் தலைவராக 50 ஆண்டைத் தொட்டிருக்கிறார் கருணாநிதி. அவர் இப்போது பேசுவதில்லை. ஆனால் அவரைப் பற்றித்தான் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறோம்.

முதுமை முற்றுகையிட்டு கோபாலபுரம் இல்லத்தில் இருக்கிறார் கருணாநிதி. குளத்தில் நீந்தி மையம் மண்டபம் அடைந்த திருக்குவளை சிறுவனைப்போல.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.