வீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன், கள்ளச்சாராய வியாபாரி, பெண்களை வச்சு பிசினஸ் பண்ணியவன்… இதுமட்டும்தானா நான்? ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூம்!!- (பகுதி-1)

0
573

உங்கள்ல யாராவது முகம் சுளிக்கலாம்…

‘கேவலம் கைதி! பெரிய மகாத்மா மாதிரி சுயசரிதை எழுத வந்துட்டான்’னு கோபப்படலாம்!

ஒப்புக்கொள்கிறேன்… நான் மகாத்மா இல்லை… தூக்குத்தண்டனைக் கைதிதான்!

ஆட்டோ சங்கர்ன்னு சொன்னதும் ஆறு கொலை பண்ணிணவன்னுதான் எல்லாருக்கும் ஞாபகம் வரும். தாஜ்மகாலைக்கூட ‘உலகத்தின் அதிசயம்’ன்னுதான் எல்லாரும் சொல்றாங்களே தவிர, ‘உலகத்தின் சோகம்’ன்னு யாரு சொல்றாங்க?

ஆறு கொலைகளைச் செய்து பிணங்களைப் புதைக்க வீட்டு சுவத்தையே கல்லறையா மாத்தினவன். கள்ளச்சாராய வியாபாரி.. பெண்களை வச்சு ‘மாமா’ பிசினஸ் பண்ணியவன்… இதெல்லாம்தானே என்னைப்பத்தி நீங்க தெரிஞ்சிக்கிட்டிருக்கிற விஷயங்கள்? இதுமட்டும்தானா நான்? இந்தப் புகார்களிலே சொல்லப்பட்டது பூரா உண்மைதானா? மொத்தக்குற்றங்களுக்கும் நான் மட்டும்தான் பொறுப்பா? நான் ஒரு ரத்தவெறி பிடிச்ச மிருகமா?

கோர்ட்டும், போலீசும், பத்திரிகைகளும் ஏன் மொத்த ஊரும் என்னை காட்டுமிராண்டியாகவே தீர்மானிச்சு அருவருப்பா ஒதுக்கிடுச்சு. இப்படி ஒரு தனிமரமா- மொட்டை மரமா- இந்த ஆட்டோ சங்கர் யாருமற்றவனா.. கைதி நம்பர் 2841 ஆக சேலம் ஜெயில்லே அடைபட்டிருக்கேன்.

எனக்குத் தூக்கம் வரல. எப்படி வரும்? நாளைக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு. என்ன சொல்லப்போறாங்களோ தெரியல. ஒரு வாரமாவே தூக்கமில்லை. சாப்பிடவும் இல்லை. ரெண்டு மூன்று நாளாகவே வயிற்றுப்போக்குவேறு!

இப்ப ரெண்டு மணியிருக்குமா? மூன்றா! இந்த செல்லுக்குள்ளே ராத்திரியும் கிடையாது. பகலும் கிடையாது. மங்கலான வெளிச்சம்தான் எப்பவும்.

யாரோ நடந்து வர்ற சத்தம் கேட்டது. மூச்சுவிட்டாலே சத்தம் கேட்கும். நடந்து வந்தா கேட்காதா என்ன? “2841”

நிமிர்ந்து பார்க்கிறேன். ஜெயில் வார்டன்.

“ஐயா”

“காலையிலிருந்து சாப்பிடலையாமே….?”

“ப… பசிக்கல சார்…”

கிட்ட நெருங்கி வந்து உட்கார்ந்தார். பசிக்காமல் போனதற்கான காரணத்தை அனுதாபமாக கேட்டார்!

என்னத்தைச் சொல்வது? ‘கொஞ்சம் உடம்பு சரியில்லை சார்’ன்னேன். பதறிப்போனார். உடம்புக்கு என்ன… ஏதுன்னு குடைஞ்சு எடுத்தாரு. ஏன் முதலில் சொல்லலைன்னு உரிமையா கண்டிச்சாரு… “காய்ச்சலா? எங்கேயாவது வலியா சங்கர்?”

auto-shankar

எல்லா வலியும் இதயத்திலேதான் சார்ன்னு சொல்லலாமா?

உனக்கு இதயம்கூட இருக்குதான்னு கேட்பாரோ? என்னை இரக்கமா ஊடுருவி பார்த்தார்.

“ஒன்றும் கவலைப்படாதே சங்கர். வேணும்னா பாரு… தூக்கு தண்டனைய அவங்க கேன்சல் பண்ணி ஆயுளாக்கிடுவாங்க!”

என் கண்ணுல சின்னதா நம்பிக்கை வெளிச்சம்.

“நிஜமாவா சார் சொல்றீங்க?”

“நிஜமாதான் சொல்றேன்… ஹைகோர்ட்டிலே தூக்கு தண்டனை கொடுத்த எத்தனையோ கேஸ் அங்க ஆயுள் தண்டனையா குறைஞ்சிருக்கு. ஏன், விடுதலையே கூட ஆகிருக்கு! இதுக்கு பயந்துக்கிட்டா பட்டினி கிடக்குறே…, சாப்பிடுப்பா!”

இன்னும் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமா என்னென்னமோ சொன்னார். ஆனாலும், எனக்கு சாப்பிட பிடிக்கவில்லை. பசிக்கலை!

பைபிளைப் புரட்டினேன். மனசுக்குள்ளாற சங்கடம் வந்து உட்கார்றப்ப எல்லாம் பைபிள்தான்.

என்னைப் பொறுத்தவரைக்கும் மனக்காயங்களுக்கு அது ஒரு சைபால் மாதிரி. விவிலியத்திலே எல்லா பக்கங்களும் அற்புதம்ன்னாலும் நான் விசேஷ ஆர்வம் காட்டுற சில இடங்கள் உண்டு.

ஏன் விருப்பம் காட்டுறேன்னு தெரியலை. கடவுள்ளுக்கே வெளிச்சம்.

ஏசுநாதரோட பிரசங்கம் கேட்க பெருவாரியான ஜனங்க வராங்க. அந்தக் கூட்டத்துக்கு விலைமாதும் வரா.

மக்கள் ஆத்திரமாகி அவளைத் தாக்கப்போறாங்க. ‘புனிதமான இடத்துக்கு கேவலம் இவ வராதவாது?’

ஏசுநாதர் உடனே கூட்டத்தைப் பார்த்து சொல்றார். ‘இவளைக் கல்லாலும், கட்டைகளாலும் அடியுங்கள்… உங்களில்  யோக்கியர் முதல் கல்லை வீசுங்கள்!’

கூட்டம் கல்லை வீசலை.

இந்தக்கதை எனக்கு ஏன் பிடிச்சுதுன்னு எனக்கே தெரியலை.

யோசிச்சுப் பார்க்கிறேன், நான் குற்றவாளிதானா? எனக்கு வரப்போகிற மரணம் நியாயமானதுதானா? என்னோட நடப்பு சோகத்தைச் சொல்லி உயிர்பிச்சை கேட்குற அழுகுணியா?

எப்பவோ படிச்ச சின்ன கதை ஒன்னு ஞாபகத்து வருது!

தன்னோட தாய், தகப்பனைக் கொலை செஞ்ச ஒருத்தன், ஜட்ஜ்கிட்டே, ‘ஐயா, நான் கொலைகாரன்ங்கிறது உண்மைதான்!

ஆனா இப்ப நான் என் அம்மா-அப்பா ரெண்டு பேரையுமே இழந்த அனாதை… அதுக்காக வேண்டியாவது இரக்கப்பட்டு என் தண்டனையைக் குறைக்கக் கூடாதான்னு கேட்டானாம்.

அதுக்கு நீதிபதி உண்மைதான். ‘உன்மேல் இரக்கப்பட்டு உனது பெற்றோர் இருக்கிற இடத்துக்கு அனுப்புறேன்’னாராம்.

இந்தக் கதையிலே வந்த அழுகுணி கைதி இல்லை நான்!

அதேசமயம் ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தறேன்!

ஆட்டோ சங்கருக்கு மட்டுமா மரண தண்டனை? கூடவே எத்தனை உண்மைகளும் சவக்குழிக்கு போகப்போகுது தெரியுமா?

பத்திரிகைகள் இந்தக் கேஸிலே பத்திரிகை தர்மத்தோட செயல்பட்டதா?

இவனைக் கெட்டவனா காட்டினாதான் வியாபாரத்துக்கு நல்லதுன்னு அந்த நல்லவங்க நினைச்சாங்க.

அதுவும் தவிர, உண்மையைப் பூரா வெளியிட்டு பல முக்கிய புள்ளிகளோட கோபத்தைச் சந்திக்கணுமேன்னு பயம்!

ஆனா, நக்கீரன் ஆசிரியர் என் உணர்வுகளை மதிச்சு, ‘வாசகர்கள் உண்மையைத் தெரிந்துகொள்ளட்டும்.

புதைக்கப்பட்ட உண்மைகள் வெளியே வரட்டும்’ன்னு வி.வி.ஐ.பி.க்களுக்கும், போலீசுக்கும் பயப்படாம வாய்ப்பு கொடுத்ததுக்கு முதல்ல என் நன்றியைத் தெரிவிச்சுக்கிறேன்!

உண்மையிலேயே எனக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. என்னோட கடைசிப்புகலிடம்.

என் வாக்குமூலத்தை ஒளிவு மறைவில்லாம தெரிவிக்கத் தரப்பட்ட மேடை! தெரிவிக்கிறேன்… மறைஞ்சு கிடக்குற எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டுவரேன்!

என்னைப் பேச அனுமதிச்ச நக்கீரனுக்கும், அதன் வாசகர்களுக்கும் மறுபடியும் நன்றி!

நான் மட்டும்தான் குற்றவாளியா, சமூகத்தில் பெரிய அந்தஸ்தோடு உள்ளவங்க இல்லையான்னு தொடர் முடியறப்போ நீங்களே முடிவுக்கு வாங்க.

ஆனா, அந்த முடிவை தெரிஞ்சுக்கத்தான் நான் இருக்கேனோ என்னவோ?

தொடரும்…

நன்றி: நக்கீரன்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.