புலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு!!: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)

0
1174

இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது.

தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் இந்திய எதிப்பில் முன்னணியில் நின்றனர்.

02.04.87 அன்று கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு ஒன்று இடம்பெற்றது.

87 ஜீன் மாதம் முதல் இந்தியப் பொருட்களை யாரும் வாங்கக்கூடாது என்று கோரி ஜே.வி.பி. இயக்கத்தினர் பகிஷ்கரிப்பு தொடங்கினார்கள்.

ஒரு புறத்தில் போ போ என்றது இலங்கை அரசு மறுபுறம் ஜே.வி.பி. இயக்கத்தினர் இந்திய விரோத உணர்ச்சியை வளர்த்துக் கொண்டிருந்தனர்.

வடக்கு-கிழக்கில் புலிகள் இந்தியப் படையினரை எதிர்த்து சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். தமிழ் பேசும் மக்களிடமும் இந்தியப் படையினருக்கு நற் பெயர் இல்லை.

இந்தியா நம்பியிருந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். போன்ற இயக்கங்களால் புலிகளையும் எதிர்க்க இயலவில்லை.

இந்திய உதவியைப் பயன்படுத்தி தங்கள் பலத்தை நிலைப்படுத்திக் கொள்ளவும் இல்லை. அதற்கு மாறாக தமது கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால் இந்தியப் படைக்கும் சேர்த்து கெட்ட பெயரைச் சம்பாதித்துக் கொடுத்த வண்ணமிருந்தன.

கால்வைத்துவிட்டோம், இனி கௌரவமாக மீளவேண்டும் என்ற கவலை இந்தியத் தரப்பினருக்கு ஏற்பட்டுவிட்டது.

கடினமான போக்குடையவரும், இந்திய, இலங்கை ஒப்பந்தம் ஏற்படக் காரணமானவர்களில் ஒருவர் என்றும் கருதப்பட்ட இலங்கைக்கான தூதர் திக்ஷித் திருப்பி அழைக்கப்பட்டார்.

இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதராக மொஹரோத்திரா நியமிக்கப்பட்டார்.

இந்தியப்படை வெளியேறுவதற்கு காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது. என்று ஜனாதிபதி பிரேமதாசாவைச் சந்தித்துக் கூறினார் இந்தியத் தூதர்.

கூட்டறிக்கைகள்

காலக்கெடு விதிக்க முடியாது, ஒப்பந்தம் அமுலாக்கப்படுவதை பார்த்துத்தான் வெளியேறுவோம் என்று இந்தியா சொன்னதே தவிர, இந்தியப் படை அதிகாரிகள் பலர் வெறுத்துப்போயிருந்தனர்.

இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் நாம் வேண்டாத விருந்தாளிகள் ஆகிவிட்டோம். இலங்கை அரசும் வெளியேறச் சொல்கிறது. இனிமேலும் இங்கிருப்பது மரியாதையாக இருக்காது என்று நினைக்கத் தொடங்கிவிட்டனர்.

விடுதைப் புலிகள் போர் ஆற்றல் விடா முயற்சி என்பவையும் இந்தியப்படை அதிகாரிகளுக்கு வியப்புக்குரியதாகின.

varathar-2ஆயுதம் கொடுத்து, போதிய உதவிகள் கொடுத்து ஊக்குவித்தும்கூட ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லையே என்பது, புலிகள் பற்றிய மதிப்பை இந்தியப் படை அதிகாரிகளிடம் மேலும் வளர்த்துவிட்டது.

இதற்கிடையே வரதராஜப்பெருமாள் இந்தியாவுக்கு பறந்துபோனார். பிரதமர் ராஜீவ் காந்தியை சந்தித்தார்.

இந்தியப் படையை வாபஸ் பெற வேண்டாம் என்று ராஜீவ் காந்தியிடம் கோரிக்கை விடுத்தார் வரதராஜப் பெருமாள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். , ஈ.என்.டி.எல்.எப். , ரெலோ ஆகிய மூன்று இயக்கங்களும் கூட்டாக அறிக்கை விட்டன.
இந்தியப் படையை வாபஸ்வாங்க ஏற்ற தருணம் இதுவல்ல என்று மூன்று இயக்கங்களும் கூட்டாக அறிக்கை விட்டன.

இந்தியப் படையை வாபஸ்வாங்க ஏற்ற தருணம் இதுவல்ல என்று மூன்று இயக்கங்களும் கூறியிருந்தன.

இந்தியப்படை வெளியேறினால் தம்மால் ஒரு நிமிடம்கூட தாக்குப் பிடிக்க முடியாது என்பது மூன்று இயக்கங்களுக்கும் நன்கு தெரிந்திருந்தது.

இத்தனைக்கும் மூன்று இயக்கங்களதும் உறுப்பினர்கள், மற்றும் தொண்டர் படைக்காக கட்டாயமாகச் சேர்க்கப்பட்டவர்கள் என்று அனைவரையும் கூட்டிப் பார்த்தால் புலிகளின் ஆட்பலத்தைவிட அதிகம் இருந்தனர்.

ஆயுதம் இருந்தும், ஆட்பலம் இருந்தும். இந்தியா என்னும் மாபெரும் நாட்டின் படைகள் பக்க பலமாய் நின்றும்கூட அதனை பயன்படுத்த மூன்று இயக்கங்களாலும் முடியவில்லை.

இந்தியப் படை வெளியேறியே தீர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதைக்கூட இந்த இயக்கங்களால் கணிப்பிட முடியாமல் போய்விட்டது.

சூழ்நிலை மாறப்போவதை கணிப்பிட்டு இந்தியப் படை வெளியேறிய பின்னர் தாங்கள் தனித்து நிற்கக்கூடிய தயாரிப்புக்களை செய்யும் ஆற்றலோ, விவேகமோ கூட இந்த இயக்கத் தலைமைகளிடம் இருக்கவில்லை.

இந்தியப்படையை எப்படியாவது தடுத்து நிறுத்தினால் போதும் என்றுதான் நினைத்தார்கள். இந்தியத் தேர்தலில் ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் தோல்வியடைப்போகிறது என்பது கூட இவர்களுக்கு தெரியாமல் இருந்ததுதான் விந்தை.

வடக்கு-கிழக்கு முழுவதும் இந்தியப் படைக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புக்கள் போராடுகின்றன என்று காண்பிக்க ஈழத்தமிழர் ஒன்றியம், தேசபக்தர்கள் என்று பல புதிய பெயர்களில் சுவரொட்டிகள் முளைத்தன.

மட்டக்களப்பு களுதாவளையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினர் ஈழத்தமிழர் ஒன்றியம் என்ற பெயரில் ஊர்வலம் ஒன்று நடத்தினார்கள்.

ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்ட சுலோகங்களில் ஒன்று வாய் வீச்சுக்கு அருமையான உதாரணம்.

அது இதுதான்:

முதல்வரே தமிழீழத்தைப் பிரகடனம் செய்

தன்னைக் காத்துக்கொள்ளவே முடியாத வடக்கு-கிழக்கு மாகாண முதல்வரிடம் தமிழீழப் பிரகடனம் செய்யுமாறு கேட்டது எத்தனை வேடிக்கை. வாய்வீச்சுக்கு ஒரு எல்லையே இருக்கவில்லை.

kartoornதொண்டா மிரட்டல்

நடக்காது என்று தெரிந்தாலும், மக்களிடம் எடுபடும் என்று தெரிந்தால் அதிரடியான பேச்சுக்களையும், பேட்டிகளையும் கொடுப்பது தொண்டமான் அவர்களின் பாணி.

இந்தியப் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இலங்கையும், இந்தியாவும் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்யவேண்டும் என்றும் கூறினார் தொண்டமான். இலங்கை-இந்திய ஒப்பந்ததின் பின்னர் தனிநாட்டுக் கோரிக்கை தேவையற்றதாகிவிட்டது என்றும் தொண்டமான் கூறியிருந்தார்.

ஜே.வி.பி. இயக்கத்தினரின் இந்திய எதிர்ப்பு பற்றியும் தொண்டமான் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தொண்டமான் கூறிய பதில்:

இந்தியத் தமிழர்கள் தாக்கப்பட்டால் இந்தியப்படை தெற்கேயும் வரும்

உண்மையில் இந்தியத் தமிழர்களைத் தாக்கும் எண்ணம் ஜே.வி.பி.யினருக்கு இருக்கவில்லை. மலையகத் தமிழ் மக்களிடம் தன்தோள் உயர்த்திக் காட்ட தொண்டமான் அவர்கள் கூறிய கருத்துத்தான் அது.

மாகாணசபை தீர்மானம்

இந்தியப் படையினர் இங்கிருந்து வெளியேறக் கூடாது என்று வடக்கு-கிழக்கு மாகாணசபையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தார் வரதராஜப் பெருமாள்.

அத் தீர்மானத்தை முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உறுப்பினர் எம்.ஐ.நிசாம்டீன் ஆமோதித்தார்.

அந்த தீர்மானத்தின் வாசகம் இதுதான்:

தமிழ் பேசும் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாகிய நாங்கள், இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் இருந்து, இந்திய அமைதி காக்கும் படையினை வாபஸ் பெறுவதற்காக இலங்கை ஜனாதிபதி தன்னிச்சையாக விடுத்த வேண்டுகோளை சந்தேகத்திற்கு இடமற்றவகையில் கண்டனம் செய்கிறோம்.

வடக்கு-கிழக்கு மாகாண அரசுக்கு இந்திய, இலங்கை சமாதான உடன்படிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாங்கள் அனைத்தும் சரியான முறையில் கொடுக்கப்படுகின்றபோது, தமிழ் பேசும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய, உதியான ஒரு மாகாண பாதுகாப்புப்படை உருவாக்கப்படுகின்ற பொழுதிலுமே, இந்திய அமைதிகாக்கும் படை வெளியேறுவது பற்றி தமிழ் பேசும் மக்களாலும், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளாலும் கருத்தில் எடுக்கப்படும் என்பதுதான் தீர்மானம்.

allasதிண்டாட்டம்

06.06.89 அன்று புதுடில்லியில் இந்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணியான தேசிய முன்னணிக் கூட்டம் இடம்பெற்றது. வி.பி.சிங் தலைமை தாங்கினார். தேசிய முன்னணியில் தி.மு.க.வும் அங்கம் வகித்தது.

பின்வரும் தீர்மானம் அங்கு நிறைவேற்றப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி பிரேமதாசா இந்தியப்படையை விலக்க காலக்கெடு விதித்துள்ளார். பிரதமர் ராஜீவ் காந்தியின் இலங்கைக் கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதையே இது காட்டுகிறது.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து உடன் வெளியேறுவதே சரியாக இருக்கும் என்று தீர்மானம் இயற்றினார்கள்.

இதனையடுத்து 06.06.89 அன்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறிய கருத்து, வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கு கலக்கத்தைக் கொடுத்தது.

வெகு விரைவில் இந்தியப் படை இலங்கையில் இருந்து வெளியேறும். அதற்கான உகந்த சூழ்நிலை ஒன்றை உருவாக்க இலங்கையுடன் இந்தியா தொடர்து பேச்சு நடத்தி வருகிறது என்று அந்தப் பேச்சாளர் கூறியதாக ஏ.எஃப்..பி. செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இச் செய்தி இங்குள்ள பத்திரிகைகளிலும் வெளியானது. செய்தியைக் கண்ணுற்ற ஈ.பி.ஆர்.எல்.எஃப். , ஈ.என்.டி.எல்.எப். இயக்கங்களின் உறுப்பினர்கள் ஆடிப்போனார்கள்.

தங்கள் ஆட்டம் முடிவுக்கு வரப்போகிறது என்று தெரிந்துவிட்டது. உடனே பலத்த தயாரிப்புகடகளில் இறங்கினார்கள்.

கொள்ளைகள் மளமளவென்று நடந்தன. சில வீடுகளுக்குள் கொள்ளையிடச் சென்ற போது தேடிப்போன அளவுக்கு நகைகள் கிடைக்கவில்லை என்றால், அந்த வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த தோடுகளைக்கூட பிடுங்கிக் கொண்டார்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தில் அப்போது முக்கியஸ்தராக இருந்த தங்கன் என்ற சுதாகர் பற்றி முன்னரே விபரித்திருந்தேன்.

சுன்னாகத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த தங்கன் கோஷ்டிக்கு எதிர்பார்த்த பணமே நகையோ கிடைக்கவில்லை.

அந்த வீட்டில் இருந்த பெண்கள் அழகாக இருந்தனர். ஒரு இளம் பெண்ணை துப்பாக்கி முனையில் ஒரு அறைக்குள் கொண்டு சென்ற தங்கன், ஆடைகளை களையுமாறு மிரட்டி இருக்கிறான்.

வெளியே நின்றவர்கள் துணிச்சலாக அபயக்குரல் கொடுத்தனர். அதனால் தங்கன் கோஷ்டி தப்பி ஓடியது. அப்படி ஓடும்போது ஒரு பெண்ணின் காதில் இருந்த தோட்டைப் பிடித்து இழுத்திருக்கிறார்கள். அப் பெண்ணின் காது அறுந்து தொங்கியது.

இந்தியப் படை வெளியேற முன்னர் சுறுட்டுவதை சுறுட்டவேண்டும் தாகத்தில் ஆளாளுக்கு கொள்ளையிடத் தொடங்கினார்கள். தலைமையால் கட்டுப்படுத்த இயலவில்லை.

ஈரோஸ் எம்.பி.கள்

பாராளுமன்றத் தேர்தலில் பதின்மூன்று எம்.பி.கள் ஈரோசுக்கு இருந்தனர். தேர்தலில் போட்டியிட புலிகளின் அனுமதிக்காக ஈரோஸ் காத்திருந்தமை பற்றி முன்னர் விபரித்திருந்தேன்.

தேர்தலில் வெற்றியீட்டிய பின்னரும் ஈரோஸ் புலிகளின் அனுமதிக்காக் காத்திருந்தது.

பாராளுமன்றம் செல்வதற்கான அனுமதியைப் பொறுவதற்காகவே இம்முறை காத்திருந்தனர்.

அப்போது யாழ் மாவட்டத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்தவர் கந்தசாமி.

ஈரோஸ் தலைவர் பாலகுமாரை சந்தித்த கந்தசாமி புலிகளின் நிலைப்பாட்டை விளக்கினார்.

நான்கு அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து ஈரோஸ் பாராளுமன்றத்தை பகிஷ்கரிக்க வேண்டும் என்றார் கந்தசாமி.

நான்கு அம்சக் கோரிக்கைகள் எவை என்பதையும் கந்தசாமியே எடுத்துக் கூறினார்.

நிரந்தர யுத்த நிறுத்தம், பேச்சுவார்த்தை நடத்துல், அரசியல் அமைப்பு சட்டத்தின் ஆறாவது ஷரத்தை நீக்குதல், சகல தமிழ் அரசியல் கைதிகளையும், விடுதலை செய்தல் என்பவைதான் அந்த நான்கு அம்சக் கோரிக்கைகள்.

தேர்தல் சட்டப்படி அரசியல் கட்கிகள் ஆறுமாதமும், சுயேட்லைக் குழுக்கள் மூன்று மாத காலமும் தொடர்ச்சியாக பாராளுமன்றம் செல்லத் தவறினால் பதவிகள் காலியாகும்.

ஜனாதிபதி விரும்பினால் மேலும் ஒரு மாத கால அவகாசம் வழங்கலாம்.

ஈரோஸ் எம்.பி.கள் அனைவரும் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டுத் தெரிவானவர்கள்.

ஈரோஸ் எம்.பி.கள் அனைவரும் பாராளுமன்றம் செல்லத் தவறியதால் அவர்கள் பதவி காலாவதியாகும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.

இரகசியத் தொடர்பு

இதற்கிடையே புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கி இருந்தன.

இந்தத் தொடர்புகள் ஏற்படுவதற்கு சூத்திரதாரியாக இருநடதவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரியான கொத்தலாவல.

கிட்டு யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக இருந்தபோது நடைபெற்ற கைதிப் பரிமாற்றங்கள் பற்றி இத் தொடரில் முன்னரே கூறப்பட்டுள்ளது.

அப்போது கிட்டுவுக்கும் கொத்தலாவலவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டிருந்தது. அந்த நட்புத்தான் பின்னர் பிரேமதாசாவுக்கும் புலிகள் இடையே தொடர்புகள் ஏற்பட பாலமாக அமைந்தன.

இந்தியப் படைக்கு எதிரான பிரேமதாசாவின் நிலைப்பாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். ஏதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில் இலங்கை அரசுடன் நட்பை ஏற்படுத்தலாம் என்று புலிகளுக்குள் ஒரு சாரார் விரும்பினார்கள்.

1

கிட்டு, அன்ரன் பாலசிங்கம், மாத்தையா ஆகியோர்தான் இலங்கை அரசுடன் தந்திரோபாயமாக ஒரு உறவை ஏற்படுத்தலாம் என்று விரும்பினார்கள். ஆனால் பிரபாகன் முதலில் அதனை விரும்பவில்லை. ”சிங்கள அரசுகளை நம்பக்கூடாது. அவர்களது வலையில் விழுந்து இலட்சியத்தை விட்டுக் கொடுக்க முடியாது” என்றுவிட்டார் பிரபாகரன்

அன்ரன் பாலசிங்கம், மாத்தையா ஆகியோர் பிரபாகரனை பேச்சுக்கு உடன்படச் செய்யப் படாத பாடுபட்டனர். இறுதியாகப் பிரபாகரன் சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தார்.

mmm-e1531791288360

”மூன்று மாத கால அவகாசம் தருவேன் பேச்சுக்களால் பயன் ஏதும் இல்லை என்று தெரிந்தால், மறுபடி சண்டை தொடங்கிவிடுவேன். அப்போது நீங்கள் கொழும்பில் நிற்கிறீகளா, இங்கே நிற்கிறீகளா என்றுகூட பார்க்கமாட்டேன்” என்றாராம் பிரபாகரன்.

அரசுடன் பேச்சு நடத்தும் பொறுப்பு புலிகளின் அரசியல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.

”எக்கட்டத்திலும் பேச்சில் நான் கலந்துகொள்ளமாட்டேன், என்னை வற்புறுத்தவும் கூடாது” என்றும் சொல்லிவிட்டார் பிரபாகரன்.

பேச்சுக்கான இரகசிய முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோதே, இலங்கை அரசு சார்பாக தமது நல்லெண்ணத்தை காட்டும் வகையில் ஒரு தொகை ஆயுதங்கள் புலிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அரசு, புலிகள் பேச்சுவார்த்தை பற்றிய செய்திகள் பகிரங்கத்துக்கு வர முன்னரே பிரேமதாசா அரசின் முதற்கட்ட ஆயுதங்கள் வன்னிக்குப் போய்ச் சேர்ந்தன.

அப்போது வவுனியாவில் இராணுவ பொறுப்பதிகாரியாக இருந்தவர் டென்சில் கொப்பக்கடுவ

டென்சில் கொப்பக்கடுவவுக்கு புலிகளை பலப்படுத்தவதில் இஷ்டமில்லை. அதேசமயம் இந்தியப் படையினர் இங்கு வந்ததும் விருப்பமில்லை.

அதனால் புலிகளுக்கு ஆயுதம் கொடுக்குமாறு மேலே இருந்து வந்த உத்தரவை டென்சில் கொப்பக்கடுவ நிறைவேற்றினார்.

அதன்பின்னர் பேச்சுக்கு முன்பாக அரசியல் நாடகம் ஒன்றை அரகேற்றினார் பிரேமதாசா.

(தொடர்ந்து வரும்)
அரசியல் தொடர் அற்புதன் எழுதுவது


வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)

கொலை-கொள்ளை நடத்திய மண்டையன் குழு!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 147)

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.