தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அண்ணன்; அதிர்ச்சியில் உயிரிழந்த தங்கை! கோவில்பட்டியில் சோகம்

0
741

கோவில்பட்டியில், தலையாரியாகப் பணிபுரிந்துவந்த திருப்பதி என்பவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில், அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை கற்பகவல்லியும் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர், தோணுகால் கிராம நிர்வாக அலுவலக உதவியாளராகப் (தலையாரி) பணிபுரிந்துவந்துள்ளார்.

இவருக்கு, மது அருந்தும் பழக்கம் இருந்த காரணத்தால், சரியாக பணிக்குச்  செல்லமால் இருந்துள்ளார். இதனால், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பதிக்கு, முத்துப்பாண்டி என்ற சகோதரரும் மகாலெட்சுமி மற்றும் கற்பகவல்லி  என்கிற சகோதரிகளும் உள்ளனர். இதில், திருப்பதி மட்டும் திருமணம் செய்யாமல் இருந்துவந்துள்ளார். பணி இழந்ததால், விரக்தியுடனும் சோகத்துடனும் காணப்பட்டுவந்தாராம்.

இந்நிலையில்,  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், திருப்பதி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் கிடைத்தும், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில், குறுக்குச்சாலை அருகில் உள்ள அரசரடி குமாரபுரத்தில், திருப்பதியின் சகோதிரி கற்பகவல்லி, கணவர் ராசுக்குட்டியுடன் வசித்துவருகிறார்.

திருப்பதி தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்ட தகவலை முத்துப்பாண்டி, கற்பகவல்லியிடம் போன் மூலம் கூறினாராம். அண்ணன் இறந்த தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த கற்பகவல்லி, அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போதே  மயங்கி விழுந்துள்ளார்.

அவரது உறவினர்கள், கற்பகவல்லியை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். ஆனால், ஏற்கெனவே கற்பகவல்லி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

அண்ணன் இறந்த செய்தி கேட்டவுடன் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு கற்பகவல்லி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதி, அனைவரிடமும் அன்பாகவும் பாசத்துடனும் பழகுவார் என்றும், தனது இரு தங்கைகளிடம் எப்போதும் பாசத்துடன் இருப்பார் என்றும் உறவினர்கள் கூறினர்.

அண்ணனின் இறப்புச் செய்தி கேட்ட அதிர்ச்சியில் அவரது தங்கை கற்பகவல்லியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.