நாய்களுக்காக வேலைக்காரப் பெண்ணை கொலைசெய்த முதலாளியம்மா! – சென்னையில் நடந்த துயரம்

0
361

சென்னையில், செல்லமாக வளர்த்த நாய்களை அடித்துக் கொலைசெய்த வேலைக்காரப் பெண்ணை, வீட்டின் முதலாளியம்மா மற்றும் அவரின் உறவுக்காரப் பெண் என இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர், செய்யாறு பகுதியில் காஸ் ஏஜென்ஸி நடத்திவருகிறார். இவரின் மனைவி சுஷ்மிதா.

முருகானந்தம் வீட்டில், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம்பெண், கடந்த 5 ஆண்டுகளாக வீட்டு வேலை செய்துவந்தார்.

முருகானந்தத்துக்குச் சொந்தமான வீடு சென்னை அடையாறு பெசன்ட் அவென்யூவில் உள்ளது. சம்பவத்தன்று முருகானந்தம், சுஷ்மிதா, இவரின் தங்கை மகள் மித்ராசினி, மகாலட்சுமி ஆகியோர் பெசன்ட் நகர் வீட்டுக்கு வந்தனர். முருகானந்தம் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட்டார்.

அவரை செல்போனில் தொடர்புகொண்ட சுஷ்மிதா, ‘வீட்டுக்கு உடனடியாக வாருங்கள். மகாலட்சுமி இறந்துவிட்டாள்’ என்று கூறினார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த முருகானந்தம், வீட்டுக்கு விரைந்தார். பிறகு, மகாலட்சுமி இறப்புகுறித்து சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் அடையாறு உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று மகாலட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மகாலட்சுமியின் இறப்புகுறித்து முருகானந்தம், சுஷ்மிதா, மித்ராசினி ஆகியோரிடம் போலீஸார் விசாரித்தனர்.

மேலும், மகாலட்சுமியின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீஸார் கருதினர். இந்த நிலையில், மகாலட்சுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், அவர் சித்ரவதை செய்யப்பட்டு அடித்துக் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், முருகானந்தம் வீட்டுக்குச் சென்ற போலீஸார், அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, சில மணி நேரம் சிசிடிவி கேமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.

அதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சுஷ்மிதாவும் மித்ராசினியும் தெரிவித்தனர்.

இதனால், அவர்களின்மீது போலீஸாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தினர். மகாலட்சுமியைக் கொலைசெய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

murder_acc_1_10129

இதுகுறித்து சுஷ்மிதா போலீஸாரிடம் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். “மகாலட்சுமி, எங்கள் வீட்டில் நீண்ட நாள்களாக வேலை செய்து வந்தாள். அடிக்கடி சைக்கோபோல நடந்துகொள்வாள்.

நாங்கள் வீட்டில் செல்லமாக வளர்த்துவந்த இரண்டு நாய்களை அவள் அடித்துக் கொன்றுவிட்டாள். என் மகனுக்கு அவள் அடிக்கடி பாலியல் தொல்லைகொடுப்பாள்.

அதனால், அவளை வேலையை விட்டு நின்றுவிடுமாறு கூறினேன். அதற்கு அவள், ‘என்னை வேலையை விட்டு நீக்கினால் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டினாள் அதோடு, மலேசியாவிலிருந்து வந்த என் தங்கை மகள் மித்ராசினியிடம் அடிக்கடி தகராறு செய்துவந்தாள்.

பல சமயங்களில் மன நலம் பாதித்தவள்போல நடந்துகொள்வாள். இதனால், அவள்மீது எனக்கும் மித்ராசினிக்கும் கடும் ஆத்திரம் இருந்தது.

சம்பவத்தன்று, மகாலட்சுமி வயிற்றுப்போக்கால் மிகவும் சிரமப்பட்டாள். அவளை நான் கண்டுகொள்ளவில்லை. தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும்படி அவள் கூறினாள்.

அதற்கு நான் மறுத்ததால், என்னைத் தகாத வார்த்தைகளால் திட்டினாள். இதனால் ஆத்திரம் அடைந்த நானும், மித்ராசினியியும் அவளை தோசைக்கரண்டியால் சரமாரியாக தலையில் தாக்கினோம். வெந்நீரை எடுத்து அவள்மீது ஊற்றினோம். வலி தாங்க முடியாமல் அலறிய அவளுக்கு, திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டாள்” என்று கூறியுள்ளார்,

மகாலட்சுமி இறந்தது தொடர்பாக, 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், பிறகு 302 பிரிவின் கீழ் (கொலை) வழக்கை மாற்றி சுஷ்மிதா, மித்ராசினி ஆகிய இருவரையும் கைதுசெய்தனர்.

இந்தச் சம்பவம் அடையாறு பகுதியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.