ஆவா குழுவை தேடி வேட்டை ஆரம்பம் யாழ். பொலிஸாரின் விடுமுறைகள் ரத்து:மன்னார், வவுனியாவிலிருந்து மேலதிக பொலிஸாரும் அழைப்பு

0
280

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள ஆவா குழுவை முற்றாக ஒழிக்கும் நோக்கில் விஷேட பொலிஸ் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய நேற்று முதல் யாழ். மாவட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும்,

விஷேட நடவடிக்கைகளுக்காக மன்னார், வவுனியா மாவட்டங்களில் இருந்து மேலதிக பொலிஸ் படை யாழுக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணாண்டோ தெரிவித்தார்.

யாழில் அண்மைய நாட்களில் பதிவான வாள் வெட்டு, கொள்ளைகள், தாக்குதல்களின் பின்னணியில் ஆவா குழு உள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே நேற்று முதல் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விஷேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது ஆவா குழுவினரை முழுவதுமாக கட்டுப்படுத்துவது இலக்காக அமைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சிறப்பு நடவடிக்கைகள் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் உத்தரவுக்கு அமைய யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோவின் மேற்பார்வையில், பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் பாதாள உலக ஒழிப்புப் பிரிவை வழி நடாத்திய தற்போதைய யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்படடில் இடம்பெறவுள்ளன.

யாழில் அண்மையில் இடம்பெற்ற கொள்ளைகள், தாக்குதல்கள் தனு ரொக் எனும் குழுவினருடைய உறவினர்களை இலக்கு வைத்து ஆவா குழுவினரால் நடாத்தப்பட்டுள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரத்யிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ தெரிவித்தார்.

தனு ரொக் என குழுவொன்று தற்போது யாழில் இல்லை எனவும், அக்குழுவில் இருந்தவர்கள் திருந்தி சாதாரண வாழ்வில் ஈடுபடும் நிலையிலேயே அவர்களை சீண்டும் வகையில் அவர்களது உறவினர்கள் வீடுகள் மீது இந்த தாக்குதல்களை ஆவா குழு முன்னெடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் வட மாகாண சிரேஷ்ட பிரத்யிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ சுட்டிக்காட்டினார்.

இந் நிலையிலேயே ஆவா குழுவினரை கட்டுப்படுத்துவதை இலக்காக கொண்டு, யாழில் இந்த விஷேட பொலிஸ் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்ப்ட்டுள்ளன.

இதனிடையே நேற்று முன் தினமும் யாழில் இடம்பெற்ற இரு சம்பவங்களால் இருவர் காயமடைந்துள்ளனர். 15 வயதான சிறுவன் ஒருவனும் 23 வயதான இளைஞர் ஒருவருமே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சுண்ணாகம் பொலிஸ் பிரிவில் ஆவா குழுவினர் என சந்தேகிக்கப்படும் நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர், வீடொன்ருக்குள் அத்து மீறி நடத்திய தககுதலில் 15 வயதுடைய சிவராசா சாருஜன் எனும் சிருவன் காயமடைந்துள்ளார்.

இதனைவிட கொக்குவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த 23 வயதுடைய ஹரிதாஸ் சத்தியதாஸ் எனும் இளைஞன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இவை தொடர்பில் மாணிப்பாய், கொக்குவில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.