இந்து சமயத்தில் பின்பற்றப்படும் விரதங்கள்

0
226

 

இந்து சமயத்தில் என்னென்ன விரதங்களெல்லாம் பின்பற்றப்படுகின்றன என்பதைப் பற்றித் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1. விநாயக விரதம்

வைகாசி மாதத்துச் சுக்ல பட்சத்து முதற் சுக்கிர வாரந் தொடங்கிச் சுக்ர வாரந் தோறும் விநாயகமூர்த்தியை எண்ணி விரதமிருப்பது.

2. விநாயக சஷ்டி விரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருட்டிண பட்சப் பிரதமை முதல் மார்கழி மாதத்துச் சுக்ல பட்ச ஷஸ்டி ஈறாகிய 21 நாள்களும் விநாயகரை எண்ணி அநுட்டிக்கும் விரதமாம். இதில் 21 இழைகளாலாகிய காப்பு நாணினை ஆண்கள், பெண்கள் முறையே வல, இடக்கரங்களில் அணிந்து விரத சமாப்தியில் தட்சிணாதிகள் கொடுத்துப் போஜனாதிகள் அருந்த வேண்டும்.

3. கல்யாணசுந்தர விரதம்

இது பங்குனி மாதத்து உத்திர நட்சத்திரத்து அநுஷ்டிக்கும் சிவ விரதம்.

4. சுக்ல விரதம்

இது தை மாசத்தில் அமாவாசையில் சிவாஸ்திரமாகிய திரிசூலத்தைப் பொன்னால் அல்லது வெள்ளியினால் செய்து சிவமூர்த்திப் பிரதிமையில் சாத்தி ஆராதித்து விரதமிருப்பது.

5. இடப விரதம்

வைகாசி மாதத்தில் சுக்ல பட்ச அஷ்டமியில் இடபாரூடராகிய சிவமூர்த்தியை எண்ணி விரதமிருப்பது.

6. தேவி விரதம் – சுக்கிர வார விரதம்

இது சித்திரை மாதத்துச் சுக்ல பட்சத்துச் சுக்கிர வாரம் முதல் பார்வதிப் பிராட்டியாரை எண்ணி விரதம் நோற்பது. இதில் சருக்கரை நிவேதனம் செய்தல் வேண்டும். இது சுக்ரகரன் அனுட்டித்தத் தினம்.

7. ஐப்பசி உத்திர விரதம்

ஐப்பசி மாதத்து உத்திர நட்சத்திரத்தில் பார்வதி தேவியாரை எண்ணி நோற்பது.

8. நவராத்திரி விரதம்

திதி விரதத்தில் கூறினோம். ஆண்டுக் காண்க.

9. கந்த சுக்ர வார விரதம்

ஐப்பசி முதற் சுக்கிர வாரந் தொடங்கி பிரதி சுக்கிர வாரந் தோறும் கந்தமூர்த்தியை எண்ணி அநுட்டிக்கும் விரதமாம்.

10. கிருத்திகை விரதம்

இது கார்த்திகை மாதத்துக் கிருத்திகை நட்சத்திர முதல் கிருத்திகை தோறும் கந்தமூர்த்தியை எண்ணி அநுட்டிக்கும் விரதம். இதில் உபவாசம் உத்தமம்.

11. கந்த சஷ்டி விரதம்

ஐப்பசி மாதம் சுக்ல பட்சப் பிரதமை முதல் சஷ்டி ஈறாகிய ஆறு நாளும் பலாதிகள் மிளகு முதலியன உண்டு விரதமிருப்பது உத்தமம். கூடாதவர் ஒரு போதுணவு கொண்டு சஷ்டியில் உபவாசமிருப்பது நலம்.

12. வைரவ விரதம் – மங்கல வார விரதம்

தை மாதத்து முதல் செவ்வாய்க்கிழமை முதல் பிரதி செவ்வாய்க்கிழமையிலும் அநுட்டிக்கும் விரதம்.

13. சித்திரைப் பரணி விரதம்

இது சித்திரை மாதம் பரணியில் நட்சத்திரத்தில் வைரவமூர்த்தியை எண்ணி அநுட்டிப்பது.

14. ஐப்பசிப் பரணிவிரதம்

ஐப்பசி மாதம் பரணியில் வைரவக்கடவுளை எண்ணி அநுட்டிப்பது.

15. வீரபத்திர விரதம்

செவ்வாய்க் கிழமை தோறும் வீரபத்திரக் கடவுளை எண்ணிச் செய்யும் விரதமாம்.

16. நட்சத்த்திரபுருஷ விரதம்

சித்திரை மாதம் சோம வாரங் கூடிய மூல நட்சத்திரத்தில் பொன்மயமான லட்சுமி நாராயண விக்கிரகங்களை ஸ்தாபித்துப் பூஜா தானங்கள் செய்தவர்கள் இஷ்ட சித்திகளை அடைந்து விஷ்ணுலோகம் அடைவர். இது நாரதனுக்கு ருத்திரர் சொன்னது.

17. ஆதித்தியசயன விரதம்

அஸ்த நட்சத்த்திரங் கூடிய சப்தமியிலாயினும் ஆதி வாரம் அஸ்த நட்சத்திரங் கூடிய சங்கிர மணத்திலேனும் உமா மகேச்வர விக்ரகத்தைச் சூர்ரிய நாமங்களால் விதிப்படி பூசித்துத் தானாதிகளைச் செய்யின் தங்கள் பிதுர்க்களுடன் சிவலோகத்தை அடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

18. கிருஷ்ணாஷ்டமி விரதம்

மார்க்கசீரிஷ மாதம் முதல் 12 மாதத்தில் 12 கிருஷ்ணபட்ச அஷ்டமியில் சங்கரன் முதலியவர்களை விதிப்பிரகாரம் பூசித்துத் தானாதிகளைக் கொடுத்தால் முத்தி அடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

19. ரோகணி சந்திரசேகர விரதம்

சோம வாரமாயினும், மிருகசீரிட நட்சத்திரமாயினும் வந்த பூர்ணிமையில் சிவமூர்த்தியை விதிப்படி பூசித்து, விதிப்படி தானாதிகளைத் தரின் முத்தியடைவர். இதுவும் நாரதருக்கு ருத்திரர் சொன்னது.

20. சௌபாக்கியசயனவிரதம்

சித்திரை மாதம் சுத்ததிரியைப் பூர்வான்னத்தில் உமாமகேச்வர விக்ரகங்களுக்குத் திருக்கல்யாணம் செய்வித்து விதிப்படி பூஜாதானங்களைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது மச்சமூர்த்தி மநுவுக்குச் சொன்னது.

21. அனந்த திரிதியா விரதம்

சிராவண சுத்த திருதியை முதல் 12 திதிகள். இந்த விரதத்தை அநுசரித்துக் கௌரியை விதிப்பிரகாரம் பூஜித்துத் தானாதிகளைச் செய்யின் சிவலோகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

22. ரஸகல்யாணதிரிதியா விரதம்

மாசி மாதம் சுத்த திரிதியை முதல் ஆரம்பித்துக் கௌரியை விதிப்படி பூஜிப்பின் சத்தியுலகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

23. ஆர்த்தானந்த திரிதியாவிரதம்

உத்திராடம், பூராடம், மிருகசீரிடம், அஸ்தம், மூலம், இவற்றுள் எதிலாயினும் வரும் சுக்கில பட்சத் திரிதியையில் ஆரம்பித்து உமாமகேச்வர கல்ப பிரகாரம் பூசிக்கத் தேவி உலகம் அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

24.அட்சய திரிதியா விரதம்

வைசாக சுத்த திரிதியையில் ஆரம்பிக்க வேண்டும். இதை அனுசரித்தவர்கள் ராஜசூரிய பலத்துடன் புண்ணியலோகத்தை அடைவர். இது பார்வதிக்குச் சிவன் சொன்னது.

25. சாரஸ்வத விரதம்

இந்த விரதம் தாராபல சந்திர பல யுக்தமான ஆதி வாரத்தில் ஆயினும், தான் ஏதேனும் விரதத்தைச் செய்யப் புகுந்த சுப தினத்திலாயினும் ஆரம்பிக்க வேண்டும். இதை 13 மாதம் செய்ய வேண்டியது. இதில் சரஸ்தி பூசிக்கப்படுவள். இதனை அபுசரிப்பவர்கள் வித்தியாபி விருத்தியும் பிரமலோக பிராப்தியும் அடைவர். இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.