2011 ம் ஆண்டு, `தான் முதல்வராக வேண்டும்’ என்று சசிகலா ஜெயலலிதா எதிராக சதி செய்தாரா??- ஆணையத்தில் வெளிவந்த உண்மை!

0
169

மரணம் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு நியமித்த ஆறுமுகசாமி ஆணையத்தில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திருப்பங்கள் நடந்தேறி வருகின்றன. அந்த வகையில், உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தி ஆணையத்தில் நேற்று சாட்சியம் அளித்தபோது பல்வேறு தகவல்களைச் சொல்லியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாட்சியம் அளித்துள்ளார்கள். அவர்களில் பலரிடம் சசிகலா தரப்பு குறுக்கு விசாரணையும் முடித்துள்ளது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்தும், அவருக்குக் கடைசிக்கட்டத்தில் ஏற்பட்ட உடல்நிலை மாற்றங்கள் குறித்தும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து முடித்துள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதா முதல்வராக இருந்த போது உளவுத்துறை அதிகாரியாக இருந்த சத்தியமூர்த்திக்கும், ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த சோ-வின் நண்பர் குருமூர்த்திக்கும் ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி காவல்துறை அதிகாரி சத்தியமூர்த்தி நேற்று ஆணையத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். ஏற்கெனவே காவல்துறை அதிகாரிகள் ராமானுஜம், ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் சாட்சியம் அளித்திருந்த நிலையில், இப்போது சத்தியமூர்த்தியும் ஆஜராகியுள்ளார்.

ஜெயலலிதா மரணமடைவதற்கு முந்தைய நிலையில், ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் இடையே இருந்துவந்த உறவு நிலைகள் குறித்து சத்தியமூர்த்தியிடம் ஆணையம் விசாரித்துள்ளது.

2011 ம் ஆண்டு, `தான் முதல்வராக வேண்டும்’ என்று சசிகலா தனது உறவினர்களோடு ஆலோசனை நடத்தியதாகவும், அதனாலேயே போயஸ்கார்டனிலிருந்து சசிகலா தரப்பினர் வெளியேற்றப்பட்டதாகவும் கூறப்படும் தகவல்கள் உண்மையானவைதானா… என்று ஆணையம் தரப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளது.

அதற்கு, “அதுபோன்ற எந்தத் தகவலும் எனக்குத் தெரியாது. சசிகலாவை வெளியேற்றியதற்கு இதுதான் காரணம் என எதுவும் எனக்குத் தெரியாது” என்று பதில் அளித்துள்ளார்.

இந்தக் கேள்வியை ஆணையம் பலவிதங்களில், சத்தியமூர்த்தியிடம் எழுப்பியும் அவர் `தனக்குத் தெரியாது’ என்கிற பதிலை மட்டுமே தெரிவித்துள்ளார். அதன்பிறகு `கறுப்புப் பூனைப்படை எதற்காக அப்போலோ மருத்துமவனைக்குச் செல்லவில்லை…’ என்று கேட்டதற்கு, “வெளியிடங்களில் முதல்வர் பயணிக்கும்போது மட்டுமே, கறுப்புப் பூனை பாதுகாப்பை நாங்கள் கோருவோம்.

ஆனால், மருத்துவமனைக்கு ஜெயலலிதா செல்லும் நேரத்தில், `எங்களுடைய பாதுகாப்பே போதும்’ என்று நாங்கள் கருதியதால், கறுப்பு பூனைப் படையிடம் தகவல் தெரிவிக்கவில்லை” என்று பதில் அளித்துள்ளார்.

`அப்போலோ மருத்துவமனையிலிருந்த சி.சி.டி.வி கேமராக்கள் எதற்காக அகற்றப்பட்டன…’ என்ற கேள்வியை ஆணையத்தில் எழுப்பியுள்ளார்கள். “கேமரா அகற்றப்பட்டது மட்டும்தான் எனக்குத் தெரியும். எதற்காக கேமரா அகற்றப்பட்டது என்று தெரியாது” என்று பதில் சொல்லியுள்ளார்

சத்தியமூர்த்தி. அதாவது, சத்தியமூர்த்தி அளித்த பதில்கள் அனைத்தும் அரசுத் தரப்புக்கு ஆதரவாக இல்லாமலும், சசிகலாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தா வகையிலும் இருந்துள்ளன.

அதேபோல் நேற்று ஆஜராக வேண்டிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆணையத்துக்கு வரவில்லை. அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம், “எதற்காக நான் ஆஜராக வேண்டும்? எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நெருக்கம் ஒன்றும் இல்லையே…. அவருக்கும் சோ-வுக்கும் மட்டுமே நெருக்கம் உண்டு.

நான் இந்த ஆணையத்தில் சாட்சியம் சொல்லும் அளவுக்கு விஷயங்கள் ஒன்றும் இல்லை” என்று சொல்லியுள்ளார். `ஆணையத்தில், குருமூர்த்தி ஆஜராகாததற்கான காரணத்தை முறைப்படி தெரிவிப்பார்’ என்றும் சொல்கிறார்கள்.

ஆணையத்தில் இதுவரை விசாரிக்கப்பட்ட சாட்சிகள் போதாது என்றும் மேலும் சிலரையும் விசாரிக்கும் முடிவுக்கு ஆணையம் வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். எனவே, அடுத்தகட்டமாக மேலும் சிலருக்கு ஆணையத்தின் மூலம் சம்மன் அனுப்பவும் உள்ளார்கள்.

ஜெயலலிதா மரணமடைந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், மரணத்தின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கப் படாதபாடு பட்டுவருகிறது ஆறுமுகசாமி ஆணையம்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.