சர்வதேசத்தை சமாளிக்கவே கூட்டமைப்பை அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது- சிறிதரன் நேர்காணல்

0
201

கேள்வி: 2015 இல் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் பல விடயங்கள் தொடர்பில் நம்பிக்கைகளை விதைத்திருந்தது.

குறிப்பாக யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் தமிழ் மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளுடைய விடுதலை, மீள்குடியேற்றம் போன்ற பிரச்சினைகளுக்கும் இதர பல பிரச்சினைகளுக்கும் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினார்கள்.

அந்த நம்பிக்கை தான் ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்திருந்தது. இந்நிலையில், ஆட்சிமாற்றம் ஏற்பட்டு மூன்றரை வருடங்கள் கடந்துவிட்டன. இந்த காலப்பகுதி தமிழ் மக்களுக்கு எவ்வாறு அமைந்திருந்தது.

பதில்: 2015 இல் ஆட்சிமாற்றம் ஒன்றுக்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களைக் கோரியிருந்தது. அந்த அடிப்படையில் ஆட்சிமாற்றத்தினூடாக பல விடயங்களில் மாற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களிடம் இருந்தது உண்மைதான்.

மகிந்த ராஜபக்ஷவும் அவருடன் இருந்தவர்களும் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்திய படுகொலைகள், இன அழிப்பு போன்றவை தமிழ் மக்கள் மத்தியில் மகிந்த ராஜபக்ஷ மீது வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.

அவ்வேளையில், மாற்று அரசியல் தேர்வு பற்றிய எண்ணங்கள் மக்கள் மத்தியில் காணப்பட்டது.
அதற்கிணங்க நம்பிக்கையுடன் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தமிழ் மக்கள் முன்வந்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கைகள் இன்று சிதைவடைந்திருக்கிறது என்பது உண்மை தான்.

மகிந்த ராஜபக்ஷ காலத்தில் விடுவிக்க முடியாது என்று கூறிய மயிலிட்டி துறைமுகம் உட்பட்ட மிக முக்கியமான பிரதேசங்கள் எங்களுடைய தொடர் அழுத்தங்களின் காரணமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற பிரதேசங்களில் காணிச் சுவீகரிப்புகளும், சிங்களக் குடியேற்றங்களும் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

மன்னாரில் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் மோத விடக்கூடிய வகையில் முஸ்லிம் மக்களுக்கு காணிகள் வழங்கப்படுவதுடன், தமிழர்களுடைய இருப்பை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் விகிதாசாரத்தைக் குறைக்கும் வகையிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல், வவுனியாவில் நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள பொக்கட்டான் குளம், பழம்பாசி போன்ற பிரதேசங்களில் பெரியளவில் சிங்களமயமாக்கல் வேலைகள் இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாகவிருக்கிறது.

ஒருபுறம் யாழ்ப்பாணத்தில் காணிகள் விடுவிக்கப்படுகின்ற அதேநேரம், பெருமளவான நிலங்கள் வெவ்வேறு இடங்களில் சூறையாடப்படுகின்றன.

அரசியல் கைதிகளுடைய விடுதலையிலும் காலத்தை இழுத்தடிக்கும் வேலைகளையே அரசு முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. 1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோது, அரசியல் கைதிகளாக இருந்த அனைத்து போராளிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். அதேபோல் விடுதலைப் புலிகளுடைய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற காலங்களில் அரசியல் கைதிகளுக்கான பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன.

ஆனால், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாற்றத்துக்காக தமிழர்கள் வாக்களித்தும் கூட அரசியல் கைதிகளுடைய விடுதலையில் அரசாங்கம் நியாயமாக இதய சுத்தியுடன் நடக்கவில்லை. அந்த அடிப்படையில் அரசாங்கத்தின் மேல் நாங்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகளில் நல்ல நம்பிக்கைகள் ஏற்படவில்லை என்பது உண்மையானது.

கேள்வி: காணி அபகரிப்புகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறினீர்கள். இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு கூட்டமைப்பு எவ்வாறான முயற்சிகளை எடுத்துள்ளது?

பதில்: இது சம்பந்தமாக அண்மையில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அந்தக்கூட்டத்தில் எந்தெந்த இடங்களில் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன என்பது தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 30ஆம் திகதிக்குள் காணி சுவீகரிப்பு தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையொன்றை தயாரிப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதும் விரைவில் ஜனாதிபதியைச் சந்திக்கவிருக்கிறோம்.

கேள்வி: ஆட்சி மாற்றத்தில் மிக முக்கியமான பேசு பொருளாக இருந்த புதிய அரசியலமைப்புக்கான வேலை தொடர்ந்தும் மந்த கதியில் பயணிப்பதையே அவதானிக்க முடிகிறது. இந்தப்பணி தொடர்பில் இன்று பலரும் நம்பிக்கையிழந்து பேசுவதையே அவதானிக்க முடிகிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில்: நாங்களும் நம்பிக்கையிழந்துதான் நிற்கிறோம். ஒப்பந்தங்கள் செய்து அவை கிழிக்கப்பட்டவை தான் கடந்தகால வரலாறுகள்.

அந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துடன் தான் பேசவேண்டும்; அரசாங்கத்துக்குள் தான் தீர்வு காணவேண்டும்; இலங்கைக்குதான் பேச வேண்டும் என்று சர்வதேச நாடுகள் பிரயோகிக்கும் அழுத்தங்கள் காரணமாகவும் ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க முயற்சிகள் எடுத்துவந்த சூழ்நிலையில் நாங்கள் (கூட்டமைப்பு) முழுமையான ஆதரவை அரசாங்கத்துக்கு வழங்கியிருந்தோம்.

அந்தவகையில் நாங்கள் அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை அரசாங்கம் தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறதே தவிர, எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வைத் தரக்கூடிய வகையில் அரசாங்கம் செயற்படவில்லை என்ற எண்ணம் எங்களிடமும் பரவலாக எழுந்து நிற்கிறது.

சர்வதேச நாடுகளிடத்தில் நல்ல பெயரைப் பெற்றுக்கொள்வதற்காகவும் நல்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவும் மாத்திரமே கூட்டமைப்பை அரசாங்கம் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.

எங்களை (கூட்டமைப்பை) பயன்படுத்தி சிங்கள மக்களுக்கான அபகீர்த்தியையும் அவர்கள் மீதிருந்த பழிச்சொற்களையும் களைவதற்கான முயற்சிகளை எடுத்து அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியும் கண்டிருக்கிறார். அதில் நாங்கள் தோல்வியடைந்திருக்கின்றோம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

கடந்த மூன்றரை வருடங்களும் அரசாங்கத்துக்கு நாங்கள் ஆதரவு வழங்கியதற்குக் காரணம் இந்த அரசாங்கம் ஒரு தீர்வைத்தரும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான்.

ஆனால், இன்று நாங்கள் தோல்வி கண்டு கொண்டு செல்கின்றோமோ என்ற எண்ணம் தோன்றியிருப்பது உண்மை. அரசாங்கம் எங்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்ற நிலைப்பாடு தமிழ் மக்கள் மத்தியிலும் எங்களிடமும் தோன்றியிருக்கிறது.

அந்த அடிப்படையில் மாற்றுவழிகள் பற்றி சிந்திப்பதற்கு கூட்டமைப்பு இன்று தள்ளப்பட்டிருக்கிறது.

கேள்வி: ஆனால், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இன்றும் அரசியலமைப்புப் பணி தொடர்பில் நம்பிக்கையுடன் இருப்பதாக கருத்துகள் வெளியிட்டு வருகிறாரே…?

பதில்: ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையிலும் அவருக்கிருக்கின்ற அரசியல் அறிவு அனுபவம் என்பவற்றின் அடிப்படையிலும் அவர் அவ்வாறு கூறுவது சரியாக இருக்கலாம்.

இன்று பல்வேறு நெருக்கடிகளுக்கு தமிழ் மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக முன்னாள் போராளிகளை பயன்படுத்தி இராணுவம் செய்கின்ற செய்பாடுகள், சி.எஸ்.டி. என்கிற அமைப்புக்கூடாக தமிழர்களை வைத்து அவர்கள் நடத்துகின்ற செயற்பாடுகள், காணி விடுவிப்பில் அரசு காண்பிக்கின்ற மந்தமான போக்கு, அரசியல் கைதிகளுடைய விடுதலையில் அரசு காட்டுகின்ற அசமந்த போக்கு, வேலை வாய்ப்பின்றி இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்யுவதிகள் விடயத்தில் எந்த முன்னேற்றமான செயற்பாடுகள் எடுக்கப்படாத நிலைமை என பல ஆயிரக்கணக்கான பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்கின்ற மக்களிடம் ஒரு நம்பிக்கைக் கருத்தை விதைப்பது தான் ஒரு இனத்தினுடைய பிரதிநிதியாக இருப்பவரதும் அந்த இனத்தினுடைய கட்சியின் தலைவராக இருப்பவரதும் செயற்பாடாக இருக்க முடியும்.

எனவே, அவருடைய (சம்பந்தன்) நம்பிக்கையை நாங்கள் நிராகரிக்கவில்லை. அது அவருடைய அரசியல் தந்திரோபாயமாகவும் இருக்கலாம்.

கேள்வி: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எதனையும் சாதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக அந்தக் காலகட்டத்தில் கொண்டுவந்தது. நூற்றுக்கு நூறுவீதம் சரியானது. அதற்கு காரணம் அன்றிருந்த அரசியல் சூழல். அதன் அடிப்படையில் கூட்டமைப்பு அதனை சரியாக நடைமுறைப்படுத்தியிருந்தது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவருடைய காலத்தில் தவறுகளை செய்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுவதற்கான தகுதி டக்ளஸ் தேவாநந்தாவுக்கு இல்லை.

1990 களிலிருந்து அரசாங்கத்துடன் ஒட்டிக்கொண்டு தன்னுடைய காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் டக்ளஸ் தேவாநந்தா, தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ, தமிழர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகளையோ எடுத்துக்கொடுக்க முடியாத ஒருவராக இருந்து வந்திருக்கிறார்.

வடக்கில் ஒரு தொழிற்சாலையைக் கூட அவருடைய 28 வருட பயணத்தில் ஆரம்பிக்க முடியாமல் போயிருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர் மற்றவர்களைப் பற்றி கதைப்பதற்கு அருகதையற்றவர்.

வடக்கு மாகாணசபையை யார் பொறுப்பெடுத்தாலும் அங்கிருந்து கொண்டு அஎதனையும் சாதிக்க முடியாது.

இதுதான் யதார்த்தம். சாதாரணமாக ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்க வேண்டுமாகவிருந்தாலும் அதில் ஆளுநருடைய செல்வாக்குதான் மேலோங்கி நிற்கிறது. இதுபோன்று பல்வேறு விடயங்களிலும் ஆளுநரினதும் மத்திய அரசினதும் தலையீடுதான் மேலோங்கி நிற்கிறது.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியை வைத்துக்கொண்டு எதனையும் செய்ய முடியாது. வருடமொன்றுக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டால் அந்த நிதியில் மூவாயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபா நிதி அங்கு வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு சென்றுவிடுகிறது. மிகுதி 1500 மில்லியன் ரூபா நிதியினை அமைச்சுக்களுக்கும், திணைக்களகங்களுக்கும் ஒதுக்கிவிட்டால், எதனைக்கொண்டு அபிவிருத்தி மற்றும் இதர வேலைகளைச் செய்வது?

இவ்வாறு பல விடயங்களில் முட்டுக்கட்டை இருந்து வருகிறது. சில விடயங்களை அவரால் முதலமைச்சரால் கையாண்டிருக்க முடியும். அதனை அவர் தவறவிட்டிருக்கிறார் என்பது உண்மை. திட்டமிடல்கள் எதுவும் முதலமைச்சரால் செய்யப்படவில்லை.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று ஐந்து வருடங்கள் நெருங்குகிறது. வடக்கில் 33 பிரதேச செயலாளர்கள் இருக்கிறார்கள்.

ஒரு நாள் கூட இவர்களில் ஒருவரைக்கூட அழைத்து முதலமைச்சர் பேசியதில்லை. அதேபோல் ஐந்து மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களை ஒன்றாக அழைத்து பேசக்கூடிய வல்லமை முதலமைச்சரிடம் இல்லாமல் இருந்திருக்கிறது. அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் சிநேகபூர்வமாக கூட அந்த அழைப்பை அவரால் விடுக்க முடியாமல் போய்விட்டது.

அதேபோல் வட மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களையும், வடமாகாண சபையினுடைய உறுப்பினர்களையும் இணைத்து ஒரு இணைப்புக் கூட்டத்தை நடத்தி முன்னேற்றங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ளவும் முதலமைச்சர் தவறிவிட்டார். இவ்வாறு அவரால் செய்யக்கூடிய பல்வேறுபட்ட விடயங்களை அவர் தவறவிட்டிருக்கிறார்.

ஆனால், யார் தான் முதலமைச்சருடைய கதிரையில் அமர்ந்தாலும் எதனையும் பெரியளவில் சாதிக்க முடியாது. ஒரு அரசாங்க அதிபர் மாகாண முதலமைச்சருக்குப் பதில் கூறக்கூடியதான அதிகாரம் வரும் வரைக்கும், ஒரு பிரதேச செயலாளரை கட்டுப்படுத்துகிற அதிகாரம் முதலமைச்சருக்கு வரும் வரைக்கும் முதலமைச்சரால் எதனையும் சாதிக்க முடியாது.

ஒரு தொழிற்சாலையை அமைக்கக்கூடிய அதிகாரம் முதலமைச்சரிடம் இல்லை; ஒரு காணியை பகிர்ந்தளிக்கக்கூடிய அதிகாரம் இல்லை. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் தவறான நிர்வாக நடவடிக்கைகள் இருப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர் ஒரு கலகக்காரனாக இருந்தாரே தவிர, ஒரு தலைவராக தன்னை அடையாளப்படுத்தவில்லை என்பது உண்மையானது.

கேள்வி: கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கிடையிலான உறவு எவ்வாறு இருக்கிறது?

பதில்: 2010ஆம் ஆண்டு முதல் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகள் இருப்பதான செய்திகள் அரசியல் தளத்தில் பேசப்பட்டு வருவதை அவதானித்து வருகின்றோம்.

அந்த அடிப்படையில் இன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று கட்சிகளுக்கிடையில் வேறுபாடுகள், கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நான் உணரவில்லை.

கருத்து மோதல்கள் இருக்கின்றனவே தவிர, ஒற்றுமையில் எந்தக் கீறல்களும் ஏற்படவில்லை.

கேள்வி: எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரன் தனியாக செல்லும் ஒரு போக்கை எடுப்பார் என்ற செய்திகள் வெளிவருகின்றன. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: ஏற்கனவே நான் கூறியது போன்று 2013 இல் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட்டமைப்பு எடுத்த முடிவு நூற்றுக்கு நூறு வீதம் சரியானது.

அவ்வேளையில், நடந்த பேச்சு வார்த்தைகளில் நானும் அவருடன் பேசியிருக்கிறேன். அந்த அடிப்படையில் சாவகச்சேரியில் நடந்த கூட்டமொன்றில் பேசியிருந்த முதலமைச்சர், தன்னை இந்த சிறைவாழ்க்கைக்குள் தள்ளியதில் ஸ்ரீதரனுக்கு பங்கிருக்கிறது என்று கூறியிருந்தார்.

அதேபோல், தான் இரண்டு வருடங்கள் மாத்திரமே தான் பதவி வகிப்பேன், மிகுதிக்காலத்தை மாவை சேனாதிராஜா வகிக்க வேண்டும் என்று கூட முதலமைச்சர் ஆரம்பகாலத்தில் கூறியிருந்தார்.

தற்பொழுது கட்சிக்கும் அவருக்குமிடையில் விரிசல்கள் ஏற்பட்டிருப்பது உண்மை. அந்த அடிப்படையில் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பாக மாவை சேனாதிராஜாவை களமிறக்க நாங்கள் விருப்பம் கொண்டிருக்கின்றோம்.

அதன் அடிப்படையில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுடன் இவ்விடயம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்படும்.

முதலமைச்சர் தனியாக களமிறங்குவதாக விரும்பினால் அவர் களமிறங்கட்டும். மக்கள் தீர்மானிக்கட்டும் யார் தங்களுடைய தலைவர் என்பதை. நாங்கள் கொண்டுவந்த வேட்பாளர் ஒருவர் தனியாக களமிறங்குவதாக அறிவித்தால் அதனை நான் வரவேற்கிறேன்.

அவரை (முதலமைச்சர்) வளர்த்துவிட்ட கட்சி, அரசியலுக்குள் அவரைக் கொண்டு வந்த கட்சிக்கு எதிராக அவர் தேர்தலில் களமிறங்குவதை நான் வரவேற்கிறேன். யாருக்கு பலம் இருக்கிறது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

பிரிந்து செல்லும் முடிவை முதலமைச்சர் எடுத்தால் மக்கள் களத்தில் அவரை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

தமிழர்களுடைய உரிமைக்காக போராடி கொண்டிருக்கின்றதொரு தேசியக் கட்சிக்கு (தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு) எதிராக இறங்கி அவர் ஒரு தனி அணியாக செல்வாராகவிருந்தால் அது தமிழர்களுக்கு செய்கின்ற ஒரு துரோகமாகவே நான் பார்க்கின்றேன். எதுவாக இருந்தாலும் நாங்கள் தைரியத்துடன் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றோம்.

கேள்வி: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியிருப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்: அமெரிக்காவின் வெளியேற்றம் ஈழத்தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது ஆரோக்கியமான விடயமல்ல. இந்த விடயத்தை நாங்கள் மிகவும் கவலையோடு பார்க்கின்றோம்.

மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கையிழந்து அமெரிக்க வெளியேறியிருப்பது என்பது இலங்கைக்கு சாதகமாக அமையுமே தவிர, தமிழர்களுடைய இன அழிப்பு, போர்க்குற்றங்கள் தொடர்பில் மிகப்பெரிய பாதக நிலைமையை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்போகிறது.

எனவே, அமெரிக்கா தமிழர்களுடைய விடயத்தில் தொடர்ந்தும் கரிசனைகளை செலுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழர்களுடைய பிரச்சினையைக் கொண்டு செல்ல யாருமில்லை என்ற நிலைமை உருவாகிவிடும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.