ஞானசார தேரர்: காவிக்குள்ளிருந்து கம்பிக்குள்!- என்.சரவணன் (கட்டுரை)

0
525

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஹோமாகம நீதிமன்றத்தால் ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையை வழங்கி அதை ஆறு மாதத்திற்குள் கழிக்கலாம் என்றும் நீதவான் 14ஆம் திகதியன்று உத்தரவிட்டதுடன், சந்தியா எக்னெலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்தமைக்காக ஐம்பது ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 24ஆம் திகதி அவர் குற்றவாளி என்பதை ஹோமாகம நீதிமன்ற நீதவான் உதேஷ் ரணசிங்க உறுதிசெய்திருந்தார்.

625.500.560.350.160.300.053.800.900.160.90சந்தியா எக்னெலிகொட

சந்தியா எனும் பெண் போராளி

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது 2010 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், கேலிச் சித்திரக் கலைஞருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு நீதிமன்ற வளாகத்தில் வைத்து 25.01.2016 அன்று மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது சுமத்தப்பட்டிருந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

பிரகீத் எக்னெலிகொட ஒரு நேர்மையான சிரேஷ்ட ஊடகவியலாளர். இறுதி யுத்தத்தின் போது யுத்த களத்தில் சர்வதேச ரீதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி அரசாங்கம் மக்களைக் கொன்றொழித்தது என்பதைக் கண்டறிந்தார்.

அதற்கான ஆதாரங்கள் பலவற்றை இரகசியமாக திரட்டியிருந்தார். அது பற்றிய விபரங்கள் சிறிதாக கசிந்தபோது அவரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று சித்திரவதை செய்து பின்னர் விடுவித்தனர்.

ஆனாலும் அவர் தனது பணியைத் தொடர்ந்தார். தான் கண்டுபிடித்திருந்த ஆதாரங்களைப் பற்றி சர்வதேச மனித உரிமை சக்திகளுக்கு தெரியப்படுத்தத் தொடங்கினார்.

25.01.2010 அன்று பிரகீத் கடத்தப்பட்டார். அதன் பின் இன்று வரை அவருக்கு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது.

இந்த 8 ஆண்டுகளாக நீதி கோரி போராடி வருகிறார் அவரது மனைவி சந்தியா. அவர் தினசரி காலை ஆகாரம் செய்து விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டுதான் அவரது அன்றாடச் செலவையும் பிள்ளைகளை வளர்ப்பதற்காகவும் தொடர்ந்து போராட்டத்துக்கும் செலவுகளை சமாளித்து வருகிறார்.

பிரகீத் இன்று உயிருடன் இல்லை என்பதை பிரகீத்தின் நண்பர்களும் மற்றோரும் நம்புகிற போதும் இன்றும் பிரகீத் உயிருடன் தான் இருக்கிறார் என்று நம்பி அவரை திருப்பித் தரும்படி போராடி வருகிறார் சந்தியா.

பிரகீத் தொடர்பான வழக்கில் சந்தேகநபர்களாக புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த 8 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தார்கள்.

அந்த வழக்கில் பிரகீத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளவர் என்று நிரூபிப்பதற்கு புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எத்தனித்தார்கள்.

ஆனால் 25 ஜனவரி 2016 அன்று ஹோமாகம நீதிமன்றத்தில் விசாரணை நடந்தபோது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் பிரகீத்துக்கு புலிப் பயங்கரவாதத்துடன் தொடர்போ, அவர்களுக்கு ஆதரவளித்ததோ கிடையாது என்று நீதிமன்றத்துக்கு உறுதிப்படுத்தினார்கள்.

அந்த 8 பேருக்கும் பிணை வழங்காது தடுப்புக்காவலை நீடிப்பு செய்தார் நீதவான். அந்த விசாரணையன்று நீதிமன்றத்துக்கு ஞானசாரருடன் பொதுபலசேனா இயக்கத்தவர்களும் கூடினார்கள்.

தீர்ப்பால் ஆத்திரமுற்ற அவர்கள் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சந்தியாவை மிரட்டினர். அன்று சந்தியாவுக்கு ஞானசாரர் விடுத்த உயிரச்சுறுத்தல் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தான் இப்போது வழங்கப்பட்டிருக்கிறது.

gana-1மகிந்த ஆட்சியின் இனவாதத் தளபதி ஞானசாரர்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் கிட்டத்தட்ட சிங்கள பௌத்த சக்திகளை பலப்படுத்துகின்ற உசுப்பேத்தி கொதிநிலையில் வைத்திருக்கும் மறைமுக ரெஜிமென்டாக போதுபல சேனாவும், ஞானசார தேரரும் இயங்கினார்கள்.

சிங்கள பௌத்த சித்தாந்தத் தளத்துக்கு காலத்துக்குக் காலம் தலைமையேற்று நடத்த அவ்வப்போது தலைவர்கள் தோன்றி மறைவார்கள். மகிந்த காலத்தில் அந்தப்பணிக்கு தெரிந்தோ, தெரியாமலோ தலைமை கொடுத்தவர் ஞானசார தேரர்.

அரசாங்கம் பகிரங்கமாகவே ஞானசாரருக்கு ஆதரவையும், அனுசரணையும் வழங்கியது. ஞானசார தேரர் அரச ஆதரவுடன் மேலும் பலமடைந்தார்.

அவரின் அடாவடித்தனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தன. அரச அதிகாரிகளுடனும், பொலிஸ் படையினருடனும் கூட அநாவசியமாக வன்சொல் பயன்படுத்தி சண்டித்தனம் செய்தார்.

பொலீசார் அவரைக் கண்டு நெளிந்து வளைந்தார்கள். பொலிசாரின் கண் முன்னாலேயே நிகழ்த்தப்பட்ட சண்டித்தனங்களின் போது தலைசொறிந்து கொண்டு அபே ஹாமுதுருனே என்றார்கள்.

அது அளுத்கம கலவரம் வரை கொண்டுசென்றது. மகாசங்கத்தினர் கூட அவரைக் கண்டிக்க விமர்சிக்கத் தயங்கினார்கள். ஒதுங்கியே நின்றார்கள்.

இந்த இடைக்காலத்தில் அவரின் அடாவடித்தனங்களுக்கு எதிராகப் பல வழக்குகள் தொடரப்பட்டன. மகிந்த ஆட்சி காலத்தில் பல வழக்குகளில் இருந்து இலகுவாக அவரால் தப்பிக்க முடிந்தது.

அப்போது நீதிமன்றத்தின் சுயாதீனம் எந்தளவு சீரழிந்திருந்தது என்பது நாட்டவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அளுத்கம கலவரத்திற்குப் பொறுப்பான எவரும் மகிந்த அரசாங்கத்தால் தண்டிக்கப்படவில்லை. நான்கு வருடங்கள் கழிந்தும் இன்றுவரை எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமர்ந்த போது இனி இனவாத சக்திகளின் கொட்டம் அடக்கப்படும் என்கிற நம்பிக்கை ஜனநாயக சக்திகளிடமும், சிறுபான்மை மக்களிடமும் இருந்தது.

ஆனால் ஞானசாரர் போன்றோரின் பலம் எத்தகையது என்பது அவர்களின் இருப்பும், தொடர் நடவடிக்கைகளும் மெய்ப்பித்தன.

ஆனால் நீதித்துறையின் சுயாதீனம் மக்களுக்கு சற்று ஆறுதலைத் தந்தது. நீதிமன்றங்கள் காலத்தை இழுத்தடித்தேனும் இப்போது இந்த வழக்குத் தீர்ப்பை வழங்கியிருப்பது ஆறுதலைத் தந்திருக்கிறது.

ஞானசாரருக்கு எதிரான நூற்றுகணக்கான வழக்குகளில் முதல் தடவையாக தண்டனை நிறைவேற்றப்பட்ட வழக்கு இது.

தனது காலம் முழுவதும் நீதிமன்றங்களுக்கு அலைந்து திரிவதிலேயே கழிகிறது என்று சில மாதங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் நொந்துகொண்டதும் நினைவுகொள்ளத்தக்கது.

சமீபத்தில் கண்டி கலவரத்துடன் தொடர்புடையவர் என்று கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அமித் வீரசிங்க கூட ஞானசாரவால் உருவாக்கப்பட்டவர் என்பதை அனைவரும் அறிவர். அமித் வீரசிங்கவை அனுராதபுர சிறைச்சாலைக்கு அடிக்கடி சென்று பகிரங்கமாகச் சந்தித்து வருபவர் ஞானசாரர்.

வரலாற்றில் எந்தப் பிக்குமாரும் செய்யாத அடாவடித்தனங்களையும், மிரட்டல்களையும் பகிரங்கமாக அரசாங்க அனுசரணையுடன் நிகழ்த்தியவர் ஞானசாரர். இந்தத் தீர்ப்பு அவருக்கு மட்டுமல்ல இனிக் காவியுடயை அசைக்கமுடியாத அதிகாரக் கவசமாக கருதி இயங்குகிற அனைவருக்குமொரு எச்சரிக்கையாக இருக்கவேண்டும். படிப்பினையாக இருக்கவேண்டும்.

ஞானசார தேரரை விடுவிப்பதற்காக ஜனாதிபதியை அணுகி ஜனாதிபதி மன்னிப்பின் பேரில் விடுவிப்பதற்கான முயற்சிகள் திரைமறைவில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகப் பரவலான கதையுண்டு. அது நிகழ்ந்தால் நீதியின் மீது மக்களுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் செத்துவிடும் என்பது உறுதி.

என்.சரவணன்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.