யாழில் துப்பாக்கியால் இலக்குவைக்கப்பட்டு உயிர் தப்பிய இளைஞன்! (Video)

0
700

யாழ். மல்லாகத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(17)இரவு சுன்னாகம் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞனொருவர் உயிரிழந்திருந்தார்.

மல்லாகம் சகாய மாதா பெருநாளின் ஆரம்ப நாளான கொடியேற்ற விழாவில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் சில இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்களைத் தடுக்க முற்பட்டனர். இதனையடுத்தே சுன்னாகம் பொலிஸாரினால் துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் யாழ்.மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன்(வயது-32) என்பவரே உயிரிழந்தவராவார்.

ஆனால், இந்தச் சம்பவத்தில் முதலில் பொலிஸாரினால் இலக்கு வைக்கப்பட்டவர் வேறொரு இளைஞரெனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த இளைஞனை அவரது சித்தப்பா முறையிலான இளைஞன் காப்பாற்ற முற்பட்ட போதே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் உயிர்தப்பிய 24 வயதான டெஸ்மன் அங்கு நடந்த விடயத்தை எமது செய்திச் சேவைக்கு விபரிக்கையில்,

ஐந்து மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த இளைஞர் குழுவினர் என்னைத் தாக்குவதற்கு வந்தார்கள். அவர்களுடன் எனக்கு முன்விரோதம் எதுவும் காணப்படாத போதும் என்னைத் தாக்குவதற்கு வந்தார்கள்.

அங்கு வந்தவர்களில் சிலர் “இவரோ…இவரோ…” எனக் கேட்டு என்னைத் தாக்கினார்கள். அவர்கள் என்னைத் தாக்கிய இரும்புப் பைப் நிலத்தில் விழவே அதனை நான் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது தலையிலும், கையிலும் சராமரியாகத் தாக்கினார்கள். அதன் பின்னர் அங்கு நின்ற சைக்கிளால் என் மீது தூக்கியெறிவே நான் நிலத்தில் விழுந்தேன்.

அப்போது என்னைக் குறித்த குழுவைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தூக்கிச் சென்று அங்கு நின்ற வானொன்றுடன் சாத்தி வாளால் வெட்டுவதற்கு முயன்றுள்ளார்கள்.

அப்போது அவ்விடத்திற்குச் சடுதியாகப் பொலிஸார் வருகை தந்திருந்தனர். அவர்களில் பொலிஸாரொருவர் தனது துப்பாக்கியில் உடனடியாக குண்டுகளை லோட் பண்ணி என்னைச் சுடுவதற்கு ஆயத்தமானார். எனது நெஞ்சில் பிஸ்டல் பட்டது.

அப்போது அங்கு வந்த சித்தப்பா அவரை நான் அண்ணை… என்று தான் அழைக்கிறனான். அவர் என்னை வந்து கட்டிப் பிடிக்க அவரது முதுகில் பொலிஸாரின் சூடு விழுந்தது.

அப்போது அவர் வானுக்கு அண்மையில் நிலத்தில் விழுந்து கிடந்தார். அப்போது என்னைத் தாக்குவதற்கு வந்த இளைஞர்களில் ஒருவரைப் பிடித்தவாறே பொலிஸாரை நோக்கிச் சேர் எங்களை ஏன் சுடவருகிறீர்கள்…எங்களைத் தாக்குவதற்கு வந்தவர்கள் மீது தானே நீங்கள் சுடவேண்டுமெனத் தெரிவித்தேன்.

அதற்கிடையில் அப்பகுதிக்கு வருகை தந்த எனது உறவினரொருவர் என்ன நடந்தது? என்று கேட்க நான் பொலிஸார் துப்பாக்கியால் சுட்ட விடயத்தைத் தெரியப்படுத்தினேன்.

அப்போது துப்பாக்கியால் சுட்ட பொலிஸ்காரர் இறுமாப்புடன் “நான் தான் சுட்டனான். உன்னையும் சுடுவேன் எனத் தெரிவித்து அவரையும் நிலத்தில் தள்ளிவிட்டார்.

இதன்பின்னர் துப்பாக்கியால் சுடப்பட்டு நிலத்தில் விழுந்து கிடந்த சித்தப்பாவை அங்கிருந்தவர்கள் தூக்கினார்கள். அப்போது அவரது நெஞ்சுப் பகுதியால் இரத்தம் கொட்டியது.

இந்தச் சம்பவத்தில் பொலிஸாரால் நீங்கள் தான் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக கருதுகிறீர்களா? என வினாவிய போது,

ஆமாம் அவ்வாறே கருதுகிறேன். நடந்த சம்பவத்தைப் பார்க்கும் போது நானே இலக்குவைக்கப்பட்டிருக்கும் விடயம் புலனாகிறது என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.