ஞானசாரவின் காவியை அகற்றியமைக்கு கண்டனம்: மீள வழங்குமாறு அவரது சங்க சபை நீதி அமைச்சுக்கு கடிதம்

0
176

சங்க சபையின் அனுமதியின்றி, தமது சபையைச் சேர்ந்த தேரரான ஞானசாரவின் காவி உடையை அகற்றியமைக்கு, கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சபை எதிர்ப்பு தெரிவித்து, நீதியமைச்சுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

குறித்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என, அச்சபையின் பிரதான பதிவாளர் பேராசிரியர் கோட்டபிட்டியே ராஹுல தேரரின் கையொப்பத்துடனான, கடிதமொன்று நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு அனுபப்பட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு நீதிமன்றினால் தண்டனை வழங்கப்பட்டபோதும், அவரது துறவற உடையை அகற்றுவது குறித்தான உத்தரவு வழங்கப்படவில்லை எனவும், விருப்பத்திற்கு மாறாக, காவி உடையை அகற்றி, குறிப்பிட்ட காலத்திற்கு அவரை சிறையில் வைப்பதன் மூலம், அவர் துறவறத்தை கடைப்பிடிப்பது தொடர்பான ஒழுக்க ரீதியான பிரச்சினைகள் ஏற்படலாம் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, 2,500 வருட வரலாற்றில் உருவான பௌத்த பிக்கு அமைப்பின் பாரம்பரிய உரிமை மற்றும் கலாசாரத்தை அழிக்காதிருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதோடு, உடனடியாக கலகொடஅத்தே ஞானசார தேரரிடமிருந்து நீக்கப்பட்ட காவி உடையை மீண்டும் வழங்குமாறு, கோட்டை ஶ்ரீ கல்யாணி சாமக்றிதர்ம மகா சங்க சார்பில் அறிவிப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போதுள்ள சட்டத்திற்கு அமைய, பௌத்த தேரர் ஒருவரை அவரது துறவற நிலையிலிருந்து அவரை தாழ்த்தி, துறவற ஆடையை நீக்கும் அதிகாரம், அவருக்குரிய சங்க சபைக்கு உட்பட்டதாகும் என, அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டமை தொடர்பில், மல்வத்து – அஸ்கிரி மகாநாயக்கரின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக, சிங்கள ராவய அமைப்பின் செயலாளர் நாயகம், மாகல்கந்த சுதத்த தேரர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்குமாறு தெரிவித்து, சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதத்த தேரர் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார்.

சர்ச்சைக்குரிய பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகமான கலகொடஅத்தே ஞானசார தேரர், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 06 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.