யாழில் பதற்றம்; துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

0
277

யாழ்ப்பாணம் – மல்லாகத்தில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து தெல்லிப்பளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – கே.கே.எஸ் வீதி மல்லாகம் மாதா கோவிலடியில் இன்றிரவு சம்பவம் இடம்பெற்றது.

மல்லாகம் குழமங்காடு பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என வைத்தியசாலையில் உறுதிப்படுத்தப்பட்டது.

“தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெற்ற திடீர் மரண விசாரணைக்கு பொலிஸார் இருவர் சென்று திரும்பினர்.

அதன்போது வீதியில் இரு கும்பல்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸாரின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. மற்றொருவரும் படுகாயமடைந்தார்” என்று பொலிஸார் கூறுகின்றனர்.

“சகாய மாதா ஆலயத்தில் பெருநாள் இடம்பெற்றது. அதில் பொதுமக்கள் கூடியிருந்தனர். அதில் கலந்துகொண்டிருந்த இளைஞர்கள் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது” என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.