நோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்

0
195

கடந்த முப்பது நாட்களை நம்பிக்கையாளர்கள் நோன்பிருந்து, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்தனர். இதன் நிறைவாக கொண்டாடப்படுவதே ஈகைத் திருநாள்.

கடந்த முப்பது  நாட்களை நம்பிக்கையாளர்கள் நோன்பிருந்து வழிபாடுகளில் ஈடுபட்டு, தான தர்மங்களை வழங்கி திருமறை ஓதி இறை உணர்வோடு கழித்தனர். இதன் நிறைவாக கொண்டாடப்படுவதே ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள் (அரபியில் ஈதுல் பித்ர்).

ஈகைத் திருநாள் ஒரு வெற்றித் திருநாள். பசி, தாகம், இச்சை போன்ற தேவைகளை விலக்கியும் தீமைகளைச் செய்யா வண்ணம் உடல் உறுப்புகளைக் கட்டுப்படுத்தியும் தன்னைத்தானே வெற்றி கொண்ட நாள்.

எதிரியை வெற்றிகொள்வதைவிட தன்னைத் தானே வெற்றிகொள்வதே மிகப் பெரும் வெற்றியாகும்.

இந்நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள். ஒரு மாத காலம் கட்டுப்பாடாக வாழ உதவியதற்காகவும் இம்மாதத்தில் இறைமறையாம் திருக்குர்ஆனை அருளியதற்காகவும் இறைவனுக்கு நன்றி செலுத்தும் நாள்.

இறைவனை வணங்கியும் இறைவனுடைய படைப்புகளுக்கு வழங்கியும் நன்றி தெரிவிக்கும் நாள்.

இந்நாள் இறைவனை நினைவுகூரும் நாள். மிகவும் மகிழ்ச்சிகரமான நாட்களிலே இறைவனை மனிதன் மறந்துவிடுவான்.

இந்த நாளில் இறைவனை நமக்கு புரிந்த அருட்கொடைகளை  நினைத்து தொழுகை, தியானம், நலிவுற்றவர்களுக்கும் துயருற்றவர்களுக்கும் உதவி செய்து இறைவனை நினைவுகூர வேண்டும்.

இது ஒரு அறுவடை நாள். நாம் செய்த வழிபாடுகளுக்காகவும், அறக்கொடைகளுக்காகவும் இறைவன் தனது கருணையை, மன்னிப்பை, அருளை வாரி வழங்கும் நாள். நாமும் அதே கருணையை சக மனிதர்களுக்கும் அன்பு, பொருள் உதவி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் மூலம் வழங்க வேண்டும்.

இந்நாள் மன்னிப்பு அளிக்கும் நாள். நாம் செய்த நற்செயல்களை நமது தவறுகளை இறைவன் மன்னிக்கும் நாள்.

மனம் திருந்தி, மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புக் கோரினால் இறைவன் நமது பாவங் களை மன்னிப்பதாக வாக்களித்துள்ளான். இறைவன் நம்மை மன்னிப்பதைப் போலவே இந்நாளில் நாமும் நமக்கு தீங்கிழைத்தவர்களை மன்னிப்போம்.

“இறைவன் உங்களை மன்னிக்கவிருப்பது போல நீங்களும் மற்றவர்களை மன்னிக்க வேண்டாமா” என்று கேள்வி எழுப்புகிறது குர்ஆன் (24:22).

மன்னிப்பதன் மூலம் பழிவாங்கும் எண்ணத்திலிருந்து உள்ளம் விடுதலை பெற்று மனம் அமைதி பெறுகிறது. இதனால் சமூகமும் அமைதி பெறுகிறது.

இது அமைதிக்கான திருநாள். இறைவன் வழங்கிய இறைக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால் இறைவனோடு அமைதி பெறுகின்றீர்கள். சமூகத்தோடும் அமைதி பெறுகின்றீர்கள். உங்களோடும் அமைதி பெறுகின்றீர்கள்.

ஈகைத் திருநாளை சமூகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் தொழுகைக்கு செல்லும் முன்னரே ‘சதகத்துல்  பித்ர்’ எனும் தான தர்மத்தை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.

201806160838157168_1_ramadan._L_styvpf“பெருநாளன்று குளித்து, இருப்பவற்றில் சிறந்த ஆடையை அணிந்து ‘ஈத்கா’ எனும் திறந்தவெளிக்கு தொழுகைக்குச் செல்ல வேண்டும்.

(பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தலாம்) அங்கு தொழுகைக்குப் பின் பெருநாள் உரை நிகழ்த்தப்படும். அதிலும் கலந்துகொள்ள வேண்டும்.

தொழுகை நிறைவுற்றதும் மக்கள் ஒருவரையருவர் ஆரத்தழுவி தமது வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.

உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள். பெருநாளின்போது வீண் விரயத்திற்கும் கேளிக்கைகளுக்கும் இடமில்லை.

அனைவருக்கும் ஈத் முபாரக் – ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
– டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முகம்மது, சென்னை.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.