சின்ன வயசுல ரஜினி வெறியன்; 19 வயசுல அவர் பட இசையமைப்பாளர்!” ரெஹானா

0
734

“இன்றைக்கு (ஜூன் 13-ம் தேதி) என் பையன் பிரகாஷின் பிறந்தநாள். சின்ன வயசுல அவனோடு நிறைய நேரம் செலவிட்டிருக்கேன்.

அந்த மெமரீஸ் எப்பவும் என் நினைவில் இருக்கும். மியூசிக் டைரக்டராவும் நடிகராகவும் கலக்கிட்டிருக்கான்.

இந்த வளர்ச்சி பிள்ளைக்கு எப்பவும் தொடரணும்” என நெகிழ்கிறார் ரெஹானா. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து மகிழ்வுடன் பகிர்கிறார்.

“மியூசிக் குடும்பம். அப்பாவைத் தொடர்ந்து என் தம்பி ஏ.ஆர்.ரஹ்மானும் இசைத்துறைக்கு வந்து ஹிட் கொடுத்துட்டிருந்தார்.

பிரகாஷூக்கு ரெண்டரை வயசு இருக்கும். அப்போ, ஒரு மலையாள விளம்பரப் படத்தில் பேபி ஷாமிலி நடிச்சுப் பாடினாங்க.

அதுக்கு மியூசிக் பண்ணின ரஹ்மான், பிரகாஷை ஜிங்கிள் பாடவெச்சார். ‘எல்லோரையும்விட பிரகாஷ் நல்லா பாடினான்’னு ரஹ்மான் சொன்னதும் சந்தோஷத்தில் கண் கலங்கினேன்.

அப்புறம் ரஹ்மானுக்கு ஜிங்கிள்ஸ் பாடிட்டிருந்தான். அப்போ மாமாவும் மருமகனும் அவ்ளோ குளோஸா இருப்பாங்க.

g2_17443

சிங்கர் ஆகணும் என்கிற என் ஆசை நிறைவேறலை. அதனால், பிரகாஷை பெரிய பாடகனா பார்க்க ஆசைப்பட்டேன். மியூசிக் க்ளாஸூக்குக் கூட்டுப்போவேன்.

ஆனால், சரியாவே கவனிக்க மாட்டான். அதனால், நான் மியூசிக் கத்துக்கிட்டு வீட்டுக்கு வந்து அவனுக்குக் கத்துக்கொடுப்பேன்.

சின்ன வயசுல பயங்கர சேட்டை பண்ணிட்டே இருப்பான். பொம்மை, சாக்லேட், கிஃப்ட்னு ஏதாச்சும் லஞ்சம் கொடுத்துட்டே இருக்கணும். அப்போதான் உட்கார்ந்து மியூசிக் கத்துப்பான்; ஹோம்வொர்க் பண்ணுவான்; சொல்றதைக் கேட்பான்.

அதிகாலை மூணு மணிக்குதான் நாங்க தூங்குவோம். அதனால், காலையில் எட்டு மணிக்கு மேலேதான் எழுந்துப்பேன்.

ஆனால், பிரகாஷ் அஞ்சு மணிக்கே எழுந்து விளையாடிட்டிருப்பான். எதையாச்சும் களைச்சுப்போட்டு வீட்டைக் குப்பையாக்கிடுவான்.

சின்ன வயசுல அடிக்கடி அழுவான். சீரியஸா அழுதுட்டிருக்கிறப்போ, எறும்பு கடந்துபோனாலும் சட்டுனு அழுகையை நிறுத்திட்டு கூர்ந்து கவனிப்பான்.

எறும்பு கண்ணை விட்டு மறைஞ்சதும் மறுபடியும் அழுவான். அதைப் பார்க்கிறப்போ பயங்கர சிரிப்பா இருக்கும்.

பெட் அனிமல்ஸ் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். என் சமையலை ரசிச்சு சாப்பிடுவான்” என்கிற ரெஹானா, மகன் இசையமைப்பாளராக மாறிய தருணத்தை நினைத்துச் சிலாகிக்கிறார்.

“ ‘ஜென்டில்மேன்’ படத்தில், ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ பாடலைப் பாடினான். அப்போ அவனுக்கு மூன்றரை வயசு. அதுதான் பையனின் முதல் சிங்கிங் வாய்ப்பு.

ஒருகட்டத்துல பொறுப்போடு மியூசிக் க்ளாஸ் போக ஆரம்பிச்சுட்டான். ஒருமுறை ஸ்கூல் பிரேயர்ல பியானோ வாசிச்சிருக்கான்.

நிறைய பாராட்டுகள். பொண்ணுங்க அவனை வாழ்த்தியிருக்காங்க. அப்போதிலிருந்து பியானோ க்ளாஸ்ல ஆர்வம் செலுத்தி, கோல்டு மெடல் வாங்கினான்.

நல்லா படிச்சுட்டிருந்தான். ஆனால், எட்டாவதுக்கு அப்புறம் படிப்பில் ஆர்வம் குறைஞ்சுடுச்சு.

டாக்டர், சிங்கர், இன்ஜினீயர் இதில் ஏதாவது ஒரு துறைக்குப் போவான்னுதான் நினைச்சேன்.

பிளஸ் ஒன் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே படிப்பை டிராப் பண்ணிட்டு, மியூசிக்ல மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பிச்சான்.

19 வயசுல ‘வெயில்’ படம் மூலமாக இசையமைப்பாளரானான். இந்தச் சின்ன வயசுல இசையமைப்பாளரா எனப் பலரும் வியந்து பாராட்டினப்போ, தாயாக நான் அடைஞ்ச சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையில்லை.

g_17202சின்ன வயசுல ரஜினிகாந்த் வெறியன். அவர் படத்தின் ஸ்டோரியைச் சொன்னால்தான் சாப்பிடுவான்.

சினிமா ஃபீல்டுக்கு வந்த ஒரே வருஷத்துல, ரஜினி நடிச்ச ‘குசேலன்’ படத்துக்கு இசையமைச்சான்.

நான் ஹேப்பி; அவன் எக்கச்சக்க ஹேப்பி. பையனின் இசையமைப்பில் நான் பிளேபேக் சிங்கரா பாடியிருக்கேன். ஆனாலும், எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் கிடையாது. விடாமுயற்சி இல்லாமல் வெற்றி கிடையாது.

நிறைய உழைச்சான். குத்துப் பாடல்கள் அதிகம் ரசிக்கப்பட்ட நேரத்தில், நிறைய மெலோடி பாடல்களையும் கொடுத்தான். எந்த வேலையையும் சீக்கிரமே முடிச்சுருவான்.

குறுகிய காலகட்டத்திலேயே எல்லா முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் மியூசிக் பண்ணிட்டான்.

50 படங்களைக் கடந்து மகனின் இசைப் பயணம் தொடருது. அவன் இசையமைப்பில், ‘தெய்வத்திருமகள்’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். செலக்டிவா பாடியிருந்தாலும் அவனின் குரல்வளம் எனக்குப் பிடிக்கும்.”

g3_17548

மகனின் நடிப்பு பற்றிக் குறிப்பிடும் ரெஹானா, “பிரகாஷ் சின்ன வயசுலேயே ஒருமுறை தூக்கத்திலிருந்து எழுந்து, பல ரியாக்‌ஷன்ஸ், பல குரல்களில் மாறி மாறிப் பேசி நடிச்சுக் காட்டினான்.

‘அந்நியன்’ படம் பார்க்கும்போதெல்லாம் பிரகாஷின் நினைவு வரும். அப்பவே அவனுக்குள் ஒரு நடிகன் இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன்.

ஒருகட்டத்துல நடிக்க ஆசைப்பட்டு என்னிடம் சொன்னதும் சம்மதிச்சேன். பொழுதுபோக்கு படங்களில் நடிக்கிறதில் சந்தோஷம்.

ஆனால், ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ மாதிரியான படங்களில் நடிக்கிறதில் எனக்கு விருப்பமில்லை. அதைக் கண்டிப்புடன் சொல்லியிருக்கேன்.

பிரகாஷ் நடிச்சதிலேயே ‘நாச்சியார்’ படம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. மனசுவிட்டுப் பாராட்டினேன்.

அவன் இசையமைப்பு ரொம்ப ஸ்பெஷல். அதனால், நடிகனாக எவ்வளவு பெரிய உயரத்துக்குப் போனாலும், இசையமைப்பாளர் பயணத்தை நிறுத்தக்கூடாது.

மியூசிக், நடிப்பு என அவன் வொர்க் எல்லாத்தையும் பார்ப்பேன். பிடிச்சதைப் பாராட்டுவேன்.

அட்வைஸ் கொடுப்பேன். அதேநேரம், அவன் விருப்பத்தில் தலையிடமாட்டேன். நல்ல பொண்ணை (பாடகி சைந்தவி) கல்யாணம் பண்ணியிருக்கான்.

அதிலும் எனக்கு ஹேப்பிதான். ரெண்டு பேரும் பொறுப்புடன் இருக்காங்க. பையனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் டிரஸ் மட்டும்தான் அவனுக்கு கிஃப்டா கொடுப்பேன்.

இந்த வருஷம் அஞ்சு ஷர்ட்ஸ் எடுத்திருக்கேன். ஹேப்பி பர்த்டே அண்டு லவ் யூ டா மை டியர் மகனே” என ஆனந்தம் பொங்கச் சிரிக்கிறார் ரெஹானா.

பிறந்தநாள் வாழ்த்துகள் ஜி.வி.பிரகாஷ்!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.