கோத்தபாயவை களமிறக்கத் தயார் – மஹிந்த |

0
445

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற மக்கள்  ஆதரவு கிடைத்தால் அவரை களமிறக்க நாம் தயார். எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

தேசிய அரசாங்கம் மீதான அதிருப்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது, எனவே மீண்டும் நாட்டுக்குப் பொருத்தமான ஆட்சி ஒன்றினை உருவாக்க வேண்டிய தேவையும் கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளது. மக்களும் அந்த பொறுப்பினை எமக்கு வழங்கியுள்ளனர்.

நாளுக்கு நாள் எம்மை சந்திக்கும் மக்கள் அலை அதிகரித்து வருகின்றது. சந்திக்கும் அனைவரும் இந்த ஆட்சியின் மீதான அதிருப்தியையே வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் மனதில் நாம் இன்றும் நிலைத்து நிற்கின்றோம் என்பது எமக்கு நன்றாக தெரிகின்றது.

மீண்டும் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எமது அணியினர் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் யாரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவது என்பது குறித்து இன்னமும் உறுதியான தீர்மானம் ஒன்று முன்னெடுக்கப்படவில்லை.

நாம் நாட்டில் சகல மக்கள் மத்தியிலும் சென்று மக்களின் விருப்பம் என்ன என்பதை ஆராய்ந்து வருகின்றோம். கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அந்த வேலையினை செய்து வருகின்றனர்.

எனது  சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷ குறித்து இன்று அதிகமாக ஊடகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.

எனினும் அவர் இன்னமும் தனது நிலைப்பாடு என்ன என்பதை கூறவில்லை. பொதுவான இணக்கப்பாடு  அவசியம் என்பதையே அவரும் தெரிவித்து வருகிறார். எனவே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை 2020ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க மக்கள் ஆணை கிடைத்தால் அவரை களமிறக்க நாம் தயார்.

அது குறித்து எம்மால் கலந்தாராய முடியும். அல்லது வேறு ஒரு தலைவர் உள்ளாரா என்பது குறித்தும் எம்மால் ஆராய முடியும். அதற்காக கால அவகாசம் எமக்கு உள்ளது. எனினும் மக்களின் கருத்துக்களை ஆராயும் வேலைகளை இப்போதே நாம் ஆரம்பித்துவிட்டோம்.

ஊடகங்களும் இது குறித்து பொறுப்புடன் செயற்பட வேண்டும். மக்கள் மத்தியில் சென்று மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும்.

இன்று சகல தரப்பினரும் அடக்கப்பட்டு ஜனநாயகம் மீறப்பட்டு வருகின்ற நிலையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

எனக்கும் எனது சகோதரர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் கதைகள் அனைத்துமே பொய்யானதாகும். எமக்கிடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.