சென்னையில் பரிதாபம்; குழந்தை இல்லா ஏக்கத்தில் உயிரை மாய்த்த மனைவி: அதிர்ச்சியில் கணவனும் தற்கொலை

0
482

திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் மனைவி தற்கொலை செய்துகொண்டார். மனைவி  தூக்கில் தொங்கியதைப் பார்த்து மனம் உடைந்த கணவனும் தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை தலைமைச்செயலகம் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் எதிரில் ராஜாஜி சாலையில் அன்னை சத்யா நகர் உள்ளது. இங்கு வசித்தவர் சந்திரன் (30). இவரது மனைவி சுகன்யா (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகச் சென்ற இல்லறத்தில் ஓராண்டு கடந்தும் குழந்தை எதுவும் பிறக்கவில்லை. இதனால் தம்பதிகள் வருத்தம் அடைந்தாலும் மனதை தேற்றிக்கொண்டார்கள்.

ஒரு வருஷம் தானே ஆகிறது விரைவில் குழந்தை பிறக்கும் என்று மனதை தேற்றிக்கொண்டனர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆண்டுகள் உருண்டோடியும் குழந்தை பிறக்கவில்லை.

இதற்காக இருவரும் மருத்துவரைச் சென்று பார்த்து சிகிச்சை செய்தனர். கோயில்களுக்கு வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோயில் கோயிலாகச் சென்று குழந்தை வரம் கேட்டு வேண்டினர். ஆனாலும் குழந்தை பிறப்பது தள்ளியே போனது.

5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் குழந்தை பாக்கியம் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடுமோ என்று சுகன்யா கலங்கினார்.

ஆனாலும் கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பைப் பொழிந்தனர். அக்கம் பக்கத்தவர், உறவினர்கள் சுப காரியங்களில் பொது நிகழ்ச்சிகளில் பார்க்கும்போது இன்னும் குழந்தை பிறக்கவில்லையா என்று கேட்கும்போது மனம் நொந்த சுகன்யா வீட்டில் வந்து அழுவாராம், அவரைச் சந்திரன் தேற்றி வந்துள்ளார். ஆனாலும் குழந்தை இல்லை என்பது இருவருக்குள்ளும் ஒருவித வெறுமையை, மன உளைச்சலைத் தோற்றுவித்துள்ளது.

சுபகாரியங்களில் சிலர் சுகன்யாவை நாசூக்காகத் தவிர்த்துள்ளனர். இதனால் பல சுப காரியங்களில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கி இருந்த சுகன்யா அதிக மனவருத்தத்தில் இருந்துள்ளார். சந்திரன் அவரைத் தேற்றியுள்ளார்.

நேற்று சந்திரன் வேலை விஷயமாக வெளியே சென்றிருந்த நிலையில் சுகன்யா மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வீடு திரும்பிய சந்திரன் மனைவி சுகன்யா தூக்கில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.

மனைவி இல்லாத வாழ்க்கை தனக்கு மட்டும் எதற்கு என்று அவரும் அதே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நெடுநேரம் கதவு திறக்கப்படாமல் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டைத் தட்டியபோது திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தம்பதிகள் தூக்கில் பிணமாகத் தொங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தலைமைச் செயலக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தை இல்லாத விரக்தியில் இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அன்னை சத்யா நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.