ராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்!

0
262

ராஜாவின் பிறந்தநாள்… ராஜாவைப் பற்றிச் சொல்ல அவரது ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். அது உலகறிந்த ராஜாவின் கதையாக இல்லாமல்… அவரவர் அறிந்து கொண்ட ராஜா கதைகளாகவும் இருக்கலாம். நண்பர்கள் பலருக்கும் ராஜா ஆதர்ஷம். ராஜா என்று பேச்செடுத்தாலே போதும்

‘என் இனிய பொன் நிலாவே… பொன் நிலவில் என் கனாவே’

என்று தொடங்கி

‘பொன்மாலைப் பொழுது… இது ஒரு பொன்மாலைப் பொழுது…

வானமகள் நாணுகிறாள், வேறு உடை பூணுகிறாள்,’

‘இளையநிலா பொழிகிறது… இதயம் வரை நனைகிறதே…’

– என்று உருகத் தொடங்கி அப்படியே ராஜாவில் கரைந்து காணாமல் போகிறவர்கள் அனேகம் பேர்.

ராஜாவின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் வரிக்கு வரி அவரிட்ட ஸ்வரங்களை சிலாகித்துப் பேசக்கூடிய நண்பர்கள் பலர் இருக்கிறார்கள்.

ராஜாவை ரசிக்கவும் ஒரு ரசிகத்தனம் வேண்டும். என்னால் ராஜாவை ரசிக்க முடிந்த அளவுக்கு ரஹ்மானை எப்போதும் ரசிக்க முடிந்ததில்லை.

இப்போதென்னவோ பலர் அனிருத் என்கிறார்கள், ஹிப் ஹாப் தமிழா என்கிறார்கள், அரோல் கரோலி என்கிறார்கள் தமன் என்கிறார்கள், ஆனாலும் இசை ரசிகர்களின் ஆழ்மனதின் உள்ளாழம் வரை சென்று தொட்டு உறவாடும் திறன் ராஜாவுக்கு மட்டுமே உண்டென்று நம்புகிறவர்களின் நானும் ஒருத்தி.

அதற்கு உதாரணமாகப்  பாடல்களையே சொல்வதைக் காட்டிலும் ஒரு கதை சொல்லலாமென்று தோன்றுகிறது. இந்தக் கதை சொந்தக் கதை, சொந்தத்தில் உறவினர் ஒருவருக்கு நடந்த கதை.

‘பூங்காற்று புதிதானது… புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்…
பூங்காற்று புதிதானது… புது வாழ்வு சதிராடுது…’ (மூன்றாம் பிறை)

இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் ரவியண்ணாவுக்கு பழைய சுகமான ஞாபகங்களை எல்லாம் கிளறி விட்டார் போலாகி விடும்.

தங்கை, அவளது தோழிகள் என்றெல்லாம் பேதம் பார்க்காமல், எங்களிடம் ஜாலியாக தனது காதல் கதைகளைக் கட்டவிழ்த்து விடத் தொடங்கி விடுவார். நாங்கள் நடுநிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே அவர் கல்லூரி முடித்து குரூப் 2 தேர்வெழுதியதில் மானாமதுரைப் பக்கம் வேலை கிடைத்துச் சென்றார்.

புறநகரின் ஒரு குக்கிராமத்தில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டிலிருந்து தினமும் அலுவலகத்துக்குச் செல்ல சைக்கிள் வைத்திருந்தார்.

அவர் பணிபுரிந்தது ஒரு வெட்டை கிராமமென்பதால் ஆண்களோ, பெண்களோ, வயதானவர்களோ யாராவது வெயிலில் நடந்து சென்றால் இவர் சைக்கிளில் லிஃப்ட் தருவதுண்டு. முக்கியமாக இளம்பெண்களுக்கு என்றால் தாராள மனம் தறிகெட்டு ஓடும். அவர்களில் ஒருத்தி ஸ்டெல்லா.

ரவியண்ணா குடியிருந்த தெருவில் தான் அவள் வீடும் இருந்தது. புறநகரிலிருந்த ஜிப்ஸம் ஃபேக்டரியில் பணிபுரியச் செல்லும்  ஸ்டெல்லா எப்போதாவது இவரது சைக்கிளில் லிஃப்ட் கேட்டுச் செல்வதுண்டு.

அப்படிப் பழக்கமான ஸ்டெல்லாவுக்கு குழந்தை மனசு. மனசு தான் குழந்தையே தவிர அழகில் அவள் அந்தக்கால ராதா.

ஊர்க்காரர்கள் சிலர் அவளை லூசு என்று கூட சொல்வதுண்டு. கிழக்கே போகும் ரயில் ராதிகா மாதிரி அப்படியொரு வெள்ளந்தி மனசு.

அவளை எப்படியோ ஒருதலையாகக் காதலிக்கத் தொடங்கி விட்டார் ரவியண்ணா. அவளோ கிறிஸ்தவப் பெண். இவரோ தெலுங்கு  பையன்.

அவள் சைக்கிளில் லிஃப்ட் கேட்டு வருகிற ஜோரில் அப்போது  சின்ன பாக்கெட் டிரான்சிஸ்டர்  வேறு வாங்கி வைத்துக் கொண்டார்.

கிராமத்திலிருந்து கிளம்பி அவளை ஜிப்ஸம் ஃபேக்டரியில் விட்டு விட்டு, தான் பணிபுரியும் தாசில்தார் ஆஃபீஸுக்குச் செல்லும் வரையிலான அந்த 1 மணி நேரத்திற்கும் மேலான பொழுதை பேரின்பமயமாக்கிக் கொள்ள ரவியண்ணா கண்டுபிடித்த மார்க்கம் ராஜாவின் இசை.

அதிலும் மூன்றாம் பிறை திரைப்படத்தில் பூங்காற்று புதிதானதும், பன்னீர் புஷ்பங்களின் பூந்தளிராடவும், கேட்டுக் கொண்டே சைக்கிள் மிதிக்கும் போது அவரே கமலாகவும், சுரேஷாகவும் தன்னைக் கற்பனை செய்து கொண்டது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் அவர் மட்டுமா அப்போது அப்படிக் கற்பனையில் மிதந்தார்!

காதலில் விழுந்த எல்லா ஆண்களுக்குள்ளும் ராஜாவின் தயவால் ஒரு ரஜினி இருந்தார், ஒரு கமல் இருந்தார், ஒரு மோகன் இருந்தார், சமயத்தில் அந்நியன் அம்பி, ரெமோ, அந்நியன் ஸ்டைலில் ரஜினி, கமல், மோகன், பிரபு, விஜயகாந்த், சத்யராஜ், சிவக்குமார், ராம்கி எல்லோருமே அவ்வப்போது வந்து போவார்கள். பெண்களுக்குள்ளும் ஸ்ரீதேவிகள், அமலாக்கள், ராதாக்கள், அம்பிகாக்கள், நதியாக்கள் அவ்வப்போது வந்து போவார்கள். எல்லாமும் ராஜாவால்.

ஸ்டெல்லாவுடனான ரவியண்ணாவின் காதல் கைகூடவில்லை. அது ஒருதலைக்காதல் என்பதால் மட்டுமல்ல ரவியண்ணாவுக்கு ஸ்டெல்லாவுக்குப் பிறகு அவரது அலுவலகத்திலேயே பக்கத்து சீட்டில் உட்கார்ந்து கொண்டு ராஜாவின் பாடல்களை ரசித்துக் கம்பெனி தர ஒரு பத்மா கிடைத்து விட்டதால்.

இப்போது இருவரும் ஒரே இனம் என்பதால் ரவியண்ணா, துணிந்து காதலைச் சொன்னார். எப்படி என்றால், ராஜாவின் துணையோடு தான். ராஜா தான் அதற்கும் பாட்டு போட்டிருக்கிறாரே…

‘இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது,
அடிக்கண்ணே அழகுப் பெண்ணே…காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை… சொர்க்கம் என் கையிலே’ (சிகப்பு ரோஜாக்கள்)

‘விழிகள் மேடையாம், இமைகள் திரைகளாம், பார்வை நாடகம், அரங்கிலேறுதாம்… பத்மா ஐ லவ் யூ…. பத்மா ஐ லவ் யூ’  (கிளிஞ்சல்கள்)
– என்றெல்லாம் பத்மாவைச் சுற்றி சுற்றி வந்து காதலைச் சொல்லாமல் சொல்லி கரெக்ட் செய்து, ஒரு வருடம் ராஜாவின் பாடல்களோடு திகட்டத் திகட்டக் காதலித்துப் பிறகு விஜயகாந்த் நடித்த கூலிக்காரன் திரைப்படத்தில் வரும்;

‘குத்துவிளக்காக, குலமகளாக நீ வந்த நேரம், நான் பாடும் ராகம், என் வானிலே நீ வெண்ணிலா, நட்சத்திரம் உன் கண்ணிலா, ஒளி சிந்த வந்த தேனே!’  என்றெல்லாம் பாடி திருமணம் செய்து கொண்டு
நிறைவாக வாழ்ந்ததில் மனைவி சூல் கொண்டதை அறிந்ததும் பூந்தோட்டக் காவல்காரன் விஜயகாந்தாக ஓடோடி வந்து

‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா…செந்நிற மேனில் என் மனம் பித்தாச்சு, சேலாடும் கண்ணில் பாலூறும் கண்கள்’ என்று பாடிக் கொண்டே பிள்ளை பெற்றுக் கொண்டார்.

அதோடு தீர்ந்ததா?! அந்தப் பிள்ளைகள் வளரும் போது பெருமிதப்படவும் அவருக்கு ராஜா தான் துணை நின்றார்.

‘பிள்ளை நிலா… இரண்டும் வெள்ளை நிலா… லல்லல்லா
அலை போலவே விளையாடுமே… சுகம் நூறாகுமே மண் மேலே துள்ளும் மான் போலே…
ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தா’  (நீங்கள் கேட்டவை)

– என்று பிள்ளைகளை முன்னே நடக்கவிட்டு பின்னிருந்து பாடி பெருமைப் பட்டுக் கொள்வார்.

அவ்வப்போது மனைவியிடம் ஊடலென்றால்… அப்போதும் ராஜா தான் கமல் ரூபத்தில் ஓடோடி வருவார்… ரவியண்ணன் தன்னை கமலுக்குள் ஆவாகனம் செய்து;

‘பொன்மானே கோபம் ஏனோ?’ காதல்பால்குடம் கள்ளாய் போனது, ரோஜா ஏனோ முள்ளாய் போனது’ என மனைவியின் தாவாங்கட்டையைப் பிடித்துக் கிள்ளி, அள்ளி எப்படியோ சமாதானப் படுத்துவார்.

ரவியண்ணன் ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கும் நாட்களில் அவர் வீட்டுப்பக்கம் போனாலே…

‘ராஜராஜ சோழன் நான்
எனை ஆளும் காதல் தேசம் நீ தான்
பூவே காதல் தீவே
மண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே…’ (ரெட்டை வால் குருவி)

பாடலும்…

‘ஓ வசந்த ராஜா, தேன் சுமந்த ரோஜா… உன் தேகம் என் தேசம்… எந்நாளும் சந்தோசம் என் தாகங்கள் தீர்த்திட நீ பிறந்தாயே’  (நீங்கள் கேட்டவை)

‘கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனச… தொட்டு வச்சுக்கோ உந்தன் சொந்த மனச…  இந்த நேரம் பொன்னான நேரம்’  (என் ஜீவன் பாடுது)

எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று அது ஏதோ ஒன்று உன்னிடம் இருக்கிறது, அதை அறியாமல் விடமாட்டேன்’  (கேப்டன் மகள்)

டைப்பிலான பாடல்கள் தவறாது ஒலிக்கும்.

இந்த மாதிரியாக சிச்சுவேஷனல் பாடல்களாக இல்லாமல்.. எப்போது அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாலும் சுகமாக ஏதோ ஒரு ராஜா பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறதென்றால் ரவியண்ணன் வீட்டிலிருக்கிறார் என்று அர்த்தம்.

அவரில்லாத நேரங்களில் பத்மா அண்ணி பாடல்கள் கேட்பதில்லை. எதற்கு அப்படி ஒரு பழக்கம் என்றால், அண்ணனோடு பாட்டுக் கேட்பதில் இருக்கும் லயிப்பும், ரசனையும் தனியாக தான் மட்டும் கேட்கும் போது இல்லையென்றார் பத்மா அண்ணி.

ராஜா எப்போதும் ராஜா தானே, அதெப்படி கணவரோடு சேர்ந்து கேட்டால் தான் ரசிக்கும் இல்லாவிட்டால் ரசிக்காது என்கிறீர்களே, இதெல்லாம் டூ மச் அண்ணி என்றால், உனக்கும் திருமணமான பிறகே அது புரியும் என்றார். நிஜம் தான்.

ராஜாவின் பாடல்கள் சுகமானவை… ஒத்த ரசனையுடையவர்கள் சேர்ந்து கேட்டு ரசிக்கும் போது அந்த சுகம் மேலும் பன்மடங்காகிறது.

இப்போது ரவியண்ணன் இல்லை. கேன்சர் அவரை இல்லாமலாக்கி விட்டது. ஆனாலும் பத்மா அண்ணி வீட்டில் இப்போதும் பாடல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன.

பிள்ளைகள் இருவரும் கல்லூரி நிமித்தம் ஹாஸ்டல்களில் தஞ்சமடைந்து விட வீட்டில் பத்மா அண்ணி மட்டும் தான்.

துணைக்கு ஒரு வேலைக்கார அம்மா பகலில் வந்து போவார். பத்மா அண்ணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் இன்னும் இரண்டு வருட சர்வீஸ் இருக்கிறது.

அலுவலகம் சென்ற நேரம் போக மீதி நேரமெல்லாம் சமையற்கட்டில் இருந்தாலும் சரி, மெஷினில் துணி துவைத்துக் கொண்டிருந்தாலும் சரி, பொழுது போக்காக எம்பிராய்டரி போட்டுக் கொண்டிருந்தாலும் சரி, காதில் ஹெட் ஃபோனில் ராஜா இழைந்து கொண்டு தான் இருக்கிறார்.

எப்போதாவது பார்க்கையில் தனியா எப்படி அண்ணி இருக்கீங்க?1 ஊரில் இருந்து அம்மாவையோ, அத்தையையோ துணைக்கு கூப்பிட்டுக்கலாமே என்றால்,  ‘அவங்க இங்க வந்தாலும் தங்க மாட்டேங்கறாங்க, அப்புறம் கொண்டு விட, கூட்டிட்டு வரன்னு எனக்கு ரெட்டை வேலையாயிடுது.

அட எனக்கே காடு வா…வாங்கற வயசுல என்னைக் காட்டிலும் வயசான அவங்களை எதுக்கு தொந்திரவு செய்யனும், இன்னும் ரெண்டு வருஷம் தானே, அப்புறம் ஊரோட போயிடலாம்னு இருக்கேன்.

அதுவரைக்கும் ராஜாவைக் கேட்டுக்கிட்டே காலம் தள்ள வேண்டியது தான். உங்க ரவியண்ணனின் ராஜா இருக்கும் போது எனக்கெதற்கு வேறு துணை?! என்று சிரிக்கிறார்.

ரவியண்ணன் இல்லாமல் ராஜாவின் பாடல்களைக் கேட்பதில் ஆர்வமற்று இருந்த பத்மா அண்ணியே தான் இப்போது இதையும் சொல்கிறார்.

காலங்கள் மாறுகின்றன. காட்சிகள் மாறுகின்றன என்பதற்கேற்ப ராஜா பாடல்களுக்கான தேவையும் மாறுகிறது. பத்மா அண்ணிக்கு இப்போது ராஜா பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தால் ரவியண்ணன் உடனிருப்பதைப் போன்ற பிரமை.

ஆம்…. பல நேரங்களில் அதற்காகவும் தான் அவர் ராஜாவைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ராஜாவை ஏன் எப்போதும் கொண்டாடத் தோன்றுகிறது எனில்… இதற்காகவும் தான்.

 

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.