சிவாஜிலிங்கத்திடமே கேட்டு விடலாமா? – கருணாகரன்(கட்டுரை)

0
660

“தேசியக் கொடியை அரைக்கம்பத்திலும் பறக்க விடுவோம். தலைகீழாகவும் ஏற்றுவோம். அதை யாரும் கேட்க முடியாது” என்று சவால் விட்டிருக்கிறார் வடமாகாணசபை உறுப்பினர் எsivahiம்.கே. சிவாஜிலிங்கம்.

“மே – 18, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு மாகாணசபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படியே, அரைக்கம்பத்தில் மே 18 அன்று தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

ஏனைய இடங்களிலும் அன்று அரைக்கம்பத்தில் தேசியக் கொடியைப் பறக்க விடுமாறு மாகாணசபையினால் கோரப்பட்டிருந்தது.

இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கூட்டுத்தீர்மானம். இதில் மத்திய அரசோ, அமைச்சர்களோ தலையிட முடியாது. அவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கட்டும். அதைப்பற்றியெல்லாம் நாங்கள் அக்கறைப்படவில்லை” என்று சொல்கிறார் “வீர” சிவாஜி.

ஆனால், “இது இலங்கையின் அரசியல் யாப்பு விதிமுறைக்கும் நடைமுறைக்கும் முரணானது. ஆகையால் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார் சட்டம், ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்துகம பண்டார.

ரஞ்சித் மத்துகம பண்டாரவின் அறிவிப்புத் தொடர்பாக ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்துக் கேட்டபோதே சிவாஜிலிங்கம் இவ்வாறு சவால் விடுத்திருக்கிறார். (அரசியலமைப்பின் ஆறாவது சட்டமூலத்துக்கு அமையத்தானே வீர சிவாஜியும் சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறார்கள்? என்று கேட்பவர்களுடைய கேள்விக்கு இப்பொழுது பதில் தரமுடியாது).

எந்த நெருக்கடியிலும் அதிரடியான வேலைகளைச் செய்வதில் வல்லவர் சிவாஜிலிங்கம். இதில் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. சிலவேளை தன்னுடைய ஏறுக்குமாறான வேலைகளால் சிவாஜிலிங்கமே சிக்கல் பட்டதுண்டு. சில சந்தர்ப்பங்களில் தமிழ் மக்களுக்கே தேவையில்லாப் பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.

ஆனாலும் சிவாஜிலிங்கத்துக்கு வரலாற்றுச் சிறப்பான பக்கங்களுண்டு.

“போரிலே இறந்தோருக்கான நினைவு கூரலைச் செய்ய முடியாது” என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அரசாங்கம் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தபோது, “நீ செய்யிறதைச் செய், நான் நினைவு கூரலைச் செய்தே தீருவேன்” என்று தடலடியாக மாகாணசபையின் வாசலில் நினைவுச் சுடரை ஏற்றிக் கலக்கினார் சிவாஜிலிங்கம். அப்பொழுது அங்கே வந்த பொலிஸ் அதிகாரிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறினார்கள்.

அதற்கு முன்பு, மாகாணசபை உறுப்பினராகச் சத்தியப்பிரமாணம் எடுப்பதை பொதுமக்கள் பெருவாரியாகக் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலில் வைத்துச் செய்தார்.

“இறுதி யுத்தத்தின்போது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பு நடவடிக்கையே.

ஆகவே இன அழிப்புக்கு எதிரான தீர்மானத்தை மாகாணசபை நிறைவேற்ற வேண்டும்” என கோரிய சிவாஜிலிங்கம், அதற்குரிய பதிலை மாகாணசபை வழங்கத் தாமதித்த போது, அங்கிருந்த செங்கோலைத் தூக்கி வீசினார். உடைந்தது செங்கோல். நீதி பிழைத்தால் செங்கோல் உடையும் என்று சர்வசாதாரணமாகச் சொல்லி விட்டுச் சபையை விட்டுக் கிளம்பிப்போனார்.

பிறகு “இந்தச் சம்பவத்துக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். உடைந்த செங்கோலைச் செப்பனிட்டு வழங்க வேண்டும்” என்று சபை முதல்வர் சி.வி,கே. சிவஞானம் கட்டளையிட்டார். “அப்படிச் செய்ய முடியாது” என்று “சிவாஜி” மறுத்து விட்டார்.

ஒரு கட்டத்தில் “செங்கோலைச் செம்மையிட்டு வழங்கவில்லையென்றால் சபையின் வரலாற்றில் இது தவறான முன்னுதாரணமாகி விடும்” எனச் சிவஞானம் கெஞ்சிப்பார்த்தார். சிவாஜிலிங்கம் மசியவேயில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன், முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினர் சுவீகரிப்பதைக் கண்டித்து நடத்திய போராட்டத்தின்போது, “சனங்களின் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை?” என்று அங்கிருந்த பொருட்களின் மீதெல்லாம் தாக்குதல் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது.

இதனால் “அரச உடமைகளைச் சேதப்படுத்தினார் சிவாஜிலிங்கம்” என்று குற்றம் சாட்டப்பட்டுப் பொலிஸால் கைது செய்யப்பட்டார். பிறகு, அவர் விடுவிக்கப்பட்டாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான போராட்டமாகட்டும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டமாக இருக்கட்டும், நில மீட்புக்கான போராட்டமாகட்டும் அங்கெல்லாம் சிவாஜிங்கம் ஒரு தளபதியைப்போலவே செயற்படுவார்.

இது ஒரு வகை என்றால், அவர் எடுக்கிற அரசியல் தீர்மானங்களும் அப்படியானவையே.

யாருமே எதிர்பார்த்திராத வகையில் 2010 இல் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டார் சிவாஜி.

இதைப்போலக் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். இதில் அவர் வெற்றி தோல்வி என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. தன்னுடைய நடவடிக்கைகள் சொல்லுகின்ற சேதிகளே முக்கியமானது என்றார்.

thengaii-680x365“இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமெரிக்க ஆதரவு கிடைக்க வேண்டும். அதற்கு ஹிலாரி கிளிங்டன் வெற்றியீட்ட வேண்டும்” என்று கூறி, நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்கு முன்பாக ஆயிரம் தேங்காய்களை உடைத்து அமெரிக்காவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

இதையிட்டுக் கடுமையான விமர்சனங்களும் கேலிப்பேச்சுகளும் எழுந்தன. அந்த நாட்களில் இது பெரியதொரு நகைச்சுவை என்றெல்லாம் சொல்லிச் சிரித்தார்கள். எதைப்பற்றியும் கவலைப்படவில்லை சிவாஜிலிங்கம்.

யுத்தம் முடிந்த பிறகு, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோருக்குக் கிட்ட நெருங்குவதற்குப் பலரும் பின்னின்றனர். அந்த வேளையில், அவர்களைத் தன்னுடைய பொறுப்பில் ஏற்றார் சிவாஜிலிங்கம். பிரபாகரனின் தாயாருடைய இறுதி நிகழ்வை அவரே முன்னின்று நடத்தினார்.

மட்டுமல்ல, ஒவ்வொரு ஆண்டும் ஜெனீவாவுக்குச் சென்று அங்கே இலங்கையின் இன அழிப்புக்கு எதிரான பரப்புரைகளைச் செய்வார்.

இந்தப் பயணங்களுக்கு அவருடைய கட்சியான ரெலோவோ, அவர் அங்கம் வகிக்கின்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்போ ஏற்பாடுகளைச் செய்வதுமில்லை.

உதவிகளைச் செய்வதுமில்லை. இதனால் ஜெனீவாப் பயணத்துக்கான முழுச்செலவும் சிவாஜியின் தலையில்தான். தொடக்க ஆண்டுகளில் சிலர் அதைப் பொறுப்பேற்றனர். பிறகு பிறகு அவர்கள் பின்வாங்கி விட்டனர்.

இதனால் இன்று சிவாஜி பெருங்கடனாளியாக இருக்கிறார் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும் “காய்” களைத்துப் போவதுமில்லை. சலித்துப் போவதுமில்லை.

“தான் கடன் பட்டது மட்டமல்ல, சொந்த பந்தங்கள், ஊரில் உள்ளவர்கள் என்று பலரிடமும் கடன் பட்டும், நகைகளை இரவல் வாங்கியும் அடகு வைத்துத் திருவிழாச் செய்த எங்கள் சின்னமாமாவின் நினைவே எனக்குச் சிவாஜிங்கத்தைப் பார்க்கும்போது வரும். என்னதானிருந்தாலும் இவற்றில் யாரோடும் அவர் கூடித்தீர்மானங்களை எடுப்பதில்லை. எல்லாமே சுய முடிவுகள்.

mano-sivajiஇந்தப் பத்தியை எழுதிக் கொண்டிருக்கும்போது யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் அமைச்சர் மனோ கணேசனுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அமைச்சர் மனோகணேசன் iகிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கலந்து கொண்ட போது சிவாஜிலிங்கம் ஒரு அரசியல் கோமாளி என்று என்னையும் என்னுடைய நடவடிக்கைகளையும் விமர்சித்திருக்கிறார்.

“போர்க்குற்ற விசாரணைகளைச் சர்வதேசத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை. வெள்ளைக்காரர்கள் என்ன வெட்டி வீழ்த்தப் போகிறார்களா?” என்று அவர் கேட்ட போது, அதற்கு நான், பாரதியாரின் கவிதைகளை நான் சுட்டிக்காட்டி “என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்” என்று தணியும் இந்த அடிமையின் மோகம்” என்று பாரதியாரின் கவிதைகளைச் சுட்டிக் காட்டி பதிலளித்திருந்தேன். அத்துடன் இந்த அடிமைப்புத்தியை மனோ கணேசன் கைவிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தேன்.

இப்பொழுது சொல்கிறேன், உங்களுடைய நடவடிக்கைகள் தொடர்பில் பேசுவது அரசியல் நாகரீகமற்றது. ஆனால், தொடர்ந்ததும் நீங்கள் (மனோ கணேசன்) இவ்வாறு செயற்படுவீர்களானால் அரசியல் நாகரீகம் என்ற விடயத்துக்குமப்பால் ஒவ்வொரு விடயங்களுடனும் நான் முட்டி மோதுவேன்.

இதனால் ஏற்படும் எந்த விளைவுக்கும், எத்தகைய கொலைவெறித் தாக்குதலையும் சந்திக்க நான் தயாராகவேயிருக்கின்றேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இப்படிப் பல அதிரடியான நடவடிக்கைகளின் நாயகனாக இருக்கிறார் சிவாஜிலிங்கம். அவரை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.

ரெலோவின் நீண்டகால உறுப்பினராக இருந்தாலும் ரெலோ அவருக்கு கட்டுப்பட்டது கிடையாது. அவரும் ரெலோவுக்குக் கட்டுப்பட்டிருப்பதில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலும் மாகாணசபையிலும் கூட அப்படித்தான். யாரோடும் எதனோடும் ஒத்தோடும் ஆளல்ல சிவாஜி. “என் வழி தனி வழி” என்ற மாதிரி எதையாவது செய்வார். குறுக்கு மறுக்காகச் சிந்திப்பார். இதுவே அவருடைய அடையாளமாக விட்டது.

சிவாஜிலிங்கத்தின் சில நடவடிக்கைகள் சில சந்தர்ப்பங்களில் கோமாளித்தனத்தின் உச்சமாக இருப்பதுண்டு. எரிச்சலூட்டும். சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளாக இருக்கும். அதேவேளை சில நடவடிக்கைகள் ஆச்சரியமூட்டுமளவுக்கு முக்கியமானவை. அவற்றை எளிதிலே யாராலும் செய்ய முடியாது. ஏன் சிந்திக்கவே இயலாது. அதனால் அவரே அவற்றுக்கு முன்னோடியாகவும் தொடக்கமாகவும் இருப்பதுண்டு.

siva-1எளிய உதாரணம், நினைவு கூரல்களுக்கான வழியைத்திறந்ததில் பெரும் பங்களிப்பைச் செய்தது சிவாஜிலிங்கமே. முள்ளிவாய்க்கால் நினைவு கூரலின் தந்தை சிவாஜிலிங்கமே என்கிறார் ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர் ஒருவர். இப்பொழுது தேசியக் கொடி விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார் சிவாஜி.

இது எப்படி முடியும்? எங்கே செல்லும்? என்று யாருக்குமே தெரியாது.sivajilingam5

தேசியக் கொடி, தேசிய கீதம் தொடர்பான சர்ச்சைகள் இலங்கைக்குப் புதியவை அல்ல. அடிக்கடி நடப்பதுண்டு. “தேசிய கீதத்தை தமிழில் பாட முடியாது” என்று மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஒரு கொந்தளிப்பான நிலை உருவாகியது.

“இல்லை தமிழில்தான் பாடுவோம்” என மறுத்துரைத்தனர் தமிழர்கள். இவ்வாறு பெரும் கொந்தளிப்பாக எழுந்த விவகாரம், கடந்த ஆண்டுகளில் பெரும் சூடான சங்கதியாக இருந்தது.

“இதற்கேன் தேவையில்லாத சண்டையும் சச்சரவும்? யாரையா கேட்டார்கள், நாங்கள் அந்தத் தேசிய கீதத்தைப் பாடப்போகிறோம் எண்டு. பேசாமல் அதைப் பாடாமல் விடுவோம்” என்றார் சிவாஜிலிங்கம். அந்த விவகாரம் அப்படியே அடங்கியது.

ஆனாலும் இந்த விவகாரம் ஒரு போதுமே முடிவதில்லை. 1970 களில் திருகோணமலையில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திருமலை நடராஜன், தேசியக் கொடியை எரித்த புலிகளின் மூத்த உறுப்பினர் சீலன் (சார்ள்ஸ் அன்ரனி) தொடக்கம் இன்று வரையில் இந்தப் பிரச்சினை அவ்வப்போது மூண்டெரிந்துகொண்டேயுள்ளது.

எந்தச் சிறு பொறியையும் பெருந்தீயாக மூட்டுவதற்கு தமிழ், சிங்கள, முஸ்லிம் தரப்புகளிடையே தீவிர சக்திகள் காத்திருக்கின்றன. எங்கே ஒரு சிறிய சான்ஸ் (பொறி) கிடைக்கும் என அவை ஆலாய்ப்பறந்து கொண்டிருக்கும்.

இப்பொழுது தேசியக் கொடியை வடக்கு மாகாணசபை அரைக்கம்பத்தில் பறக்க வைத்த சங்கதி அவற்றுக்குத் தீனியாகக் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே சிங்களத் தரப்பிலுள்ள கடும்போக்குவாதச் சக்தியொன்று வடமாகாணக் கல்வி அமைச்சர் பாடசாலை ஒன்றில் தேசியக் கொடி ஏற்றிய போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக கந்தையா சர்வேஸ்வரனுக்கு எதிராக கொழும்பு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அடுத்த வழக்கோ முறைப்பாடோ சிவாஜிலிங்கத்துக்கு எதிராகவும் வடக்கு மாகாணசபைக்கு எதிராகவும் வரக் கூடும்.

ஆனால், எதற்கும் அஞ்சமாட்டார் “நம்முடைய சிங்கம்”. “நாமார்க்கும் குடியல்லோம், நமனையும் அஞ்சோம்” என்றபடி சிரித்துக் கொண்டு, அடுத்த குண்டை எறிவார் “வீர” சிவாஜி.

இதையெல்லாம் அவர் வேடிக்கையாகச் செய்கிறாரா? அல்லது அரசியல் பிரக்ஞையோடுதான் செய்கிறாரா? என்று உண்மையாகவே தெரியவில்லை. அரசியல் பிரக்ஞையோடு செய்வதாக இருந்தால், அதற்கான பொறிமுறைகளை, தொடர் செயற்பாட்டை, ஆதரவு அலையை எல்லாம் உருவாக்க வேண்டுமே. அப்படி எதுவுமே நடக்கவில்லை. இதனால் சிவாஜியின் நடவடிக்கைகள் எல்லாமே தனிநபர் விவகாரமாகச் சுருங்கி விடுகின்றன. சில செயல்கள் மட்டும் அடுத்த கட்டத்துக்குப் பரிணமிக்கின்றன. அதில் சிவாஜியின் அடையாளம் பின்னர் காணாமல் போய் விடுவதுண்டு. உதாரணங்களில் ஒன்று, இன அழிப்புக்கு எதிரான தீர்மானம். இரண்டாவது, நினைவு கூரல்.

இரண்டுமே சிவாஜியின் கைகளில் இருந்து வேறு கைகளுக்கு மாறியது மட்டுமல்ல, அதன் அரசியல் பெறுபேற்றை விக்கினேஸ்வரனே தட்டிச் சென்றார். sivajilingam2

இதைப்பற்றி தனியாக விரிவாக ஆராய வேண்டும். இங்கே நாம் வட மாகாணசபை தேசியக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்ட விவகாரத்தை மட்டும் இப்போது பார்க்கலாம்.

தேசியக் கொடியை வட மாகாணசபை அரைக்கம்பத்தில் பறக்க விட்டதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் நிச்சயமாக அது அரசியல் விவகாரமாக மாறும். வெறுமனே சட்டப்பிரச்சினைக்குள் அதை மட்டுப்படுத்தி விட முடியாது.

அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் அதனுடைய ஆதரவைப் பெற்றிருக்கும் அரசாங்கத்துக்கும் நெருக்கடியைக் கொடுக்கும். இதற்கான நடவடிக்கையை எடுத்தால், அது தமிழ்த்தேசியக கூட்டமைப்புக்குள் ஒரு கொந்தளிப்பை உண்டாக்கும்.

பல நெருக்கடிகள், உட் குமைச்சல்களுக்குள்ளாகியிருக்கும் கூட்டமைப்பு இந்தப் பிரச்சினையினால் கொந்தளிக்கத் தொடங்கும். அது அரசாங்கத்துக்கே நெருக்கடியைக் கொடுக்கும் அளவுக்குத் தீவிரமடையலாம்.

ஆகவே ரஞ்சித் மத்துக பண்டாரவின் அறிவிப்பு நடவடிக்கையாகத் தீவிரமடையும் என்று சொல்வதற்கில்லை.

அப்படி சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், இந்தத் தேசியக் கொடி விவகாரத்தையும் விடப் பாரதூரமான “இன அழிப்புக்கு எதிரான தீர்மானத்தை” வட மாகாணசபை மேற்கொண்டபோது அரசாங்கம் அதற்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.

“இன அழிப்பு நடக்கவில்லை. நடந்தது மனிதாபிமான யுத்தம். சனங்களை மீட்கும் நடவடிக்கை. பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயல்” என்றெல்லாம் ஐ.நா.வில் சர்வதேச சமூகத்திற்கு முன்னே ஒரு படம் போட்டுக் காட்டி மறுத்துரைக்கிறது அரசாங்கம்.

அதேநேரம் “நடந்தது இன அழிப்புத்தான்” என்று வடமாகாணசபை தீர்மானம் நிறைவேற்றுகிறது.

அப்படியென்றால் இரண்டு எதிரெதிர் அரசுகள் ஒரு விடயத்தில் எதிரும் புதிருமாக நினறு மோதிக் கொள்கின்றன என்றே அர்த்தமாகும். இப்படித்தான் வடமாகாணசபையின் அனைத்துத் தீர்மானங்களும் நடவடிக்கைகளும் உள்ளன.

இதைப்பற்றி மைய அரசோ அரச தலைவர்களோ எதவும் செய்ய முடியாத நிலையிலேயே உள்ளனர். ஏறக்குறைய வட மாகாணசபை பெரும்பாலான சந்தர்ப்பங்களிலும் வேறுபட்டதாக – சுயாதீனத்தன்மை உடையதாக – முரண் நிலைப்பட்டதாகவே இயங்கி வருகிறது.

இது சரியா தவறா என்பது வேறு விடயம். இதுதான் யதார்த்தம். இது ஒரு வகையில் அரசியலமைப்புச் சட்டம் 13 ஐக் கடந்த செயற்பாடே. தற்துணிந்த செயல்.

அப்படியென்றால், புதிய அரசியலமைப்புத்திருத்தத்தில் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும்

சிவாஜிலிங்கத்திடமே கேட்டு விடலாமா?

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.