உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்

0
435

8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக இந்தியா உள்ளதாக ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையின்படி அமெரிக்காவின் மொத்த சொத்து மதிப்பு 62,58,400 கோடி டாலராகும். இதற்கு அடுத்த இடங்களில் சீனா (24,80,300 கோடி டாலர்), ஜப்பான் (19,52,200 கோடி டாலர்) போன்றவை உள்ளன.

ஒரு நாட்டிலுள்ள தனிநபர்கள் வைத்திருக்கும் சொத்துகள், மொத்த சொத்து மதிப்பை கணக்கிட எடுத்துக்கொள்ளப்பட்டன.

நிலம், பணம், தொழில் அமைப்புகள், பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை சொத்துகளாக கருதப்பட்டு கடன் தொகை அதிலிருந்து கழிக்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அரசாங்க உதவிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை.

பிரிட்டன் (9,91,900 கோடி டாலர்), ஜெர்மனி (9,66,000 கோடி டாலர்), கனடா (6,39,300 கோடி டாலர்), பிரான்ஸ் (6,64,900 கோடி டாலர்), ஆஸ்திரேலியா (6,14,200 கோடி டாலர்), இத்தாலி (4,27,600 கோடி டாலர்) போன்ற நாடுகள் முதல் பத்து இடங்களில் உள்ள பிற நாடுகளாகும்.

அதிகபட்ச தொழில்முனைவோர், சிறந்த கல்வி முறை, உறுதியான மென்பொருள் துறை, பிபிஓ சேவைகள், ரியல் எஸ்டேட் துறை, மருத்துவம் மற்றும் ஊடகத் துறை போன்றவை இந்தியா இந்த இடத்தை அடைய உதவியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தத் துறைகளின் மூலம் இந்தியாவின் சொத்து மதிப்பு மேலும் 200 சதவீதம் உயரும் எனவும் ஏஎஃப்ஆர் ஆசியா அறிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

2027-ம் ஆண்டில் சீனாவின் சொத்து மதிப்பு 69,44,900 கோடி டாலராக இருக்கும். அப்பொழுது அமெரிக்காவின் சொத்து மதிப்பு 75,10,100 கோடி டாலர் என்ற நிலையில் இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவிடம், கனடாவை விட அதிக சொத்து இருக்கும்.

2027-ம் ஆண்டில் ஜெர்மனி மற்றும் பிரிட்டனை விட அதிக சொத்து மதிப்போடு இந்தியா 4-வது இடத்தில் இருக்கும்.

அடுத்த பத்தாண்டுகளில் உலகின் மொத்த சொத்து மதிப்பு 50 சதவீதம் அதிகரிக்கும். இலங்கை, இந்தியா, வியட்நாம், சீனா மற்றும் மொரீஷியஸ் போன்றவற்றின் சொத்து மதிப்பு வேகமாக அதிகரிக்கும்.

உலகில் 5,84,000 கோடீஸ்வரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சராசரியாக 1 கோடி டாலர் உள்ளது.

உலகில் 2,252 பெரும் பணக்காரர்கள் உள்ளார்கள். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சராசரியாக 100 கோடி டாலர் உள்ளது என ஏஎஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.