காணாமல் போனோர் விடயம் இழுத்தடிக்கப்படுமாக இருந்தால்; சர்வதேசத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம்

0
168

இதனூடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தலாம் என்கிறார் ஜஸ்மின் சூக்கா

இலங்கை அரசாங்கமானது காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ச்சியாக தட்டிக் கழிப்புகளை செய்யுமாக இருந்தால் அல்லது அதற்கான பொறுப்புக்கூறலை தவிர்க்குமாக இருந்தால் இலங்கைக்கு

எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்யமுடியும். அவ்வாறு வழக்கு தாக்கல் செய்து காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்புக்கூலை உறுதிப்படுத்த முடியும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனது அலுவலகத்தில் மே 18 காணாமற்போனவர்களின் உறவினர்களுடன் ஸ்கைப் மூலம் ஜஸ்மின் சூக்கா மேற்கொண்ட சந்திப்பை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

ஜஸ்மின் சூக்கா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீமூனால் அமைக்கப்பட்ட இலங்கை தொடர்பான விவகாரத்திற்கு பொறுப்பான நிபுணர் குழுவின் உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார்.

இந்நிலையில் ஜஸ்மின் சூக்கா இதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர்
அலுவலகத்தின் ஊடாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் கண்டறியப்பட வேண்டும்.

2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி ஒரே நாளில் இராணுவத்திடம் சரணடைந்தும் மற்றும் வேறு வழிகளிலும் காணாமல் போனவர்களின் 280 பேரின் பெயர்களும் அவர்களது புகைப்படங்களும் அவர்கள் தொடர்பான விவரங்களும் (ITJP) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் காணாமல் போனோர் அலுவலகமானது தனது விசாரணைகளை ஆரம்பிக்கும் போது இந்த 280 பேரில் இருந்து தனது விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும்.

இது தொடர்பாக காணாமல் போனோர் அலுவலத்தின் தலைவருக்கு நாம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளோம்.

இதேபோன்று குறித்த மே 18 அன்று இராணுத்திடம் சரணடைந்தவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாகவும் இராணுவம் பதிலளிக்க வேண்டும்.

குறிப்பாக அக் காலப்பகுதியில் கட்டளையிடும் பிரிவில் இருந்த 58 ஆவது படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டியதுடன் காணாமற் போனோர் அலுவலகமானது இவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு உண்மைகளை கண்டறிய வேண்டும்.

காணாமற்போனோருடைய உறவினர்கள் உள்நாடுகளில் மாத்திரமன்றி வெ ளிநாடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இவர்களது விடயங்களையும் பதிவு செய்வதற்கான பொது நிலையான தளம் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

காணாமற்போனார் தொடர்பான விடயத்தில் சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களது பாதுகாப்பு தொடர்பிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

குறிப்பாக காணாமற்போனோர் தொடர்பில் அவர்களது உறவினர்களே சாட்சியாக உள்ளனர். இவர்கள் காணாமற்போன தமது உறவுகள் தொடர்பாக சாட்சியமளிப்பதற்கு அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகம் அமைய வேண்டும்.

அவ்வாறு இருந்தாலேயே அவர்கள் அச்சம் இன்றி சாட்சியளிக்க முடியும். இது விடயத்திலும் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

கேள்வி: யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் தற்போதும்கூட இலங்கை அரசாங்கமானது தொடர்ச்சியாக அவ்வாறனதொரு காணமல் போனவர்கள் இல்லை என மறுத்துவரும் சூழலில் எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் உறுமொழி வழங்குவீர்கள்?

பதில்: காணாமற்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மறுப்புத் தெரிவிக்கின்றமையானது தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. ஆனால் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நிறுவனங்களின் ஊடாக மக்கள் காணாமல் போயுள்ளார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தொடர்ச்சியாக அரசாங்கம் இதனை மறுப்பதற்கான சந்தர்ப்பங்கள் கிடையாது. அவ்வாறு மறுத்தாலும் தற்போது அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் அலுவலகமானது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஏற்கனவே நிலுவையில் உள்ள ஆட்கொணர்வு மனுக்களை கவனத்தில் எடுத்தும் அதேபோன்று ஏற்கனவே அமைக்கப்பட்ட காணாமற் போனோர் தொடர்பான நிறுவனங்களின் பாதிக்கப்பட்டவர்களது சாட்சியங்களையும் விசாரணை செய்தும் நடவடிக்கை எடுக்கலாம்.

அதேபோன்று மனித உரிமை ஆணைக்குழுக்களில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை கவனத்தில் எடுத்தும் காணாமற்போனார் தொடர்பாக உண்மையை கண்டறிய வேண்டும்.

எனினும் மேற்படி விடயங்களில் இருந்து காணாமற் போனோர் அலுவலகமானது தவறுமாக இருந்தால் இலங்கைக்கு எதிராக சர்வதேசத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து அதில் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையை முன்னிறுத்தி அதற்கான தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுப்பதன் ஊடாக காணாமல் போனோர் தொடர்பான அரசாங்கத்தின் பொறுப்புக்கூலை உறுதிப்டுத்த முடியும்

கேள்வி” நீங்கள் பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் மே 18 ஆம் திகதியன்று காணாமற்போனோர் தொடர்பாக முழுமையாக எத்தனை பேர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் ?

பதில்: இந்த தருணத்தில் அது தொடர்பான உறுதியான எண்ணிக்கையை என்னால் தர முடியாது. ஏனெனில் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையானது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமாக கூறப்படுகின்றது.

காணாமற்போனோர், இறுதி நேரத்தில் சரணடைந்தவர்கள், இராணுவத்தால் கைது செய்யப்பட்டு அதன் பின்னர் காணாமற்போனோர் என்ற அடிப்படையில் வெவ்வோறான எண்ணிக்கைகள் கூறப்படுகின்றது.

எனவே இவை அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான தரவுத் தளத்தை நிறுவியதன் பின்னரே முழுமையான எண்ணிக்கையை பெற்றுக்கொள்ள முடியும்.

கேள்வி: காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு நீதியைப் பெற்றுக் கொள்வதில் கால நீடிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அதில் சாட்சிகளாக உள்ளவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உயிரிழந்து வரும் நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறு நீதியை பெற்றுக்கொள்ள முடியும்?

பதில்:  இப் பிரச்சினைக்கு எல்லோரும் இணைந்து செயற்படுவதன் ஊடாகவே நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதனை உடனடியாக மேற்கொள்ள முடியாது.

இக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் சாட்சியாக உள்ளவர்களிடமும் பாதிக்கப்பட்டவர்களிடமும் நேர்காணல்களை மேற்கொண்டு அவர்களது பதிவுகளை எழுத்து மூலமமாக ஆவணப்படுத்துவதன் ஊடாக எக்காலத்திலும் அவற்றைப் பயன்படுத்தி நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.