வரலாறு காணாத அதிசயம்.. ஜட்டியால் தூக்கிட்டு கைதி தற்கொலை..

0
893

காஞ்சிபுரம்: சூனாம்பேடு காவல்நிலையத்தில் இறந்த சிற்றரசுவின் மரணத்தில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அரசு ஊழியர் சிற்றரசு கொல்லப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன’ என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், சூனாம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு, அச்சிறுப்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்கும் நீண்டநாள்களாகவே நிலம் தொடர்பான தகராறு இருந்துவந்துள்ளது.

இதுதொடர்பாக, கடந்த மே 1ம் தேதி போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் சிற்றரசு. மறுநாள் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

‘ இந்தக் கொலைக்கு இன்ஸ்பெக்டர்தான் காரணம். அவர்தான் அடித்துக் கொலை செய்திருக்கிறார்’ என உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சிற்றரசுவின் உடலையும் அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

‘ நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்’ என அவரது உறவினர்கள் உறுதியாகக் கூறிவிட்டனர்.

இந்நிலையில், இந்த மரணம் குறித்து விரிவான ஆய்வை நடத்தியிருக்கிறார் கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி.

இதுகுறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், சூனாம்பேடு காவல்நிலையத்தில் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கைதி சிற்றரசு 02.05.2018 அன்று அதிகாலையில் மர்மமான சூழலில் உயிரிழந்துள்ளார்.

இதில் காவல்துறை, விசாரணை அதிகாரிகளின் நிலைப்பாடு – அவர் கழிவறையில் தான் அணிந்திருந்த நீல நிற ஜட்டியை (FIR No. 132/2018) கயிறுபோல் பயன்படுத்தி, அவர் கழுத்தைச் சுற்றி தற்கொலை செய்துகொண்டார் என்பதே.

சி.சி.டி.வி. கேமரா அதை உறுதிபடுத்துவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி என்னிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார்.

நீதிமன்ற நீதிபதி விசாரணை முடிந்ததாகவும் அவர் எனக்குக் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

பின்வரும் கேள்விகள் சிற்றரசின் மரணம் ஏன் கொலையாக இருக்கமுடியாது என்ற சந்தேகத்தை பலமாக எழுப்புவதாக உள்ளது.

• தற்கொலை முயற்சி நடந்த இடம் சிறையிலுள்ள கைதி அறையிலுள்ள கழிவறை என இருக்கையில் சி.சி.டி.வி. கேமராவில் கைதி அறையின் நுழைவாயில் மட்டுமே பதிவாகும் நிலை இருக்கையில், கழிவறையில் நடந்த இச்சம்பவத்தை சி.சி.டி.வி. கேமரா எப்படி பதிவு செய்யும்?

• ஒரே ஒரு ஜட்டி துணையுடன் தாழ்பாளில் ஒரு முனையை மாட்டி கழுத்தைச் சுற்றி தூக்கிட்டு தற்கொலை செய்வது சாத்தியமா? அதுவும் முடிச்சு இல்லாமல் இருந்தால் ஜட்டியின் அளவை கணக்கில் கொண்டால் இது சாத்தியம்தானா?

• ஒரு முனையைத் தாழ்ப்பாளில் மாட்டியிருந்த போது தாழ்ப்பாளே உடைந்து பெயர்ந்து வந்துள்ள நிலையில் உயிரிழப்பு என்பது சாத்தியமா?

• தாழ்ப்பாள் கழிவறைக் கதவின் நடுப்பகுதியில் இருந்ததாகவே சொல்லப்படுகிறது. (இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் முறையான விளக்கத்தைத் தரவில்லை) அது உண்மையெனில் கழிவறையின் உயரம் தோராயமாக 5 அடி என இருக்கையில், அதாவது 2.5 அடி மட்டுமே தரைமட்டத்திலிருந்து தாழ்ப்பாள் இருந்துள்ளது எனக்கொண்டால் அதில் ஜட்டியை மாட்டி தற்கொலை செய்துகொள்வது என்பது சாத்தியமா?

• கழுத்தின் முன்புறம் மற்றும் கொஞ்சமாக பக்கவாட்டில் மட்டுமே கழுத்து இறுக்கப்பட்டதற்கான அறிகுறி தோலில் இருக்கும்போது முழுமையாக கழுத்து இறுக்கப்படாத நிலையில் உயிரிழப்பது என்பது தற்கொலை மூலம் சாத்தியம்தானா?

தடயவியல் புத்தகங்கள் கழுத்தை வேறு ஒருவர் நெறிக்கும் சூழலில் மட்டுமே ECCHYMOSES (ஊதா மற்றும் நீலநிற இரத்தக் கசிவுடன் தோலில் ஏற்படும் காயம்) சாத்தியம் என இருக்கையில், தற்கொலை மூலம் தூக்கிடும்போது அது சாத்தியமல்ல என்பதும் தெளிவாக இருக்கையில் அது ஏன் கொலையாக இருக்கக்கூடாது?

மேலும் தூக்கிட்டு தற்கொலை செய்யும்போது தோளில் ஏற்படும் காயம் கோணலாக (Oblique) இருக்கும் என்பதும் புத்தகங்களில் தெளிவாக இருக்கும்போது சிற்றரசுவின் கழுத்தில் உள்ள காயத்தைப் பார்த்தால் அது பெரும்பாலும் நேர்கோட்டில் இருப்பதாகவே உள்ளது மீண்டும் அவர் ஏன் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடாது என்ற முக்கிய கேள்வியை எழுப்புவதாகவே உள்ளது.

மேலும் அக்காயம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என இருந்தால் கழுத்தில் தற்போது இருக்கும் இடத்திற்கு மேலே அக்காயம் இருந்திருக்கும் என்பதையும் விசாரணை கணக்கில் கொள்ள வேண்டும்.

• காவல் நிலையத்தில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டுள்ளார் என்ற புகார் வந்துள்ள நிலையில், அதன்மூலம் ஏற்பட்ட காயத்தையும் பிரேத பரிசோதனை அறிக்கை கணக்கில் கொள்ளுமா?

பிரேத பரிசோதனையின்போது எடுக்கப்படும் வீடியோ கிராஃபி காட்சிப் பதிவு பாதிக்கப்பட்டவருக்கு சிரமமின்றி கிடைக்குமா?

• சுவாதி கொலை வழக்கின் கொலையாளி ராம்குமார் மின் வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டார் என நீதிபதி தமிழ்ச்செல்வியின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், மின்சார பாதிப்பு, கீழ் உதட்டின் உட்புறம் மட்டுமே ஏற்பட வாய்ப்பு பெரும்பாலும் இல்லை.

நிச்சயம் பல், நாக்கு, மேல் உதடு, பல்லுக்கும் உதட்டிற்கும் இடையிலுள்ள ஈறு, இவற்றில் எந்த பாதிப்பும் இல்லை என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இருப்பதை நீதியரசர் அவர்கள் ‘இது எப்படி சாத்தியம்?’ எனக் கேள்வி கேட்டிருந்தால் அது மின்சாரம் மூலம் ஏற்பட்ட கொலையாகக்கூட இருக்கலாம் என்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.

ஆக, நீதிபதி அறிக்கை கொடுத்துவிட்டார் என்பதாலேயே உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது என எடுத்துக் கொள்ளமுடியாது என்பது தெளிவு. மேற்கூறப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே உண்மை வெளிச்சத்திற்கு வரும்’ என விவரித்திருக்கிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.