கூகுள் நிறுவனத்தில் இந்திய பெண்ணுக்கு ரூ.1 கோடி சம்பளம்!

0
212

சுவிட்சர்லாந்தில் உள்ள கூகுள் நிறுவன அலுவலகத்தில் ஆண்டுக்கு ரூ.1 கோடி சம்பளத்துடன் பிகாரைச் சேர்ந்த இளம்பெண் மதுமிதா சர்மா பணியில் சேர்ந்துள்ளார்.

தொழில்நுட்பப் பிரிவு பொறியாளராக அவர் பணியில் சேர்ந்துள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படை துணை பாதுகாப்பு ஆணையராக (சோனேப்பூர்) பணிபுரிந்துவரும் குமார் சத்யேந்திர சர்மா இவரின் தந்தை. தாயார் சிந்தா தேவி இல்லத்தரசி.

மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிய வேண்டும் என்ற மதுமிதாவின் கனவை கூகுள் நிறுவனம் நனவாக்கியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை அந்த நிறுவனத்தில் சேர்ந்த மகிழ்ச்சியில் இருந்த மதுமிதா கூறியதாவது:

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிய வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல நிறுவனங்களில் காலியாக இருந்த பணியிடங்களுக்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தேன்.

சில நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்தின. அமேஸான் இந்தியா நிறுவனம் ஆண்டுக்கு ரூ.24 லட்சம் சம்பளத்துடன் வேலை தர முன்வந்தது.

அதைத் தொடர்ந்து, மெர்சிடஸ் நிறுவனம் ஆண்டு சம்பளமாக ரூ.23 லட்சமும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆண்டு சம்பளமாக ரூ.18 லட்சமும் தர முன்வந்தன.

ஆனால், அதில் ஒன்றை கூட நான் தேர்வு செய்யவில்லை. ஏனென்றால் கூகுள் நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெறுவேன் என்று நம்பினேன்.

அந்த நிறுவனம் 7 சுற்று தேர்வுகளை நடத்தியது. என் நம்பிக்கை வீண்போகவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் அந்த நிறுவனத்தில் சேருமாறு அழைப்பு கடிதம் கிடைப்பெற்றது.

ஆண்டு சம்பளம் ரூ.1 கோடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுவிட்சர்லாந்தில் உள்ள அந்த நிறுவனத்தில் சேர்ந்துவிட்டேன். முதல் நாள் அனுபவம் சிறப்பாக இருந்தது.

நான் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அங்கு போய் தெரிந்து கொண்டேன் என்றார் மதுமிதா.

பிகார் மாநிலம், பாட்னாவில் உள்ள டிஏவி பள்ளியில் படித்த மதுமிதா, 10-ஆம் வகுப்பில் 86 சதவீதத்துடனும், 12-ஆம் வகுப்பில் 88 சதவீதத்துடனும் தேர்ச்சி பெற்றார்.

அகில இந்தியப் பொறியியல் நுழைவுத் தேர்வில் கடந்த 2010-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற அவர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பிடெக் படித்து முடித்தார்.

இதற்கு முன்பு பெங்களூரில் உள்ள சில நிறுவனங்களில் அவர் பணிபுரிந்திருக்கிறார்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.