பேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை!!- கருணாகரன் (கட்டுரை)

0
336

அரசியலமைப்புத் திருத்தம் நடக்குமா? இடைக்கால அறிக்கைக்கு என்ன நடந்தது? இப்பொழுது இதைப்பற்றி யாருக்காவது நினைவுண்டா?

ஆனால், கடந்த ஆண்டு இடைக்கால அறிக்கையை வைத்து நாடே அமர்க்களப்பட்டது. தமிழ், முஸ்லிம் சமூகத்தினரிடையே பெரும் பதட்டமே உருவாகியிருந்தது.

அப்பொழு இந்த இடைக்கால அறிக்கையினால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.

அந்தளவுக்கு உயிர்ப்பிரச்சினையாக இருந்த ஒரு விசயம் (அரசியலமைப்பு என்பது மெய்யாகவே உயிருக்கு நிகரான பிரச்சினை என்பது மட்டுமல்ல, உயிர்களைக் காப்பாற்றக் கூடியதும் தவறினால் உயிர்களை எடுக்கக் கூடியதுமான ஒரு விசயமே) இப்பொழுது பேசாப் பொருளாகி விட்டதன் மாயமென்ன? மர்மம் என்ன?

ஏன் இப்பொழுது அதைப்பற்றி யாருமே கதைப்பதில்லை?

கண்டியில் நடந்த முஸ்லிம்களின் மீதான வன்முறை, உள்ளுராட்சி சபைத் தேர்தல் பரபரப்பு, பிரபாகரனுக்கு அடுத்த தலைவர் கஜேந்திரகுமார் என்று தெரிவிக்கப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பு போன்ற திடீர்ச்சமாச்சாரங்கள் அரசியல் சாசனத்தை மறக்கடித்து விட்டனவா? அதற்கான இடைக்கால அறிக்கையைக் குறித்துச் சிந்திப்பதைத் திசை மாற்றி விட்டனவா?

அப்படியென்றால், ஏதோ ஒரு வகையில் அரசியலமைப்புத் திருத்த நெருக்கடியிலிருந்து அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் காப்பாற்றப்படுகின்றனவா?

உண்மையில் இந்த விசயம் ஆழத்தே உறங்கினால் அதனையிட்டு மகிழ்ச்சியடைவது சுமந்திரனும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மைத்திரியும் ரணிலுமே. இவர்களுக்கு இது பெரியதொரு நிம்மதியைத்தரும்.

ஆனால், நாட்டுக்கு? மக்களுக்கு? அதிலும் பாதிக்கப்பட்ட – புறக்கணிக்கப்பட்ட – ஒடுக்குமுறைக்குள்ளான எண்ணிக்கைச் சிறுபான்மைத் தேசிய இனச் சமூகத்தினருக்கு?

இங்கேதான் நாம் ஆளும் வர்க்கத்தையும் அதிகாரத்தரப்புகளுக்கிடையில் உள்ள ஒற்றுமையையும் அவற்றின் ரகசிய நடவடிக்கைகளையும் புரிந்து கொள்ள வேணும்.

மக்களுடைய நலன், நாட்டின் நலன் என்பதற்கு அப்பால், தமது நலனைப் பாதுகாப்பதிலும் அதைப் பற்றிச் சிந்திப்பதிலுமே இவை எப்போதும் கவனமாக இருக்கும். கரிசனையோடிருக்கும் என்பதற்கு இந்த விசயமும் ஒரு சான்று.

ஏற்கனவே இன்னொரு கட்டுரையில் குறிப்பிட்டதைப்போன்று, ஜனாதிபதி விரும்பியமாதிரி பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது, பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியாது என்ற சட்டத்திருத்தை வலு கவனமாக இருந்து ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவும் நிறைவேற்றி விட்டன.

இதைப்போல மூன்றாவது தடவையாக ஜனாதிபதி போட்டியிட முடியாது என்ற சட்டத்தையும் நிறைவேற்றியாயிற்று. அதாவது தமக்குத் தேவையானதை அவர்கள் செய்து கொண்டனர்.

ஆனால், இதற்குச் சற்றும் குறையாத ஏனைய விசயங்களை உள்ளடக்கிய சட்டத்திருத்தங்களை – அதிகாரப் பரவலாக்கத்துக்கான அடிப்படைகளைப் பற்றி இந்த “மேலாளர்கள்” கவனிக்கவும் இல்லை. கவலைப்படவும் இல்லை.
ஆகவே பாதிக்கப்படுவது எப்போதுமே மக்கள்தான். அதிலும் அடிநிலை மக்கள், ஒடுக்கப்படும் மக்கள்.

அரசியலமைப்புத்திருத்தத்தைப் பற்றியும் இடைக்கால அறிக்கையைப் பற்றியும் அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ந்து தலையைப் பிய்த்துக் கொண்ட அரசியல் ஆய்வாளர்களும் ஊடகங்களும் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

தமிழ்த்தேசிய மக்கள் பேரவையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் இடைக்கால அறிக்கையைப் பற்றி மக்களுக்குத் தெளிவூட்டும் அரசியல் கருத்தரங்குகளை கிராமங்கள் தோறும் நடத்துவதாக பெரும் பிரகடனங்களைச் செய்திருந்தன.

அந்தப் பிரகடனம் வீரசிங்கம் மண்டபம், யாழ்ப்பாணம் பொதுசன கேட்போர் கூடத்துக்கு அப்பால் நகர்ந்ததாகத் தெரியவில்லை.

திருகோணமலை உள்பட ஒரு சில இடங்களில் சிறிய அளவிலான எடுத்துரைப்புகளும் விளக்கமளிப்புகளும் நடந்தன. பிறகு சத்தமேயில்லாமல் எல்லாமே அடக்கத்துக்குப் போய் விட்டன.

இந்தச் சந்தர்ப்பத்தில் இரண்டு பேர் மட்டும் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் இடைக்கால அறிக்கையைப் பற்றியும் அடிக்கடி பேசி வருகிறார்கள். அதில் அவர்கள் தமது நிலைப்பாட்டையும் விளக்கி வருகின்றனர். ஒருவர் அமைச்சர் மனோ கணேசன். இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்படும் விடயங்களும் அரசியலமைப்புத்திருத்தமும் அரசியல் தீர்வும் நிறைவேறும் என்று தனக்கு நம்பிக்கை இல்லை என்று மனோ கணேசன் பகிரங்கமாகவே கூறியுள்ளார். இவ்வளவுக்கும் அவர் அரசாங்கத்தில் அந்தஸ்துள்ள அமைச்சர்.

அரசாங்கத்தில் அந்தஸ்துள்ள அமைச்சராக இருந்து கொண்டே அரசாங்கத்துக்கு எதிராக இவ்வாறு பகிரங்கமாக எதிர்க்கருத்தை வெளிப்படுத்துவது சவாலானது. அதிலும் எண்ணிக்கைச் சிறுபான்மைத் தேசிய இனமொன்றின் பிரதிநிதியாக இருந்து கொண்டு இவ்வாறு நிலைப்பாடு எடுப்பது என்பது சாதாரணமானதல்ல. நெருக்கடிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்.

ஆனாலும் மனோ கணேசனுக்கு எப்போதுமிருக்கும் தற்துணிச்சல் இங்கும் அவரை இவ்வாறு துணிகரமாகச் செயற்பட வைத்துள்ளது. இங்கே ஒரு ஆச்சரியமான விடயத்தை நாம் கவனிக்க வேண்டும்.

mano-ganeshமனோ கணேசனின் “உண்மை கூறலினால்” அரசாங்கத்தையும் விட அதிகமாகப் பதற்றமடைவதும் கோபமடைவதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே ஆகும்.

கூட்டமைப்பின் பொறுப்பின்மையை மனோ மறைமுகமாக விமர்சிக்கிறார். அதனுடைய பொறுப்பை வலியுறுத்துகிறார். இது கூட்டமைப்புக்கு தீராத சங்கடத்தையும் எரிச்சலையும் கொடுக்கிறது.

இன்னும் அழுத்தமாகச் சொன்னால், தமிழ்த்தேசியப் பேரவையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் கூட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கியதை விட, கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுப்பதை விட மனோ கொடுக்கும் அழுத்தம் வலுவானது.

இதனால்தான் அண்மைய ஆண்டுகளில் மனோவுக்கும் கூட்டமைக்குமிடையே கசப்பான உறவு காணப்படுகிறது.

ஒரு காலம் கூட்டமைப்பின் மேடைகளில் மனோ முக்கிய பிரமுகராக ஏறியவர். இப்பொழுது அதே மேடையை அவர் விமர்சிக்கிறார். இது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மீது அவர் வைத்த, வைக்கின்ற விமர்சனம் என்பதற்கும் அப்பால், தமிழ் பேசும் சமூகத்தினரின் அரசியல் எதிர்காலம் பற்றிய கரிசனை எனலாம்.

அடுத்தவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம். முஸ்லிம் சமூகத்தினரிடையே ஹக்கீமின் அரசியல் நிலைப்பாடுகள், அணுகுமுறைகள், அவற்றின் வெற்றி தோல்வி, பெறுபேறுகள் பற்றிய நிறையும் குறையும் உண்டு. இதைக் ஹக்கீமும் அறிவார்.

ஆனால், இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியல் சாசன உருவாக்கத்தில் அவர் சற்று நிதானமாக உள்ளார் என்றே கூற வேணும். அரசாங்கத்தோடு இணைந்திருந்து கொண்டு அரசாங்கத்தின் இழுத்தடிப்புகள், தவறுகள், இன ஒதுக்கல்களைக் கண்டிப்பது – எதிர்ப்பது, அதன் உள்விவகாரங்களைப் பற்றிப் பகிரங்கப்படுத்துவது என்பதெல்லாம் கடினமானது.

இருந்தாலும் முடிந்தளவுக்கு தன்னுடைய எதிர்வினைகளை வெளிப்படுத்தி வருவதோடு, அரசாங்கத்தையும் கண்டித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தன்னுடைய தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சிற்கான கூட்டமொன்றில் கண்டியில் வைத்துத் தெரிவிக்கும்போது, “அரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாகநடைபெறவேண்டும்.

சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலமைப்பின் ஏனைய விடயங்களும் கவனத்திற் கொள்ளப்பட்டு,முழுமையான சீர்திருத்தம் கொண்டுவரப்படுவதையே ஆதரிப்போம்” என்று தெரிவித்திருக்கிறார். இதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஹக்கீமின் இந்த அறிவிப்பும் கூட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நெருக்கடிக்குள்ளாக்கும்.

இவ்வளவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மனோ கணேசனைப்போலவோ (தமிழ்த்தேசிய முற்போக்குக் கூட்டணி) ஹக்கீமைப்போலவோ (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்) அரசாங்கத்துடன் நேரடியாக ஆட்சிப் பகிர்வையோ பங்கேற்பையோ செய்யவில்லை. அரசாங்கத்துடன் தொட்டுக்கொள்ளாமலும் தொடர்பில்லாமல் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தையே வெளியே காண்பித்துக் கொண்டிருக்கிறது.

“ஆட்சியில் பங்காளி” என்ற அடையாளம் தன்னைச் சிறுப்பித்து விடும். அதனால் எதிர்க்கட்சி என்ற நிலையில் இருந்து கொள்வதே நல்லது என்று சிந்திக்கிறது கூட்டமைப்பு.

அப்படியாக இருந்தால் அது ஆட்சியில் இருப்போரை விடவும் தீவிரமாக இந்த விசயங்களில் (எண்ணிக்கைச் சிறுபான்மைத் தேசிய இனங்களின் விசயங்களில்) செயற்பட வேணும்.

இப்படிப் பம்மிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படிக் கள்ளத்தனங்களைத் தன்னிடத்திலே வைத்துக்கொண்டு தீவிரத் தமிழ்த்தேசியவாதத்தைப் பேசக் கூடாது. “அடைந்தால் மகாதேவி (சமஸ்டி இல்லையேல் தனிநாடு) இல்லையென்றால் மரணதேவி” என்று கதைவிடக்கூடாது.

இதையிட்டெல்லாம் எழுந்து தொடர்ந்து பேசுவதற்கு அனைவரும் முன்வருவது அவசியம். இல்லையேல், ஒடுக்குமுறை தொடரும். ஆட்சியைப் பாதுகாப்பாக அடுத்த தேர்தல் வரையில் ஐ.தே.கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் நகர்த்திச் செல்லும்.

வாயில தோசையைத் தீத்தி விடுவார்கள்.

-கருணாகரன் –

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.