“செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்!” – சீறிய பாடகர் ஜேசுதாஸ்! – (வீடியோ)

0
412

சிகர்களைட் தன்னுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் செல்ஃபி எடுத்தால் மட்டும் கோபமடைவது ஏன் என்கிற கேள்விக்குக் கிடைத்துள்ள விடை, ட்விட்டர் வாசிகளை புளகாங்கிதம் அடையவைத்துள்ளது.

அண்மையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க பாடகர் கே.ஜே.யேசுதாஸ் டெல்லி சென்றிருந்தார்.

டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். விழா அரங்குக்குப் புறப்படுவதற்காக ஹோட்டலிலிருந்து யேசுதாஸ் வெளியே வந்தபோது, இளைஞர் ஒருவர், யேசுதாஸின் அனுமதி கேட்காமலேயே அவருடன் செல்ஃபி எடுத்தார்.

இதனால், கடும் கோபமடைந்த யேசுதாஸ், அந்த இளைஞரை வன்மையாகக் கண்டித்தார்.

இளைஞரிடமிருந்து செல்போனைப் பிடுங்கிய அவர்,`செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்” என்று கடும் கோபத்துடன் கூறினார். 

இளைஞரின் கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி, தன்னுடன் எடுத்த செல்ஃபியை அழித்த பின்னரே, அங்கிருந்து யேசுதாஸ் நகர்ந்தார். பலர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்ததால் செல்ஃபி எடுத்த இளைஞர் கூனிக்குறுகிப்போனார்.

யேசுதாஸ் இளைஞரை எச்சரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது. `செல்ஃபி எடுத்த இளைஞரிடம் இவ்வளவு கடுமை காட்ட அவசியமில்லை’  `ஒரு செல்ஃபி எடுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது… தலைக்கனம் பிடித்தவர்’ என யேசுதாஸ்மீது கடுஞ்சொற்கள் பாய்ந்தன.

`அவருடன் செல்ஃபி எடுப்பதற்கு முன் அனுமதி கேட்க வேண்டுமல்லவா?’ என்று யேசுதாஸுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து யேசுதாஸ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. செல்ஃபி எடுத்தால் மட்டும் அவர் கோபமடைவது ஏன் என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.

யேசுதாஸின் தீவிர ரசிகர் அனுப் என்பவர் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார். தற்போது, அமீரகத்தில் வசித்து வரும் அனுப், `செல்ஃபி குறித்து யேசுதாஸிடம் நேரடியாகவே தான் கேட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதில் உன்னதமானது’ என்றும் தன் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

அனுப்குமாரின் பதிவில், “நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே யேசுதாஸின் தீவிர ரசிகன். எங்கள் கல்லூரிக்கு அவர் வந்தபோது, என் நண்பர்களுடன் சேர்ந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளேன்.

ஒரு வருடத்துக்கு முன், துபாய் விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஜாலி மூடில் உற்சாகமாக இருந்தார். நான் அவரிடம், `சார்… உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் ”என்றேன்.

`தாராளமாக எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செல்ஃபி மட்டும் கூடாது’ என்றார்.

நான் வேண்டிய மட்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். பின்னர், அவரிடம் மெள்ள ‘சார்… போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் நீங்கள் ஏன் செல்ஃபி எடுக்க அனுமதிப்பதில்லையே ஏன்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை பிரமிக்க வைத்தது.

anup__10330

“மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழக்கூடியவை.

மனித வாழ்க்கைக்கு இன்னொருவரின் துணையும் ஒத்துழைப்பும் தேவை. ஒருவரைச் சார்ந்து மற்றொருவர் வாழ்வதுதான் உலக நியதி.

ஆனால், தற்போதைய இளைய தலைமுறை உறவுகளை வளர்க்க முயலவில்லை. மாறாக தனித் தனி தீவுகளாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் போட்டோ எடுத்துக் கொள்ள இன்னொருவர் உதவி தேவைப்பட்டது.

செல்ஃபி வந்த பிறகு, போட்டோ எடுக்கக்கூட இன்னொருவர் உதவி தேவையில்லை என்றாகிவிட்டது. அதனால்தான் செல்ஃபி எடுக்க நான் அனுமதிப்பதில்லை” என்று பதிலளித்தார்.

எத்தகைய உன்னதமான நோக்கம் கொண்ட ஒரு மனிதரிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நான் வியந்துபோனேன்” என்று கூறப்பட்டுள்ளது.

கல்லூரியில் படிக்கும்போது யேசுதாஸுடன் எடுத்த புகைப்படத்தையும் ஒரு வருடத்துக்கு முன் துபாய் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தையும் அனுப் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யேசுதாஸை விமர்சித்தவர்களை இந்தப் பதில் நெகிழ வைத்துள்ளது.

நல்ல கலைஞரையும் அவரின் உன்னதமான நோக்கத்தையும் புரிந்துகொள்ள நாம்தான் தவறிவிடுகிறோமோ!

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.