முதலமைச்சர் களத்தில் இறங்குவேன்!! -டக்ளஸ் தேவானந்தா அளித்த நேர்காணல்

0
519

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அந்த ஒப்பந்தத்தினூடாக தமிழ் மக்களுடைய பலவகையான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தை தமிழ் தரப்புகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக நான் கோரிக்கை விடுத்துவந்திருக்கிறேன் என்று தெரிவித்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமாகவிருந்தால் அதனை அர்த்த பூர்வமானதாக என்னால் அணுகமுடியும், செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றும் தெரிவித்தார்.

கேள்வி : மைத்திரி ரணில் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவந்த அரசியலமைப்புப் பணிகள் தற்பொழுது ஸ்தம்பிதமடைந்து நிற்கிறது. அரசாங்கத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 1 1/2 வருடங்கள் இருக்கின்ற சூழ்நிலையில் அந்த முயற்சி கைகூடும் என்ற நம்பிக்கை தங்களிடம் இருக்கிறதா?

பதில் : எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சிக்கு வந்து முதல் 6 மாதம் அல்லது ஒரு வருடத்துக்குள் பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வைக் கண்டுவிட வேண்டும். இந்தக் காலப்பகுதிக்குள் தீர்வைக் காண முயற்சி எடுக்கப்படாவிட்டால் அது ஆறின கஞ்சி பழங்கஞ்சி ஆகிவிடுவது போன்று ஆகிவிடும் என்பதுதான் என்னுடைய வரலாற்று அனுபவம்.

மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துவதும் அந்தந்த காலகட்டங்களில் வருகின்ற தமிழ்த் தலைமைகளை பொறுத்துத்தான் அமைகின்றது.

அதன் அடிப்படையில் அந்தத் தமிழ்த் தலைமைகள் தங்களுடைய சுய இலாப அரசியலுக்குள் இருந்து கொண்டுதான் தமிழர்களுடைய பிரச்சினைகளைப் பார்க்கிறார்களே தவிர, நடைமுறைச்சாத்தியமாக பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற அணுகுமுறையோடு காரியங்களை அணுகியது கிடையாது.

இந்த செயற்பாடுகளின் விளைவினால் தான் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் வரை தள்ளப்பட்டு பல துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டார்கள். இவற்றுக்கெல்லாம் தமிழ்த் தரப்புகள் என்று செல்லிக் கொண்டிருப்பவர்கள் தான் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி : அரசியலமைப்பு முயற்சிகளை முன்கொண்டு செல்வதற்கு எவ்வாறான வழிகளைப் பின்பற்ற வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பதில் : முன்னோக்கி நகர்வதனூடாகத்தான் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண முடியும். ஒரு வாகனம் தரமாக இருக்கிறதா? என்று கணிப்பதற்கு முதலில் வாகனத்துக்குள் ஏறி அதை ஓட்டிப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் அதில் என்ன பிரச்சினை இருக்கிறது? தேவைப்படுவை என்ன? போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

அதேபோல் தான் எங்களுக்கு (தமிழர்களுக்கு) கிடைத்த வாகனங்கள் சரியாக ஓட்டிப் பார்க்கப்படவில்லை. அதற்கு திறமையான பொருத்தமான சாரதி கிடைக்காதது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம்.

13 பற்றி நாங்கள் நெடுங்காலமாக கூறி வருகின்றோம். 13 முடிவல்ல; அது ஒரு ஆரம்பம்.

ஒருவர் நீச்சல் அடிக்க கற்றுக்கொள்ள வேண்டுமாகவிருந்தால், நீருக்குள் இறங்கினால் தான் அதனை கற்றுக்கொள்ள முடியும். நீருளுக்குள் இறங்காமல் கரையில் இருந்துகொண்டு வியாக்கியானம் பேசிக் கொண்டிருப்பதனூடாக நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பு தமிழர்களுக்கு கிடைத்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதனைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிட்டோம். அதனுடைய விளைவுகளைத் தான் இன்று தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலப்பகுதியில் தமிழர் தரப்பில் ஏறக்குறைய 2000 பேர் வரையிலேயே பலியாகியிருந்திருப்பார்கள். ஆனால் முள்ளிவாய்க்காலில் வகை தொகையில்லாமல் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? என்பதை தமிழர்கள்தான் ஆராய வேண்டும்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் அன்று சரியாக பயன்படுத்தப்பட்டிருந்தால் நாங்கள் இன்று நடைமுறையிலேயே சுயநிர்ணய உரிமையைப் பெற்றிருந்திருக்கலாம்.

அதேபோல்தான் புதிய அரசியலமைப்பு விடயத்திலும் தற்பொழுது காலம் கடந்துவிட்டது. சம்பந்தன் ஆட்சிமாற்றத்துக்கு பின்னர் ஒவ்வொரு வருடமும் இந்த வருட இறுதியில் கிடைத்துவிடும், வருட ஆரம்பத்தில் கிடைத்துவிடும் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்து வந்தார்.

இந்த வாக்குறுதிகள் தேர்தல்களுக்காக விடப்பட்ட கோஷமே தவிர, அர்த்தபூர்வமானதோ, உண்மைத்தன்மையுள்ளதோ அல்ல. இதையும் நான் என்னுடைய அனுபவத்தினூடாகவே கூறுகிறேன்.

நாங்கள் ஒரு காலத்தில் ‘தனிநாடு’ என்ற கோஷத்தை முன்வைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்தியவர்கள்தான். தனிநாட்டை உருவாக்குவதனூடாகத்தான் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்று போராடினோம்.

ஆனால் நீண்ட கால அனுபவங்களுக்கூடாக ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு என்ற நிலைப்பாட்டுக்குள் வந்து அதனூடாக பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி, எக்காலத்திலும் பிரிக்கமுடியாத வட கிழக்கு ஒரு அலகு என்பதே எங்களுடைய அரசியல் பயணம். மேற்கூறிய இவ்விரண்டும் எங்களுக்கு சாதகமாக இருந்த பொழுதில் அவற்றை தமிழ் தலைமைகள் தவறவிட்டுவிட்டார்கள்.

இன்று தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைகள் மீது நம்பிக்கையிழந்து தாங்களாவே வீதியிலிறங்கி போராட்டங்களை நடத்த தொடங்கிவிட்டார்கள். இன்று தமிழர்கள், போலித் தமிழ்த்தலைமைகளையும் அவர்களுடைய போலி வாக்குறுதிகளையும் இனங்கண்டுவிட்டார்கள்.

இரணைதீவு மக்கள் தாங்களாக போராட்டக்களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பில் நான் ஜனாதிபதியுடன் பேசியிருக்கிறேன். எதிர்வரும் 9 ஆம் திகதி இந்த விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரவிருக்கிறேன்.

daakகேள்வி : நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கும் 20 ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றுக்கு கொண்டுவரவுள்ளதாக ஜே.வி.பி. கூறியிருக்கிறது. இது தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் : அண்மையில் நாங்கள் உட்பட சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்றன ஒன்றுகூடி மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்ந்திருந்தோம்.

அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ஐந்து விடயங்கள் பற்றி பேசி முடிவெடுத்திருந்தோம்.

எங்களைப் பொறுத்தவரை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை மாற்றுவதாக இருந்தால் அதற்கு பக்கபலமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் ஒருவரை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதுடன், பாராளுமன்றுக்கு சமனாக ஒரு மேற்சபை உருவாக்கப்பட்டு அந்த மேற்சபையில் 50 க்கு 50 என்ற வீதத்தில் சிறுபான்மையினருக்கு இடம் ஒதுக்கப்பட வேண்டும்.

நாடு தழுவிய ரீதியில் ஒரு தலைவர் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் மாத்திரம் தான் சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அல்லது நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் தேவை.

இந்த ஏற்பாடுகள் இல்லாவிட்டால் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுடைய பிரச்சினைகள் கேள்விக்குள்ளாகவே காலத்துக்கும் இருக்கும்.

இந்நிலையில், ஜே.வி.பி.யின் கருத்தை இன்று பௌத்த பீடங்கள் எதிர்த்துவருகின்ற நிலையில், 20 க்கு எந்தளவுக்கு பெரும்பான்மை மக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக மாறியிருக்கிறது.

கேள்வி : நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பிற்பாடு ஆட்சியமைக்கும் படலத்தில் கூட்டமைப்புக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் டீல் போடப்பட்டதாக கூறப்படுகிறதே?

பதில் : இந்த டீல் என்ற விடயம் வெறுமனே வார்த்தையாக மாத்திரமே இருக்க முடியும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்த கையோடு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பொதுச்சபை கூடியது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.

நீண்டகாலமாக உள்ளூராட்சி மன்றங்கள் இயங்காத காரணத்தினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.

அந்த அடிப்படையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஊர்காவற்துறையில் ஈ.பி.டி.பி.யும் பூநகரியில் கூட்டமைப்பும் தனியாக ஆட்சி அமைக்கும் பலம் கிடைத்த அதேவேளை, ஏனைய சபைகளில் யாருக்கும் தனித்து ஆட்சியமைக்கும் பலம் கிடைத்திருக்கவில்லை

அந்த அடிப்படையில் நீண்டகாலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்தந்த பிரதேச சபைகளுக்கூடாக சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் யார் அந்தச் சபைகளை நடத்த முன்வருகிறார்களோ யார் எங்களிடம் ஆதரவைக் கேட்கின்றார்களோ, அவர்களுக்கு ஆதரவு வழங்கலாம் என்ற முடிவை நாங்கள் எங்களுடைய பொதுச்சபையில் கூடி முடிவெடுத்திருந்தோம்.

அந்த அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் எங்களிடம் தங்களுக்கு ஆதரவு தருமாறு கேட்டார்கள். அதற்கிணங்க அவர்கள் கேட்ட இடங்களில் நாங்கள் ஆதரவை வழங்கியிருக்கிறோம்.

அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் , மட்டக்களப்பு மாநகரசபை, திருகோணமலையில் உப்பு வெளி ஈறாக யாழ். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அவர்கள் (கூட்டமைப்பு) கேட்ட இடங்களில் எங்களுடைய ஆதரவை வழங்கியிருக்கிறோம்.

மக்களுக்கு சேவைகள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே எங்களுடைய ஆதரவை வழங்கியிருக்கிறோம்.

எங்களுடைய ஆதரவுடன் அந்த சேவைகளை அவர்கள் செயற்படுத்தும் பொழுது அந்தச் சேவைகள் மக்களிடம் சரியாகச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் அந்த ஆதரவை வழங்கினோமே தவிர, வேறு எந்த டீலும் இல்லை.

எங்களுக்கு மக்கள் நலன்தான் முக்கியமே தவிர, டீல் முக்கியம் அல்ல.

கேள்வி : அடுத்து நடைபெறவிருக்கின்ற வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளனவே?

பதில் : இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அந்த ஒப்பந்தத்தினூடாக தமிழ் மக்களுடைய பலவகையான பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்து வருகிறது.

இந்த ஒப்பந்தத்தை தமிழ் தரப்புகள் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று நீண்ட காலமாக நான் கோரிக்கை விடுத்துவந்திருக்கிறேன்.

1987 ஆம் ஆண்டு அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போதிலும் இன்றுவரை அதனை சரியாக எந்தவொரு தமிழ்த் தரப்பும் கையாளவில்லை என்ற ஆதங்கம் என்னிடம் இருக்கிறது.

‘ஆடத் தெரியாதவன் மேடை கோணல்’ என்று கூறுவது போன்று அன்றிலிருந்து இன்றுவரை தமிழ்த்தரப்புகள் இந்த ஒப்பந்தத்தை சரியாக பயன்படுத்தாது வருகின்றார்கள்.

எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமாகவிருந்தால் அதனை அர்த்த பூர்வமானதாக என்னால் அணுகமுடியும், செயற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

கடந்த மாகாண சபைத் தேர்தல் காலத்தில் எங்களிடம் வடமாகாண சபையை தந்தால் 3 இலிருந்து 5 வருடங்களுக்குள் வடமாகாணத்தில் பாலும் தேனும் ஓடும் என்று கூறியிருந்தேன். அதாவது வடக்கை வளமான தேசமாக மாற்றுவேன் என்று கூறியிருந்தேன். என்னால் அதனைச் செய்ய முடியும்.

ஆடுற மாட்டை ஆடிக் கறப்பது போன்றும் பாடுற மாட்டை பாடிக் கறப்பது போன்றும் இலங்கை அரசாங்கத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.

அதேபோல் இந்தியாவினுடைய ஒத்துழைப்பை பெற்று, புலம்பெயர் தமிழர்களுடைய ஆதரவையும் பெற்று வடக்கை வளமாக்கியிருப்பேன்.

அத்துடன், மாகாண சபையில் நான் முன்வைக்கின்ற கோரிக்கைகளில் ஒன்று, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை கிடைக்கும் வரை ஒரு உதவித் தொகையை வழங்குவதுடன், தொழில் வாய்ப்புகளை வடக்கில் உருவாக்குவது.

இன்று இலங்கையர்கள் பயன்படுத்துகின்ற பல பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை. இந்தப் பொருட்கள் இந்தியாவிலிருந்து கப்பல் மூலமாக பருத்தித்துறையூடாக காலிக்கு சென்று கொழும்பு வந்து அதன் பின்னரே நாடு முழுவதும் செல்கின்றது.

இதை தவிர்த்து நேரடியாக இந்தப் பொருட்களை இந்தியாவிலிருந்து காங்கேசன்துறையில் இறக்கினால் குறைந்த விலையில் பொருட்களை எங்களுடைய மக்களுக்கு கொடுக்கும் அதேவேளை, கொழும்பு எங்களிடம் வந்து பொருட்களை வாங்கும் நிலைமையை உருவாக்கும் அதேவேளை, ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதோடு, மாகாண சபைக்கு நிறைய வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலைமையையும் ஏற்படுத்தலாம்.

இது ஒரு சிறிய விடயம். இவ்வாறான விடயங்களை மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்களால் மாத்திரம்தான் செய்யமுடியுமே தவிர, சுய இலாப அரசியல் செய்பவர்களால் இந்தக் காரியத்தை செய்ய முடியாது. என்னிடம் தந்திருந்தால் அதைச் செய்திருப்பேன்.

நான் ஆட்சியில் இருந்த காலத்தில் எந்தத் தமிழ்த் தலைமைகளும் செய்யாத பல விடயங்களை செய்துகாட்டி சாதித்திருக்கிறேன். நிறைய விடயங்களை செய்து சாதித்திருந்த போதிலும் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்பதே என்னுடைய திட்டமும் எண்ணமும்.

கேள்வி : மாகாணசபையினூடாக செய்கின்ற திட்டங்களுக்கு முட்டுக்கட்டைகள் போடுகிறார்கள் என்று வடமாகாண சபையினர் கூறுகின்றார்களே…?

பதில் : என்னுடைய அனுபவங்களை வைத்துக் கொண்டு தான் நான் கருத்துகளை கூறிவருகிறேன். நான் ஒரு பார்வையாளனாக இருந்து கொண்டு சுய இலாப அரசியலை நடத்துபவன் அல்ல. எனக்கு நம்பிக்கையிருக்கிறது. அனுபவம் இருக்கிறது.

அவர்கள் (கூட்டமைப்பு) கூறுவது நொண்டிச்சாட்டு. உண்மையாக செயற்படுத்த வேண்டும் என்று விரும்பினால் செயற்படுத்தலாம். முதலமைச்சர் விக்னேஸ்வரன் மகிந்த ராஜபக்ஷவின் முன்னால் பதவியேற்கமாட்டேன் என்று முதலில் கூறியிருந்தார்.

ஆனால் பின்னர் அவரிடம் வந்து பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அந்த நேரத்திலிருந்து அவர் ஒரு பாய்ச்சல் பாய்ந்திருப்பாரேயானால் இன்று பல விடயங்களை அவரால் சாதித்திருக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சுயநல அரசியலுக்குள் அவர்கள் மூழ்கியிருந்ததால் அவர்களால் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை.

கேள்வி : நிதி இல்லை; அதிகாரம் இல்லை என்று கூறுகிறார்களே…?

பதில் : வடமாகாண சபையில் மாறிமாறி வருகின்ற அமைச்சர்கள் மீது நிதி மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

இவர்கள் கூறுவது போன்று நிதி இல்லையென்றால் எப்படி நிதி மோசடி நடந்திருக்க முடியும்? அதிகாரம் இல்லையென்றால் எப்படி அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்க முடியும்?

அக்கறை உணர்வு இல்லாததுதான் இவர்களுடைய இந்த செயற்பாடுகளுக்குக் காரணம். போராடி பெற்றவர்களுக்குத்தான் அதனுடைய அருமை தெரியும். சும்மா இருந்துவிட்டு வந்தவர்களுக்கு அந்த அருமை தெரியாது.

நாங்கள் தமிழ் மண்ணுக்காக இரத்தம் கொடுத்திருக்கிறோம்; சதை கொடுத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் வருகின்ற மாகாண சபைத் தேர்தலில் மக்கள் சிந்தித்து தங்களுடைய வாக்குகளை பயன்படுத்தி எங்களை தெரிவு செய்யும் பட்சத்தில் சாதித்துக் காட்டுவோம்.

கேள்வி : கடந்த சில மாதங்களாக மாற்றுத் தலைமை தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. அந்த மாற்று அணி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாக மாறும் நிலைமை உருவாகுமா?

பதில் : தமிழ் மக்களுடைய ஜனநாயகப் போராட்டங்களாக இருக்கலாம், ஆயுத வழி போராட்டங்களாக இருக்கலாம், இன்று மீண்டும் திரும்பி ஜனநாயக வழிப் போராட்டத்துக்கு வந்திருக்கலாம். அந்த அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தலைமை என்ற தேவை இருந்துவந்தது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தந்த காலத்தில் வந்த தமிழ்த் தலைமைகள் தங்களுடைய சுயலாபங்களுக்காக அதனைப் பயன்படுத்தினார்களே தவிர, மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தியது கிடையாது.

நாளைக்கு அந்த சந்தர்ப்பம் எனக்குக் கிடைக்குமாகவிருந்தால், அதனை நான் சரியாக பயன்படுத்திக் கொள்வேன் என்று நம்புகிறேன்.

முதலமைச்சர் களத்தில் இறங்குவேன்-டக்ளஸ் தினக்குரலுக்கு நேர்காணல்

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.