மகனுடன் நீட் தேர்வு எழுத துணையாக சென்று இறந்த கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

0
558

கேரள மாநிலம், எர்ணாகுளத்துக்கு நீட் தேர்வு எழுதும் மகனுக்கு துணையாக சென்று மாரடைப்பால் உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு சென்றார். அவருடன் தந்தை கிருஷ்ணசாமி சென்றிருந்தார்.

நேற்று காலை மகன் தேர்வு மையத்துக்கு சென்ற பின்னர் விடுதியில் இருந்த கிருஷ்ணசாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பக்கத்து அறையில் இருந்த நபர் அவரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. சற்று நேரத்தில் கிருஷ்ணசாமி உயிரிழந்தார்.

இந்த தகவல் அறிந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கேரள அரசின் தலைமை செயலாளருடன் தொடர்பு கொண்டு பேசினார்.

அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது மைத்துனர் அன்பரசன் என்பவரிடம் இன்று மாலை சுமார் 4 மணியளவில் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணசாமியின் உடலை அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கம் மற்றும் உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைபூண்டிக்கு கொண்டு வந்தனர். கேரள மாநில எல்லைவரை ஆம்புலன்ஸ் வாகனத்துடன் பாதுகாப்புக்கு அம்மாநில போலீஸ் வாகனங்கள் வந்து கொண்டுள்ளன.

இந்நிலையில், கிருஷ்ணசாமியின் உடல் திருத்துறைப்பூண்டி, விளக்குடியில் உள்ள அவரது வீட்டிற்கு இன்று இரவு சுமார் 2 மணியளவில் கொண்டுவரப்பட்டது.

அங்கு அவரது முகத்தை காண அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சோகத்துடன் காத்திருந்தனர். அவர்கள் கிருஷ்ணசாமியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.