நீட் தேர்வு கட்டுப்பாடுகளால் நிலை குலைந்த மாணவிகள்- தலைவிரி கோலத்துடன் பரீட்சை எழுதினர்

0
353

நீட் தேர்வு எழுத சென்ற மாணவிளை சோதனை என்ற பெயரில் கம்மல், மூக்குத்தி அகற்ற சொல்லியும், பின்னிய தலைமுடியை அவிழ்த்து விட்டு தேர்வு மையத்துக்குள் அனுமதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டாக்டருக்கு படிக்க ஆசைப்படும் மாணவ- மாணவிகள் பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால் போதாது.

அதையும் தாண்டி ‘நீட்’ என்று அழைக்கப்படும் தேசிய தகுதி தேர்வில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்கிற கட்டாய உத்தரவு கடந்த ஆண்டு முதல் அமலுக்கு வந்தது.

அப்போதே முழுக்கை சட்டை அணிந்து வந்த மாணவர்களின் சட்டை கிழிக்கப்பட்டு அரைக்கை சட்டையாக்கப்பட்டது.

அது அப்போதே கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மாணவிகளின் நிலையோ பரிதாபத்துக்குள்ளாகும் வகையில் இருந்தது. அவர்களின் ஆடைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் அணி கலன்கள் அகற்றப்பட்டன.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதுடன் இதுபோன்ற சோதனைகள் எல்லை மீறும் வகையில் இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின.

எனவே வரும் காலங்களில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் இதுபோன்ற சோதனைகளை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால் நீட் தேர்வுக்காக நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகள் கடுமையான சட்டமாக்கப்பட்டு விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு இந்த ஆண்டும் நீட் தேர்வு மையங்களில் மாணவ-மாணவிகள் சோதனையை சந்தித்தனர்.

இங்கேயே தேர்வு எழுத முடியுமா? வெளி மாநிலங்களில் சென்றுதான் பரீட்சை எழுத வேண்டி இருக்குமா? என்பது போன்ற குழப்பங்கள் மாணவ- மாணவிகளை மிகவும் சோர்வடைய வைத்திருந்த நிலையில் தேர்வுக்கு முந்தைய சோதனை மாணவிகளை நிலைகுலைய செய்து விட்டது.

மாணவிகள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி ஆகியவை அகற்றப்பட்டன. இதனால் தேர்வு மையத்திற்கு சென்றிருந்த மாணவிகள் கடைசி நேரத்தில் அதனை கழற்சி தங்கள் பெற்றோரிடம் கொடுத்துவிட்டு சென்றனர்.

பரீட்சையில் காப்பி அடித்து விடக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளபடுவதாக சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்துள்ளது.

201805061340385110_1_Amal._L_styvpf

கம்மலிலும், மூக்குத்தி யிலும் எப்படி ‘பிட்’ஐ மறைத்து வைக்க முடியும். நகைகளை அணிந்திருந்தால் என்ன? என்பது போன்ற கேள்விகளை மாணவிகள் எழுப்பினர்.

அதே நேரத்தில் தேர்வுக்காக காலையிலேயே எழுந்து தலைவாரி புறப்பட்டு சென்ற மாணவிகளால் அப்படியே தேர்வு அறைக்குள் நுழைய முடியவில்லை.

தலைக்குள் பிட் பேப்பர்கள் ஏதேனும் சொருகி வைக்கப்பட்டுள்ளதா? என்றும் சோதனை நடத்தப்பட்டது. இதற்காக மாணவிகளின் தலையும் சோதனைக்குட்பட்டுத்தப்பட்டது. அவர்கள் பின்னி இருந்த ஜடை அவிழ்க்கப்பட்டது.

201805061340385110_2_Amal5897._L_styvpf

மாணவிகள் அணிந்திருந்த கிளிப், பேண்ட் ஆகியவையும் அப்புறப்படுத்தப்பட்டது. தலைவிரி கோலத்துடனேயே மாணவிகள் டாக்டர் கனவுடன் தேர்வு எழுதினர்.

கிராம புறங்களில் பெண்கள் தலையை விரித்து போட்டபடியே எந்த வேலையை செய்தாலும் பெரியவர்கள் அதனை அனுமதிக்கமாட்டார்கள்.

அதனை அபசகுணம் போல பார்ப்பார்கள். இதனால் கிராமப்புறங்களில் இருந்து தேர்வு எழுத சென்ற மாணவிகள் பலரும் மிகுந்த மனஉளைச்சலுக்குள்ளானார்கள்.

தமிழகத்தை பொருத்த வரையில் நீட் வேண்டாம் என்ற நிலை மாறி தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் அமைத்து கொடுங்கள் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டு விட்டது.

அதனுடன் கடுமையான கட்டுப்பாடுகளும் நீட் தேர்வுக்கு விதிக்கப்படுவது பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரீட்சையில் காப்பி அடிப்பவர்களை பிடிக்க வேண்டும் என்றால் அதற்கு சிறப்பு ஏற்பாடுகளைதான் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் செய்து கொள்ள வேண்டும்.

அதனை விட்டுவிட்டு சோதனை என்ற பெயரில் குறிப்பாக மாணவிகளை எல்லை மீறி சோதனையிடுவது சரியானதா? என்பதே பெற்றோர்களின் கேள்வியாக உள்ளது.

எனவே வரும் காலங்களில் இதுபோன்ற சோதனைகளை சி.பி.எஸ்.இ. நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கையாகவும் உள்ளது.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.