தினகரன் – திவாகரன் இடையில் வெடிக்கும் மோதல்

0
430

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த தினகரன் மற்றும் திவாகரன் இடையான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. தினகரன் யதேச்சதிகாரமாக நடந்துகொள்வதாக சசிகலாவின் சகோதரர் திவாகரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

கடந்த சில மாதங்களாகவே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த இந்த விவகாரம் தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது.

வெற்றிவேல் பதிவு

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை நடத்திவரும் டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான வெற்றிவேல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதியன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார்.

அந்தப் பதிவில், “எங்கள் தியாகத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும்,ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது.

கடந்த ஆண்டு மறைந்த திரு.மகாதேவன் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு துக்கம் விசாரித்த சில அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும், மூளைச்சலவை செய்து, அவர்களை நிரந்தரமாக எடப்பாடி அணியில் இருக்குமாறு பார்த்துக்கொண்டது யாரென்பதும் எங்களுக்கு தெரியும்.

ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப் போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது” என்று குறிப்பிட்டிருந்தார்.

தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களும் திவாகரன் கட்டுப்பாட்டில் இருப்பதைப் போன்ற பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பதில் அறிக்கை

இதையடுத்து, திவாகரனின் மகனான ஜெயானந்த் தான் நடத்திவரும் போஸ் மக்கள் பணியகத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

வெற்றிவேலுக்கு பதில் சொல்வதைப் போல அமைந்த அந்த அறிக்கையில், தானும் திவாகரனும் எல்லா மேடைகளிலும் டிடிவி தினகரனே முதல்வர் என்று பேசிவருவதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மேலும், அரசியலில் தினகரனுடன் பயணித்ததால்தான் கடந்த எட்டு மாத காலமாக பா.ஜ.க. வருமான வரித்துறை மூலமாக மிகுந்த இன்னல்களையும் இம்சைகளையும் கொடுத்தார்கள் என்றும் 72 மணி நேரம் தன்னுடைய வீட்டில் தங்கி, அடிக்க வருவதுபோல செய்து, அவர்கள் விரும்பியதை எழுதி வாக்குமூலம் வாங்க நினைத்தார்கள் என்றும் கூறியிருந்தார்.

தவிர, வெற்றிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையே அவருடையது அல்ல என்றும் வேறு ஒருவருடையதை அவர் வெளியிட்டுள்ளதாகவும் ஜெயானந்த் குற்றம்சாட்டியிருந்தார்.

_101041509_report2

இதையடுத்து திவாகரனுக்கும் தினகரனுக்கும் இடையில் வெளிப்படையாகவே மோதல் வெடித்தது.

கட்சி தொடங்கியதில் சம்மதமில்லை

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமையன்று பேசிய திவாகரன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் துவங்கியதில் சசிகலா உட்பட யாருக்கும் ஒப்புதல் இல்லை என்று தெரிவித்தார்.

இது அவருடைய குடும்பத்தினர் மட்டுமே சேர்ந்து எடுத்த முடிவு என்றும் தினகரனின் செயல்பாடுகள் தங்களுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லையென்றும் கூறினார்.

அண்ணா தி.மு.கவின் சுவடே இல்லாமல் கட்சியை நடத்த வேண்டுமென தினகரன் விரும்புவதாகவும் யாரும் எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என எதேச்சதிகார பாணியில் கட்சியை நடத்தவதாகவும் திவாகரன் குற்றம் சாட்டினார்.

தினகரன் இதற்கு முன்பாக ஜெயலலிதா, சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரை ஏமாற்றியவர் என்றும் தற்போது தொண்டர்களை ஏமாற்றிவருவதாகவும் திவாகரன் குற்றம்சாட்டினார்.

சசிகலா மீதான கோபத்தை…

திவாகரனின் சரமாரி குற்றச்சாட்டுகளையடுத்து, தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், “திவாகரன் குடும்பத்தில் மூத்தவர்.

அதற்கான மரியாதையை அவருக்கு கொடுப்பேன். அதற்காக கட்சி நடவடிக்கைகளில் அவர் தலையிட முடியாது.

அவரைவிட மூத்தவர்கள் எல்லாம் குடும்பத்தில் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்டும் கட்சியை நடத்த முடியுமா? சசிகலா மீதான கோபத்தை திவாகரன் என்னிடம் காட்டுகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும் சசிகலாவை திவாகரன் சிறையில் சென்று பார்ப்பதேயில்லையென்றும் குற்றம்சாட்டிய அவர், குடும்பத்தைவிட தனக்கு கட்சிதான் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் புதன்கிழமையன்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஜெயானந்த் திவாகரன் மேலும் சில கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

“எனது தந்தைக்கு பதவி ஆசை இருந்திருந்தால் டி.டி.வியுடன் ஒரு வருடத்திற்கு முன்பு சேர்ந்தே இருக்க மாட்டார். வந்தவரை அரவணைக்காமல் இருந்தால் கூட பரவாயில்லை. திட்டமிட்டு புறக்கணித்தால் அவர் எப்படி பொருத்திருப்பார்.

அவர் என்ன சிறுவனா?” என்றும் “சின்னம்மா மீது உள்ள களங்கத்தை டிடிவி தான் துடைத்தார் என கூறுவதை ஏற்று கொள்ள முடியாது.

சின்னம்மா மத்திய அரசாங்கத்திற்கு பணியாமல் சிறை சென்ற அனுதாபம், சின்னம்மாவின் பக்கபலம் மற்றும் அம்மா அவர்கள் சின்னாமாவை எடுக்க சொன்ன வீடியோ- இவை மூன்றும் தான் டிடிவி-யை கரைசேர்த்தன” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

_101041507_report

குடும்ப அரசியல் என்று பட்டம் கட்டி தங்களை கட்சியிலிருந்து துரத்த வெற்றிவேல் முயற்சிப்பதாகவும் ஜெயானந்த் குற்றம்சாட்டியிருக்கிறார்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வி.கே. சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்லும் தருணத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமியை முதல்வராக நியமித்ததோடு, டிடிவி தினகரனை கட்சியில் துணைப் பொதுச் செயலாளராகவும் ஆக்கினார்.

ஆனால், இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்கென தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டார் என்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு தினகரன் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரது கட்டுப்பாட்டில் இருந்த கட்சியை முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கைப்பற்றினார்.

இதற்குப் பிறகு நடந்த சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றிபெற்ற நிலையில் தற்போதும் சுமார் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இரட்டை இலையும் கட்சியின் பெயரும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கே சொந்தம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன்பாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்தார் தினகரன்.

இந்த நிலையில்தான், தானும் தன் குடும்பத்தினரும் ஒதுக்கப்படுவதாக திவாகரன் நினைக்க ஆரம்பித்தார்.

இதையடுத்து அவரது மகன் ஜெயந்த், போஸ் மக்கள் நல பணியகம் என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்ற பெயரில் கூட்டங்களை நடத்த ஆரம்பித்தார். திவாகரனும் மன்னார்குடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவைத் தனியாக நடத்தினார்.

_101041514_238a4090-00a1-4b29-ba95-fa638368e1f6

தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தற்போது சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த விவகாரம் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

என்ன உறவு?

திவாகரன், வி.கே. சசிகலாவின் சகோதரர். டிடிவி தினகரன் சசிகலாவின் அக்காள் வனிதாமணியின் மூத்த மகன். இவரது சகோதரர் சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக சிறிதுகாலம் இருந்தார்.

2011 டிசம்பரில் வி.கே. சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை ஜெயலலிதா விலக்கிவைத்ததோடு, அ.தி.மு.கவிலிருந்தும் நீக்கினார். பிறகு, சசிகலாவை மட்டும் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, டிடிவி தினகரனையும் அவரது மைத்துனர் வெங்கடேஷையும் கட்சியில் மீண்டும் சேர்த்தார் சசிகலா.

LEAVE A REPLY

*

WordPress spam blocked by CleanTalk.